Published : 22 Mar 2014 12:25 PM
Last Updated : 22 Mar 2014 12:25 PM

மியாமி மாஸ்டர்ஸ்: போராடி வென்றார் செரீனா

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் தரவரிசை அடிப்படையில் நேரடியாக 2-வது சுற்றில் விளையாட தகுதிபெற்ற செரீனா, அந்த சுற்றில் சர்வதேச தரவரிசையில் 51-வது இடத்தில் இருக்கும் கஜகஸ்தானின் யாரோஸ்லாவா ஸ்வேடோவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் யாரும் எதிர்பாராத வகையில் செரீனாவுக்கு இணையாக ஆடினார் யாரோஸ்லாவா. ஒரு கட்டத்தில் செரீனா 3-1 என்ற கணக்கில் இருந்தார். அதன்பிறகு அபாரமாக ஆடிய யாரோஸ்லாவா, செரீனாவின் சர்வீஸை முறியடித்து 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

இதனால் பின்னடைவை சந்தித்த செரீனா, கடும் போராட்டத்துக்குப் பிறகு யாரோஸ்லாவாவின் சர்வீஸை தகர்த்து சரிவிலிருந்து மீண்டார். இதனால் ஒரு கட்டத்தில் இருவரும் 5-5 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர். அடுத்த இரு கேம்களில் இருவரும் தங்களின் சர்வீஸை தக்கவைக்க, முதல் செட் டைபிரேக்கருக்கு சென்றது. அதிலும் யாரோஸ்லாவா கடும் சவால் அளித்தார். எனினும் விடாப்பிடியாக போராடிய செரீனா, டைபிரேக்கரை 9-7 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம் முதல் செட்டை 7-6 (7) என்ற கணக்கில் தன்வசமாக்கினார்.

பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் யாரோஸ்லாவா பதற்றமடைந்ததை சரியாகப் பயன்படுத்திய செரீனா அதை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

செரீனா தனது 3-வது சுற்றில் பிரான்ஸின் கரோலின் கார்ஸியாவை சந்திக்கிறார். கார்ஸியா தனது 2-வது சுற்றில் 7-6 (34), 7-6 (3) என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் கிளாரா ஸக்கோபலோவாவைத் தோற்கடித்தார்.

போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரஷியாவின் மரியா ஷரபோவா தனது 2-வது சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜப்பானின் குருமி நாராவை தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் 6-3, 1-6, 7-6 (5) என்ற செட் கணக்கில் சீனாவின் பெங் ஷுவாயை வீழ்த்தினார்.

2011 விம்பிள்டன் சாம்பியனான செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் பாவ்லா ஆர்மேச்சியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். செர்பியாவின் அனா இவானோவிச் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் லாரன் டேவிஸையும், ஜெர்மனியின் சபைன் லிசிக்கி 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் நடியா பெட்ரோவாவையும், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் கிக்கி பெர்ட்டன்ஸையும் தோற்கடித்தனர்.

ஹெவிட்டுக்கு 600-வது வெற்றி

ஆஸ்திரேலிய வீரர் லெய்டன் ஹெவிட் தனது முதல் சுற்றில் 2-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் தற்போது விளையாடி வரும் வீரர்களில் 600 வெற்றிகளைப் பதிவு செய்த 3-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஹெவிட். ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் (937), ஸ்பெயினின் ரஃபேல் நடால் (674) ஆகியோர் 600-க்கும் மேற்பட்ட வெற்றிகளைக் குவித்த மற்ற வீரர்கள்.

மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் பெர்னாட் டாமிக் 0-6, 1-6 என்ற நேர் செட்களில் ஃபின்லாந்தின் ஜார்க்கோ நிமினியனிடம் தோல்வி கண்டார். இதுதான் ஏடிபி வரலாற்றில் மிகக்குறைந்த நிமிடங்களில் முடிவடைந்த போட்டி.

சானியா ஜோடி முன்னேற்றம், பயஸ் ஜோடி அவுட்

மகளிர் இரட்டையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி தங்களின் முதல் சுற்றில் 6-3, 6-7 (8), 10-8 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஹாவ் சிங் சான்-யங் ஜன் சான் ஜோடியைத் தோற்கடித்தது. சானியா ஜோடி தங்களின் 2-வது சுற்றில் ஜார்ஜியாவின் அக்ஸானா கேலாஷின்கோவா-ரஷியாவின் அலிசா கிளெய்பனோவா ஜோடியை சந்திக்கிறது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி தங்களின் முதல் சுற்றில் 3-6, 6-7 (7) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் எரிக் பியூட்டோரக்-ரேவன் கிளாசன் ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

பயஸ்-ஸ்டெபானெக் ஜோடி இந்த ஆண்டில் விளையாடிய 5 போட்டிகளில் 3-வது முறையாக முதல் சுற்றோடு வெளியேறியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x