Last Updated : 18 Jan, 2017 09:55 AM

 

Published : 18 Jan 2017 09:55 AM
Last Updated : 18 Jan 2017 09:55 AM

புனே கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக சதம் அடித்தது எப்படி?- கேதார் ஜாதவ் விளக்கம்

புனேயில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக ஆடி சதம் விளாசியது எப்படி என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 120 ரன்களைக் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு கேதார் ஜாதவ் உதவினார். இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நாயகனாக கேதார் ஜாதவ் உருவெடுத்தார். இந்நிலையில் புனேவில் நேற்று நிருபர்களிடம் கேதார் ஜாதவ் கூறியதாவது:

விராட் கோலியுடன் சேர்ந்து நாம் பேட்டிங் செய்யும்போது நிறைய ரன்களைக் குவிக்க முடியும். காரணம் நாம் அவருடன் பேட்டிங் செய்யும்போது, எதிரணி வீரர்களின் கவனம் முழுவதும் கோலியை அவுட் ஆக்குவதிலேயே இருக்கும். அதைப் பயன்படுத்தி அவருக்கு ஜோடி சேர்ந்து விளையாடும் நாம் அதிக ரன்களைக் குவிக்கலாம். புனே நகரில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் இது எனக்கு மிகவும் உதவியது.

குழந்தைப் பருவம் முதல் நான் டென்னிஸ் பந்தில் பல கிரிக்கெட் போட்டிகளை ஆடியுள்ளேன். அப்படி நான் கலந்துகொண்ட ஒரு தொடரில் பந்துவீச்சாளருக்கு நேராக சிக்சர் அடித்தால் மட்டுமே அது சிக்சராக கருதப்படும். வேறு திசைகளில் சிக்சர் அடித்தால் பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுத்து விடுவார்கள். இந்த தொடரின் மூலம் பந்துவீச்சாளருக்கு நேராக ஆக்ரோஷமான ஷாட்களை அடிக்க கற்றுக்கொண்டேன். மேலும் புனேயில் நான் பேட்டிங் செய்ய வந்தபோது பீல்டர்கள் பேட்ஸ்மேனுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தனர். பந்துகளை தூக்கியடிக்க அதுவும் என்னைத் தூண்டியது. புனே கிரிக்கெட் மைதானமும் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது எனக்கு உதவியது.

2 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய ஏ அணியில் நான் இடம்பெற்றிருந்தேன். அந்த தொடரில் நான் சிறப்பாக பேட்டிங் செய்தேன். ஆனால் கையில் வலி இருந்துகொண்டிருந்தது. தொடரை முடித்து இந்தியா திரும்பிய பிறகுதான் என் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததை மருத்துவ சோதனை மூலம் அறிந்தேன். எலும்பு முறிவுடன் ஆடும்போதே நிறைய ரன்களைக் குவித்த நிலையில், சாதாரண நிலையில் என்னால் இன்னும் சிறப்பாக ஆடமுடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டது. இந்திய அணிக்காக ஆடும்போது ஒவ்வொரு முறையும் 100 சதவீத ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்பதே என் லட்சியம்.

இவ்வாறு கேதார் ஜாதவ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x