Last Updated : 01 Aug, 2015 10:07 AM

 

Published : 01 Aug 2015 10:07 AM
Last Updated : 01 Aug 2015 10:07 AM

பிஃபா தேர்தல்: ஸிகோவுக்கு பிரேசில் ஆதரவு

சர்வதேச கால்பந்து சம்மேளன (பிஃபா) தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி நடக்கிறது. அதில் போட்டியிடுவதற்கு பிரேசிலைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரான ஸிகோவுக்கு அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.

62 வயதான ஸிகோவுக்கு இதற்கு முன்னர் பிரேசில் கால்பந்து சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் ஆதரவு பெரிய அளவில் இருந்ததில்லை. ஆனால் இப்போது முழுமையான ஆதரவு கிடைத்திருப்பது ஸிகோவுக்கு பெரிய உத்வேகம் கொடுப்பதாக அமைந்துள்ளது.

பிரேசில் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மேலும் 4 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து சங்கங்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே பிஃபா தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஸிகோ களமிறங்க முடியும். அதனால் இன்னும் 4 நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் ஸிகோ தீவிரமாக உள்ளார்.

ஜப்பான், ஈராக் உள்ளிட் சர்வதேச அணிகளுக்கும், இந்தியாவில் கிளப் அளவிலான போட்டிகளில் கோவா அணிக்கும் ஸிகோ பயிற்சியளித்துள்ளார். ஆனால் சர்வதேச கால்பந்து சம்மேளன நிர்வாகத்தில் அவர் எந்தப் பதவியிலும் இருந்ததில்லை.

பிஃபா தலைவர் தேர்தல் குறித்து ஸிகோ கூறுகையில், “பிரேசில் ஆதரவு தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பிஃபா தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தொடக்கமாகவே இதைப் பார்க்கிறேன்” என்றார்.

பிஃபாவில் நிகழ்ந்த பெரும் ஊழல் காரணமாக 5-வது முறையாக தலைவராக தேர்நதெடுக்கப்பட்ட அடுத்த சில தினங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார் செப் பிளேட்டர். அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவராக இருக்கும் மைக்கேல் பிளாட்டினி, பிஃபா தலைவர் தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் ஸிகோவுக்கு பிரேசில் ஆதரவு தெரிவித்துள்ளதால் அவரும் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x