Published : 23 Jan 2015 02:51 PM
Last Updated : 23 Jan 2015 02:51 PM

நியூசி. விக்கெட் கீப்பர் லூக் ரோஞ்சி 99 பந்துகளில் 170 ரன்கள்; இலங்கை படுதோல்வி

டுனெடின் மைதானத்தில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் லூக் ரோஞ்சி 99 பந்துகளில் 170 ரன்களை விளாச, அந்த அணி இலங்கையை 108 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதன் மூலம் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 3-1 என்று முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திரிமன்ன (மேத்யூஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை) நியூசி.யை பேட் செய்ய அழைக்க அந்த அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 360 ரன்கள் விளாசித்தள்ளியது. தொடர்ந்து ஆடிய இலங்கையில் தில்ஷன் 116 ரன்கள் எடுத்தாலும், 43.4 ஓவர்களில் 252 ரன்களுக்குச் சுருண்டது.

நியூசிலாந்து இன்னிங்சில் கப்தில், குலசேகரா வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மெக்கல்லம், வில்லியம்சன் 2-வது விக்கெட்டுக்காக 51 ரன்களைச் சேர்த்தனர். மெக்கல்லம் 37 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து குலசேகராவிடம் எல்.பி.ஆனார். வில்லியம்சன் 26 ரன்களிலும், டெய்லர் 20 ரன்களிலும், கோரி ஆண்டர்சன் 8 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற அந்த அணி 93/5 என்று 20-வது ஓவர் முடிவில் தத்தளித்தது.

கிராண்ட் எலியட், லூக் ரோஞ்சி ஜோடி சேர்ந்து உலக சாதனை:

93/5 என்ற நிலையில் கிராண்ட் எலியட்டுடன் விக்கெட் கீப்பர் லூக் ரோஞ்சி சேர்ந்தார். முதலில் ஒரு எதிர்த்தாக்குதலாகத் தொடங்கியது பிறகு பயங்கர ரன்குவிப்பாக மாறும் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. லூக் ரோஞ்சி, இவர் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியவர், தற்போது நியூசிலாந்துக்கு ஆடி வருகிறார். அவர் 99 பந்துகளில் 170 ரன்களை விளாச, கிராண்ட் எலியட் 96 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்து இருவருமே நாட் அவுட்டாகத் திகழ 6-வது விக்கெட்டுக்காக இவர்கள் இருவரும் சேர்த்த 267 ரன்கள், இந்த விக்கெட்டுக்காகச் சேர்க்கப்பட்ட உலக சாதனை ரன்களாகும்.

தன் முதல் சதத்தை 74 பந்துகளில் எடுத்த ரோஞ்சி அடுத்த 25 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். ஃபுல்லாக போட்டாலும் ஷாட்டாக போட்டாலும் லெந்த்தில் போட்டாலும் அனைத்தையும் பவுண்டரிக்கு விரட்டினார் ரோஞ்சி. இவ்வாறாக அவர் 14 பவுண்டரிகள் 9 சிக்சர்களை அடித்தார்.

30-வது ஓவரில் ஸ்கோர் 162/5, 35-வது ஓவரின் முடிவில் 196/5. அப்போது ரோஞ்சி 61 ரன்களையும், எலியட் 50 ரன்களையும் எடுத்திருந்தனர். 40-வது ஓவர் முடிவில் 238/5. ரோஞ்சி 95 ரன்களிலும் கிராண்ட் எலியட் 58 ரன்களிலும் இருந்தனர். கடைசி 10 ஓவர்களில் 122 ரன்கள் விளாசப்பட்டுள்ளது.

சுரங்க லக்மல் அதிகபட்சமாக 10 ஓவர்களில் 93 ரன்கள் விட்டுக் கொடுத்தார். சேனநாயக 7 ஓவர்களில் 58 ரன்கள் விட்டுக் கொடுத்தார். குலசேகரா 71 ரன்களைக் கொடுக்க பெரெரா மட்டுமே 10 ஓவர்களில் 49 ரன்கள் என்று சிக்கனம் காட்டினார்.

நியூசிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்தது. இலங்கை பந்துவீச்சு மோசமாக இருந்ததும் இந்த அதிரடிக்குக் காரணமாக இருந்தது.

தில்ஷன் சதம் வீண்:

தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் தில்ஷன் (116), திரிமன்ன, உத்வேகமான தொடக்கம் கொடுத்து முதல் விக்கெட்டுக்காக 93 ரன்கள் சேர்த்தனர். திரிமன்ன 45 ரன்கள் எடுத்தார். ஆனால் சங்கக்காரா, ஜெயவர்தனே (30) என்று அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 141/1 என்று 26-வது ஓவர் முடிவில் இருந்த இலங்கை அடுத்த 9 விக்கெட்டுகளை 111 ரன்களுக்குப் பறிகொடுத்தது. குறிப்பாக 211/2 என்ற நிலையில் அடுத்த 8 விக்கெட்டுகளை 41 ரன்களுக்கு இழந்தது.

டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலங்கை 43.4 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆட்ட நாயகர்களாக ரோஞ்சி, எலியட் இருவருமே தேர்வு செய்யப்பட்டனர். காரணம் எலியட் சதம் எடுத்ததோடு பவுலிங்கிலும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x