Last Updated : 01 Aug, 2015 05:33 PM

 

Published : 01 Aug 2015 05:33 PM
Last Updated : 01 Aug 2015 05:33 PM

நான் எப்போதுமே பொறுப்புடன்தான் ஆடிவருகிறேன்: விராட் கோலி

ஆஸ்திரேலியாவில் 4 சதங்கள், உலகக்கோப்பையில் 1 சதம் ஆகியவற்றுக்குப் பிறகு பெரிதாக சோபிக்காத விராட் கோலி, அது பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ‘நான் எப்பவும் பொறுப்புடனேயே ஆடிவந்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

பிசிசிஐ டிவி இணையதளத்தில் அவர் இதுபற்றி கூறியிருப்பதாவது: “ஒரு பேட்ஸ்மெனாக நான் எப்போதும் பொறுப்புடனேயே ஆடியிருக்கிறேன், அதாவது கிரிக்கெட் ஆட்டத்தை நான் ஆடும் விதத்தில் பொறுப்புடனேயே அணுகியிருக்கிறேன். இது எங்கிருந்து வருகிறது என்றால், ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து வருகிறது, எனவே ஆக்ரோஷம் என்ற விதத்தில் பெரிய அளவுக்கு நான் என்னை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை என்றே படுகிறது. இதனால் கிரிக்கெட் வாரியமே என்னை இந்தப் பொறுப்புக்கு தகுதியானவன் என்று முடிவெடுத்துள்ளது.

இந்தக் கேள்விகளெல்லாம் எங்கு வருகிறது எனில், நாம் கிரிக்கெட்டை எப்படி ஆடுகிறோம் என்பதிலிருந்து வருகிறது. பேட்டிங், பீல்டிங் எதுவாக இருந்தாலும் களத்தில் 100% பங்களிப்பு செய்ய வேண்டும் என்று விரும்புபவன் நான். பேட்டிங்கில் கூடுதல் முயற்சியை இட வேண்டியதில்லை. ஏனெனில் அணிக்காக நான் எப்போதும் பொறுப்புடனேயே ஆடிவருகிறேன். நாட்டுக்காக நான் ஆடும்வரை இந்தப் பொறுப்புணர்ச்சி மறையாது.

இலங்கை தொடர் பற்றி...

டெஸ்ட் கேப்டனாக ஒரு முழு தொடர் இப்போது கிடைத்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டிதான், எனவே முழு தொடராக இதுவே எனது கேப்டன்சிக்கு கிடைத்துள்ள முதல் சவால். நாங்கள் இளம் அணியினர், நிறைய வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்வை தொடர்ந்து சிறப்பாகக் கொண்டு செல்ல ஆயத்தமாக உள்ளனர்.

எனக்கும் அணியினருக்கும் இலங்கை தொடர் உற்சாகமூட்டுகிறது. நன்றாகத் தயாரிப்பு செய்து கொண்டு, சரியான பார்வையும் அணுகுமுறையும் இருந்தால் இலங்கையில் சிறப்பாக விளையாட முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். ஒட்டுமொத்த அணி மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனவே பிசிசிஐ கொடுத்த பணியை செவ்வனே நிறைவேற்றுவேன் என்றே நினைக்கிறேன்.

ராகுல் திராவிட் மேற்பார்வையில் விளையாடியது பற்றி...

ராகுல் திராவிட் போன்ற பெரிய வீரர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது எப்பவுமே பயனளிக்கக் கூடியது. அவரைப் போன்றவர்கள் அருகில் இருந்தாலே போதும், கிரிக்கெட்டை பற்றி நாம் எதுவும் பேசத் தேவையில்லை. அவர்கள் இருப்பே, நம் கிரிக்கெட்டை கவனித்துக் கொள்ளும். அவருடன் கிரிக்கெட் பற்றி பேசுவதும், பொதுவாக எதைப்பற்றிப் பேசுவதும் நமக்கு நல்லுணர்வை ஏற்படுத்துவதாகும்.

எனவே இலங்கைத் தொடருக்கு முன்பாக அவரது பார்வையில் ஆடுவது பயனளிக்கும் என்றே இந்தியா ஏ அணியில் ஆடினேன்.

முரளி விஜய், ரஹானே பற்றி...

சேவாக், கம்பீர் ஆகியோருக்குப் பிறகே முரளி விஜய் அணிக்கு நிலைத்தன்மையை தொடக்கத்தில் அளித்து வருகிறார். அவர் மனதளவில் வலுவான வீரர். பொறுமை அவரது பலம். அவர் ஆட்டம் பற்றி அவருக்கு நிறைய உறுதிகள் உண்டு.

ரஹானேயை ஒரு பேட்ஸ்மெனாகவும், பீல்டராகவும் எனக்கு பிடித்துள்ளது. அணிக்காக எதையும் செய்யத் தயாரானவர் ரஹானே. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பாகச் செயல்படுவதற்கு ரஹானே மிக முக்கியமான வீரர் என்று நான் கருதுகிறேன்” என்றார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x