Published : 01 Jan 2017 12:35 PM
Last Updated : 01 Jan 2017 12:35 PM

சென்னை ஓபன் போட்டி நாளை தொடக்கம்: மரின் சிலிச், ராபர்ட்டோ அகுட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்பு

தமிழக அரசின் ஆதரவுடன் 22-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. தெற்காசியாவின் ஒரே ஏடிபி தொடரான இந்த போட்டி வரும் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் முன்னணி வீரர்களில் குரோஷியாவின் மரின் சிலிச் அதிகபட்ச தரவரிசையைக் கொண்டுள்ளார். அவர் தற்போது 6-வது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஸ்பெயினின் ராபர்ட்டோ அகட் 14-வது இடத்திலும், மற்றொரு ஸ்பெயின் வீரரான ஆல்பர்ட் ரமோஸ் 27-வது இடத்திலும் உள்ளனர்.

ராப்ரீடோ விலகல்

ஸ்லோவேகியாவின் மார்ட்டின் கிளிஸான் 35-வது இடத்திலும், குரோஷியாவின் போர்னா கோரிச் 48-வது இடத்திலும் உள்ளனர். இந்த முறை தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் 6 பேர் பங்கேற்பதால் போட்டி கடும் சவாலாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை ஓபனில் களமிறங்க இருந்த ஸ்பெயினின் ராப்ரீடோ காயம் காரணமாக விலகி உள்ளார். இதன் காரணமாக தகுதி சுற்றில் விளையாட இருந்த 101-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் அல் ஜாஸ் பெடேன் நேரடியாக பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றார். பெடேன் 2015-ம் ஆண்டு சென்னை ஓபனில் இறுதி போட்டி வரை முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகைல் யூஸ்னி

தரவரிசையில் 57-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் மிகைல் யூஸ்னி மீண்டும் களமிறங்குகிறார். அவர் 2008-ல் நடைபெற்ற சென்னை ஓபன் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். யூஸ்னி, கடைசியாக இங்கு விளையாடி யபோது காயம் காரணமாக 2-வது சுற்றோடு வெளியேறினார்.

கடந்த சில மாதங்களாக மிக அபாரமாக விளையாடி வரும் யூஸ்னி, அனைத்துவிதமான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் முர்ரே, ஜோகோவிச், பெடரர், நடால் ஆகியோரைப் போன்று தொடர்ச்சியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ராம்குமார்

இதேபோல் சமீபத்திய ஆண்டுகளில் சிறந்த வளர்ச்சி கண்டுள்ள பிரான்ஸின் பெனாய்ட் பேர், மால்டோவாவின் ராடு அல்பாட் ஆகியோரும் கலக்கக் காத்திருக்கிறார்கள். இவர்களில் பெனாய்ட் பேர், கடந்த சில ஆண்டுகளாக சென்னை ஓபனில் பங்கேற்று வருகிறார். இவர் 2013-ல் வாவ்ரிங்காவுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பெனாய்ட் பேரின் ஸ்டைலை ரசிப்பதற்கென்றே சென்னையில் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்தியாவின் சார்பில் ராம்குமார் ராமநாதனுக்கு வைல்ட்கார்டு வழங் கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக உருவெடுத்த ராம் குமார், அதே ஆண்டு நடைபெற்ற சென்னை ஓபனில் இந்தியாவின் அப்போதைய முன்னணி வீரரான சோம்தேவுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.

கடந்த ஆண்டு சென்னை ஓபனில் கால் இறுதி வரை முன்னேறியிருந்தார். தேசிய சாம்பியனான ராம்குமார், டேவிஸ் கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

தற்போது இந்தியாவின் இரண் டாம் நிலை வீரராக உள்ளார். இந்தியாவின் மற்றொரு முன்னணி வீரரான சாகேத் மைனேனி மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த 18 வயதான இளம் வீரரான காஸ்பர் ரூடுக்கும் வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது.

மைனேனிக்கு சவால்

சீசனின் முதல் போட்டியான சென்னை ஓபனில் ஆர்ஜென்டினா, பெல்ஜியம், பிரான்ஸ், தைபே, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்கிறார் கள். இதற்கிடையே போட்டி அட்ட வணை நேற்று வெளியிடப்பட்டது.

இதில் போட்டி தரவரிசையின் முதல் நிலை வீரரான குரோஷியா வின் மரின் சிலிச், 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்ட்டோ அகுட், 3-ம் நிலை வீரரான ஆல்பர்ட் ரமோஸ், 4-ம் நிலை வீரரான ஸ்லோவேகியாவின் மார்ட்டின் கிளிஸான் ஆகியோர் நேரடியாக 2-வது சுற்றில் களமிறங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், தகுதி சுற்றில் வெற்றி பெறும் வீரருடன் முதல் சுற்றில் மோதுகிறார். மாறாக சாகேத் மைனேனி, தரவரிசையில் 57-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் முன்னணி வீரரான மிகைல் யூஸ்னியை சந்திக்கிறார். இந்த ஆட்டம் மைனேனிக்கு கடும் சவால் நிறைந்ததாகவே இருக்கும்.

மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் போர்னா கோரிச் (குரேஷியா) - தகுதி சுற்று வீரர், பெனோயிட் பேர் (பிரான்ஸ்) - கான்ஸ்டான்டின் கிராவ்சுக் (ரஷ்யா), அல்ஜாஸ் பெடேன் (இங்கிலாந்து) - கார்ஸியா லோபஸ் (ஸ்பெயின்), காஸ்பர் ரூடு (நார்வே) - ஆலிவோ ரென்ஸோ (அர்ஜென்டினா), டுசன் லஜோவிக் (செர்பியா) - ரோஜெரியோ டுட்ரா சில்வா (பிரேசில்), டூடி செலா (இஸ்ரேல்) - டமிர் தும்ஹுர் (போஸ்னியா & ஹெர்ஸிகோவினா), ஸ்டீவ் டார்சிஸ் (பெல்ஜியம்) - தகுதி சுற்று வீரர், ராடு அல்பாட் (மால்டோவா) - யென் சன் லூ (தைவான்), கேஸ்டோ எலியாஸ் (போர்ச்சுகல்) - தகுதி சுற்று வீரர், தியாகோ மான்டீரோ (பிரேசில்) - டேனில் மெத்வதேவ் (ரஷ்யா) ஆகியோர் மோதுகின்றனர்.

இரட்டையர் பிரிவு

இந்தப் போட்டியின் இரட்டையர் பிரிவில் சாகேத் மைனேனி-ராம் குமார், ராம் பாலாஜி-விஷ்ணுவர் தன் ஜோடிகள் தவிர, இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன், பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடிகளும் பங்கேற்கின்றன. இந்த ஜோடிகள் தரவரிசை அடிப்படையில் நேரடித் தகுதி பெற்றுள்ளன.

இதுதவிர லியாண்டர் பயஸும் களமிறங்குகிறார். 7 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவரும், 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவருமான பயஸ், பிரேசிலின் ஆண்ட்ரே சாவுடன் இணைந்து கள மிறங்குகிறார். இரட்டையர் பிரிவு போட்டித் தரவரிசையில் இஸ்ரே லின் ஜொனாதன் எர்லிச்-அமெரிக் காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா-ஜீவன் நெடுஞ் செழியன் ஜோடி தங்களது முதல் சுற்றில் பிரேசிலின் மார்செலோ டெமோலைனர் - குரேஷியாவின் நிக்கோலா மெக்டிக் ஜோடியுடனும் சாகேத் மைனேனி - ராம்குமார் ஜோடி பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸ் - பிரான்சின் பெனோயிட் பேர் ஜோடியுடனும் மோதுகின்றன.

பூரவ் ராஜா - திவிஜ் சரண் ஜோடி தங்களது முதல் சுற்றில் அனுபவம் வாய்ந்த லியாண்டர் பயஸ் - ஆண்ட்ரே சா ஜோடியை எதிர்கொள்கிறது. ஸ்ரீராம் பாலாஜி-விஷ்ணுவர்தன் ஜோடி நெதர்லாந்தின் வெஸ்லே கூல் ஹோப், மேட்வி மிடில்கூப் ஜோடியு டன் பலப்பரீட்சை நடத்துகிறது.

யூகி பாம்ப்ரி, குணேஷ்வரன் அசத்தல்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் பிரதான சுற்றுக்கு 28 வீரர்கள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில் மீதமுள்ள 4 இடங்களை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

இதன் ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் மார்கோ செஷனிடோவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் சுமார் 1 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் குணேஷ்வரன் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் ஜப்பானின் ஹிரோகி மோரியாவை தோற்கடித்தார். அதேவேளையில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் 7-6, 3-6, 5-7 என்ற செட் கணக்கில் சுமார் 2 மணி நேரம் 19 நிமிடங்கள் போராடி அர்ஜென்டினாவின் நிக்கோலஸ் ஹிக்கெரிடம் தோல்வியடைந்தார்.

இன்று நடைபெறும் 2-வது சுற்றில் யூகி பாம்ப்ரி, நிக்கோலஸ் ஹிக்கெரையும், குணேஷ்வரன், ஸ்லோவேகியாவின் கோவலிக்கையும் எதிர்த்து விளையாடுகின்றனர். இதில் வெற்றி பெறும் வீரர்கள் பிராதான சுற்றில் நுழைவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x