Published : 29 Nov 2014 10:49 AM
Last Updated : 29 Nov 2014 10:49 AM

சென்னை ஓபன் டென்னிஸ்: இந்தியாவின் சோம்தேவ், ராம்குமாருக்கு வைல்ட்கார்டு

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர்களான சோம்தேவ் (தரவரிசை 135), ராம்குமார் ராமநாதன் (215) ஆகியோருக்கு சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் வைல்ட்கார்டு வழங்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டியான 20-வது ஏர்செல்-சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் ஜனவரி 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற வுள்ளது.

இதில் நடப்பு சாம்பியன் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா இந்த முறையும் கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளார். 2013 சாம்பியனான செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச்சுக்கு வைல்ட்கார்டு வழங்கப்பட்டுள் ளது. நீண்ட நாட்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த டிப்சரேவிச் சென்னை ஓபனில் இருந்து 2015 சீசனை தொடங்குகிறார்.

சென்னை போட்டிக்கு நேரடித் தகுதிபெறுவதற்கு சர்வதேச தரவரிசையில் முதல் 95 இடங்களுக்குள் உள்ள வீரர்களே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளனர். அதன்படி இந்திய வீரர்கள் யாரும் நேரடித் தகுதி பெறவில்லை. ஒற்றையர் பிரிவில் 3 வைல்ட்கார்ட் வீரர்கள், 4 தகுதிச்சுற்று வீரர்கள் உள்பட மொத்தம் 28 பேர் பங்கேற் கின்றனர். மொத்த பரிசுத் தொகை ரூ.2.79 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு ரூ.45 லட்சம் ரொக்கப் பரிசும், 250 ஏடிபி புள்ளிகளும் கிடைக்கும்.

இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் எம்.ஏ.அழகப்பன், “தரவரிசை அடிப்படையில் 3 வீரர்களுக்கு வைல்ட்கார்டு வழங்கப்பட்டுள்ளன. இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகள் கலந்துகொள்கின்றன. இதில் 10 ஜோடிகள் டிசம்பர் இறுதிக்குள் இறுதி செய்யப்படும். இரண்டு ஜோடிகளுக்கு வைல்ட்கார்ட் வழங்கப்படும்.

சென்னை ஓபனில் பங்கேற்பதை உறுதி செய்துள்ள வீரர்கள் விவரம் (வீரர்கள் சார்ந்த நாடு மற்றும் தரவரிசை அடைப்புக்குறிக்குள்):

ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா (ஸ்விட்சர்லாந்து, 4),
ஃபெலிஸியானோ லோபஸ் (ஸ்பெயின், 14),
ராபர்ட்டோ பவுதிஸ்டா அகட் (ஸ்பெயின், 15),
டேவிட் கோஃபின் (பெல்ஜியம், 22),
கில்லர்மோ கிரேஸியா லோபஸ் (ஸ்பெயின், 36),
யென் சன் லூ (சீன தைபே, 38),
மார்செல் கிரானோலர்ஸ் (ஸ்பெயின் 46),
ஜில்ஸ் முல்லர் (லக்ஸம்பர்க், 47),
பாப்லோ கரனோ பஸ்டா (ஸ்பெயின், 51),
ஜிரி வெஸ்லே (செக்.குடியரசு, 66),
பீட்டர் கோஜோவ்ஸிக் (ஜெர்மனி, 79),
ஆண்ட்ரியாஸ் ஹைடர் (ஆஸ்திரியா, 82),
ராபின் ஹேஸி (நெதர்லாந்து, 83),
இகர் சிஸ்லிங் (நெதர்லாந்து, 84),
ரிகார்டஸ் பெரன்கிஸ் (லிதுவேனியா, 86),
எட்வர்ட் ரோஜர் வேஸ்லின் (பிரான்ஸ், 87),
அலிஜான்ட்ரோ ஃபல்லா (கொலம்பியா, 88),
போர்னா கோரிக் (குரேஷியா, 91),
அலிஜான்ட்ரோ கொன்ஸாலெஸ் (கொலம்பியா, 92),
டாட்சுமா இட்டோ (ஜப்பான், 94),
லூகாஸ் லேக்கோ (ஸ்லோவேகியா, 95).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x