Published : 03 Jul 2017 03:25 PM
Last Updated : 03 Jul 2017 03:25 PM

சீர்த்திருத்தங்களை செய்யவில்லையெனில் கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்: பிசிசிஐ-க்கு அருண் ஜேட்லி அறிவுரை

லோதா கமிட்டி பரிந்துரைகளை பிசிசிஐ தானாகவே நடைமுறைப் படுத்தாததால் உச்ச நீதிமன்றம் கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டியை நியமித்தது, ஆனாலும் பிசிசிஐ சீருத்திருத்தங்களை மேற்கொள்ளாமல் போக்கு காட்டி வருவதை அடுத்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி பிசிசிஐ-யை கடுமையாக எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முக்கியமான, இக்கட்டான புள்ளிகள் குறித்து விவாதிக்க பிசிசிஐ சிறப்புக் குழு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்தது. ஜேட்லியும் தன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அப்போது முக்கியமான 3-4 உத்தரவுகளில் உள்ள கடினப்பாடுகளையும் அதனை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் உண்மையான சிக்கல்களையும் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் மறுபரிசீலனைக் கோரிக்கைக்கு எடுத்துச் செல்ல வேண்டும், ஏகப்பட்ட உத்தரவுகளில் சிக்கல் உள்ளதாக கொண்டு சென்றால் அனைத்தையுமே உச்ச நீதிமன்றம் ஏற்காத சூழலே ஏற்படும் என்றும் பிசிசிஐ தற்போதைய எதிர்ப்புப் போக்கினை கையாண்டால் அதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என்றும் அருண் ஜேட்லி சிறப்புக் குழுவுக்கு எச்சரிக்கை மணி ஒலித்துள்ளார்.

“3 அல்லது 4 பரிந்துரைகளை மட்டும் உச்ச நீதிமன்ற மறுபரிசீலனைக்கு எடுத்துச் செல்வது உசிதம், உடன்படாத விஷயங்கள் நிறைய இருந்தால் எதையுமே உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யாமல் போகலாம்” என்று அருண் ஜேட்லி கூறியதாக பிசிசிஐக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

அதாவது ஒரு மாநிலம் ஒருவாக்கு, 3 நபர் தேர்வுக்குழு, ஒவ்வொரு பதவிக்காலம் முடிந்த பிறகும் அடுத்தப் பதவியை ஏற்கும் முன் 3 ஆண்டுகால இடைவெளி ஆகிய 3 விஷயங்களும்தான் மறுபரிசீலனைக்கு வைக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

ஜேட்லி நாட்டின் நிதியமைச்சர் மட்டுமல்லாது, நீதிமன்ற நடைமுறைகளைக் கரைத்துக் குடித்த வழக்கறிஞரும் கூட என்பதால் நீதிமன்றம் மறுபரிசீலனை கோரிக்கையை எப்படி அணுகும் என்பதை அறிந்தவர், ஆகவே அவரை ஆலோசனை செய்ததாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x