Last Updated : 08 Nov, 2016 02:00 PM

 

Published : 08 Nov 2016 02:00 PM
Last Updated : 08 Nov 2016 02:00 PM

சிக்கலில் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட்? - நிதிப் பரிமாற்ற தடையை நீக்க உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ அவசர மனு

ராஜ்கோட்டில் நாளை டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டுமெனில் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி விநியோகம் செய்வதற்கு இருந்த தடையை நீக்குமாறு உச்ச நீதிமன்றத்தை பிசிசிஐ அவசரமாக அணுகியுள்ளது.

நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, மற்றும் ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய அமர்வு, இந்த இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குரிடம் உணவு இடைவேளையின் போது விவாதிப்பதாகவும் பிறகு தலைமை நீதிபதி இந்த மனுவை எப்போது விசாரிக்கலாம் என்ற முடிவை எடுப்பார் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து 2 மணிக்கு தகவல் அளிக்கப்படும் என்று நீதிபதி தவே தெரிவித்துள்ளார்.

மாநில கிரிக்கெட் வாரியங்கள் லோதா கமிட்டி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதான உறுதி்மொழியை இன்னமும் அளிக்கவில்லை என்ற காரணத்தினால் மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ நிதி அளிப்பதை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் கூறும்போது, “டெஸ்ட் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிதி விநியோகம் செய்ய முடியாது, காரணம் மாநில கிரிக்கெட் வாரியங்கள் லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான உறுதிமொழியை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ஆனால் இதுவரை மாநில கிரிக்கெட் வாரியங்கள் அதனை அளிக்கவில்லை.” என்றார்.

பணப் பரிமாற்றத்திற்கான தடையை நீக்கவில்லை எனில் நாளை டெஸ்ட் போட்டி நடைபெறுவது கடினம் என்று நீதிபதி தவேயிடம் அவர் முறையிட அவர் சாத்தியங்களை தலைமை நீதிபதியிடம் விவாதித்து நாளை இந்த மனுவை விசாரிப்பதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதை தெரிவிப்பதாகக் கூறினார்.

லோதா குழுவை பிரதிநித்துவம் செய்யும் வழக்கறிஞர் கூறும்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படியாத பிசிசிஐ நீதிமன்ற அவதூறு செய்துள்ளது என்றார்.

இதற்கு எதிர்வாதம் புரிந்த கபில் சிபல், “நீங்கள் அவதூறு குறித்து ஆகவேண்டியதைச் செய்யுங்கள் ஆனால் போட்டிகளை நிறுத்த முடியாது, மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பண விநியோகம் என்பது இந்தியா-இங்கிலாந்து தொடரை நடத்த மிக முக்கியமானது” என்றார்.

இதனையடுத்து மதியம் 2 மணிக்கு இந்த விவகாரம் குறித்து தெரிவிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x