Published : 30 Dec 2016 06:46 PM
Last Updated : 30 Dec 2016 06:46 PM

இலங்கை தோல்வி: 206 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 206 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்களும், இலங்கை அணி 205 ரன்களும் எடுத்தன. 81 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 90.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 406 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

ஸ்டீபன் குக் 117, டீன் எல்கர் 52, குயிண்டன் டி காக் 69, கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் 67 ரன்கள் சேர்த்தனர். இதைடுத்து 488 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 83 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது.

கருணாரத்னே 43, சில்வா 48, பெரேரா 6, மெண்டிஸ் 48, சந்திமால் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். மேத்யூஸ் 58, டி சில்வா 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 5 விக்கெட்கள் இருந்த நிலையில் வெற்றிக்கு மேலும் 248 ரன்கள் தேவை என்ற நிலையில் இலங்கை அணி வெள்ளியன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது.

மேத்யூஸ் 59, டி சில்வா 22 ரன்கள் எடுத்த நிலையில் கைல் அபோட் பந்தில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரங்கனா ஹெராத் 3, ஷமீரா 0, நூவன் பிரதீப் 4 ரன்களில் நடையை கட்ட இலங்கை அணி 96.3 ஓவர்களில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

சுரங்கா லக்மல் 19 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா, மகாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், கைல் அபோட் 2 விக்கெட்களும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக ஸ்டீபன் குக் தேர்வானார்.

தென் ஆப்பிரிக்காவில் இலங்கை அணி இதோடு 11 டெஸ்ட் போட்டிகளில் 9-வது தோல்வியைச் சந்தித்துள்ளது.

206 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் வரும் 2-ம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x