Published : 23 Jan 2015 07:06 PM
Last Updated : 23 Jan 2015 07:06 PM

இறுதியில் ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் சதம் வென்றது; இயன் பெல் சதம் தோற்றது

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம் 3 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஹோபார்ட்டில் நடைபெற்ற இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதத்துடன் ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார். நல்ல பேட்டிங் பிட்சில் இங்கிலாந்து அணி இயன் பெல்லின் அருமையான 125 பந்து 141 ரன்கள் இன்னிங்ஸினால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் சதத்துடன் கடைசி பந்துக்கு முதல் பந்தில், 304/7 என்று வெற்றி பெற்று இறுதிக்குள் சென்றது.

ஆஸ்திரேலிய விரட்டல்:

டேவிட் வார்னர் நீக்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக ஷான் மார்ஷ் மற்றும் ஏரோன் பின்ச் களமிறங்கினர். பின்ச் (32), மார்ஷ் (45) ஆகியோர் 76 ரன்கள் என்ற தொடக்கத்தை கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இது 12 ஓவர்களுக்குள் எடுக்கப்பட்டது.

அடுத்தடுத்து கிளென் மேக்ஸ்வெல் (37), ஜேம்ஸ் ஃபாக்னர் (35) ஆகியோரும் ரன் விகிதத்தை தொய்ய விடாமல் ஸ்மித்துக்கு உறுதுணையாக ஆடினர். பிராட் ஹேடின் இங்கிலாந்து இன்னிங்ஸில் கடைசியில் 2 ரன் அவுட்களைச் செய்ததோடு பேட்டிங்கில் அபாரமாக விளையாடி 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 29 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து பங்களிப்பு செய்தார்.

ஹேடின் களமிறங்கும் போது ஆஸ்திரேலியாவுக்கு 76 பந்துகளில் 88 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 12 பந்துகளில் 9 ரன்களை எடுத்த ஹேடின் அதன் பிறகு அடித்து ஆடத் தொடங்கியதில் அவர் ஆட்டமிழக்கும் போது 15 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் அவர் விட்டுச் சென்றார்.

கேப்டன் ஸ்மித்தின் அபாரமான ஃபார்ம் ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்துள்ளது. 92/3 என்ற நிலையில் இங்கிலாந்துக்கு வாய்ப்பு லேசாக ஏற்பட்டது. ஆனால் இங்கிலாந்து பந்துவீச்சில் அச்சுறுத்தல் இல்லை. இந்தியாவிடம் காண்பித்த ஷாட் பிட்ச் பம்மாத்தையெல்லாம் ஆஸ்திரேலியாவிடம் காண்பித்தால் என்னவாகும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஸ்மித் 95 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 102 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இதற்கு முன்பாக ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக 3 போட்டிகளில் இருந்தார் அதிலும் ஆஸி. தோற்கவில்லை. இது அவருக்கு கேப்டனாக 4-வது போட்டி இதிலும் சதம் மற்றும் வெற்றி. இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்சி செய்து அனைத்திலும் சதம் கண்டார். தற்போது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக கேப்டன்சி, வெற்றி, சதம் என்று அவர் அசத்தல் தொடர்ந்து வருகிறது.

கடைசியில் கொஞ்சம் போலி பதட்டம் ஏற்பட்டது. கடைசி ஓவரை வோக்ஸ் வீசினார். ஆஸ்திரேலியாவுக்கு தேவை 2 ரன்கள். மோய்சஸ் ஹெண்ட்ரிக்ஸ் ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் பந்து ஷாட் கவர் திசையில் ரன் இல்லை. 2-வது பந்தில் மேலேறி வந்தார் பந்து யார்க்கர். பந்து ஷாட் கவரைத் தாண்டவில்லை ஆனால் எதிர்முனைக்கு அடிக்கப்பட்ட த்ரோ ஸ்டம்பில் பட்டிருந்தால் ஸ்மித் அவுட் ஆகியிருப்பார். பதட்டம் அதிகமாக அடுத்த பந்தை மிட் ஆஃபில் ஹெண்ட்ரிக்ஸ் அடித்து விட ஸ்மித் பீல்டையெல்லாம் பார்க்காமல் ஓடினார். ஆனால் ரன்னர் முனையில் ஜேம்ஸ் டெய்லர் த்ரோ ஸ்டம்பை பதம் பார்க்க ஹெண்ட்ரிக்ஸ் ரன் அவுட் ஆனார்.

3 பந்துகளில் 2 ரன்கள் தேவை. 4-வது பந்தில் ஸ்மித் மிட்விக்கெட்டில் பிளிக் செய்து 1 ரன் எடுத்து சமன் செய்தார். 5-வது பந்தில் ஸ்டார்க் வெற்றி ரன்னை எடுத்தார். ஸ்மித் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 10 ஆட்டங்களில் ஸ்மித்தின் 3-வது ஒருநாள் சதம் ஆகும் இது.

அன்று இந்தியாவை மடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன், இன்று 10 ஓவர்களில் 56 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஸ்டீவ் ஃபின் 10 ஓவர்களில் 65 ரன்களை வாரி வழங்கி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இயன் பெல் ஆடிய அற்புத ஆட்டம்! கமின்ஸை தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் அடித்த மொயீன் அலி!

முன்னதாக இங்கிலாந்து அணிக்கு இயன் பெல், மொயீன் அலி அதிரடித் தொடக்கம் கொடுத்தனர். 3-வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீச இயன் பெல் 3 அபாரமான பவுண்டரிகளை அடித்தார். அதன் பிறகு கமின்ஸை 2 பவுண்டரிகள் விளாசினார். ஆனால், 9-வது ஓவரில் கமின்ஸ் பந்தை அடித்து நொறுக்கினார் இடது கை வீரர் மொயீன் அலி. முதல் பந்து ஷாட் பிட்சாக அமைய ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸ். இரண்டாவது சிக்சரும் ஷாட் பிட்ச் பந்தை அதே திசையில் அடித்ததுதான். 3-வது பந்தும் புல் ஷாட்தான், இம்முறை டீப் ஸ்கொயர் லெக் பவுண்டரியில் மேலே சென்ற பந்தை மார்ஷ் எம்பிப் பிடிக்கும் முயற்சியில் பந்தைப் பிடித்து எல்லைக்கோட்டில் விழுவார் என்று தெரிந்ததால் தூக்கிப் போட முயன்றார். ஆனால் பந்து எல்லைக் கோட்டைக் கடந்தது. எனவே அதுவும் சிக்ஸ்.

இருவரும் 106 பந்துகளில் 113 ரன்களை தொடக்க விக்கெட்டுக்காகக் குவித்தனர். மொயீன் அலி 48 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் எடுத்து பாக்னர் பந்தில் அவுட் ஆனார். ஜேம்ஸ் டெய்லரும் 5 ரன்களில் விழுந்தார். 23-வது ஓவரில் 132/2 என்று ஆனது இங்கிலாந்து. ஆனால் அதன் பிறகு ஜேம்ஸ் ரூட் (69 ரன்கள்க் 70 பந்து 6 பவுண்டரி), இயன் பெல் இணைந்து 19 ஓவர்களில் 121 ரன்களைக் குவித்தனர். 42 பந்துகளில் அரைசதம் கண்ட பெல், 92 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் சதம் கண்டார். அதன் பிறகு அதிரடியக் கூட்டி 125 பந்துகளில் 15 பவுண்டரி 1 சிக்சருடன் 141 ரன்கள் எடுத்து 3-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். சாந்து வீசிய பந்தை மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதே சாந்து ஓவரில் அதிரடி வீரர் இயன் மோர்கன் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 253/2 என்ற நிலையிலிருந்து 320 ரன்களுக்கும் மேல் செல்ல வேண்டிய இங்கிலாந்து அடுத்த 6 விக்கெட்டுகளை 50 ரன்களுக்குப் பறிகொடுத்தது.

ஆஸ்திரேலிய வீச்சாளர்கள் கடைசி ஓவர்களை அருமையாக வீசினர். பெல் இன்னிங்ஸ் வீணானது.

இந்த வெற்றி மூலம் 3 வெற்றிகளுடன் ஆஸி. அணி இறுதிக்குள் நுழைந்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு இறுதிக்குள் நுழைய ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கெல்லாம் இந்திய அணி தாறுமாறாக தங்கள் ஆட்டத்திறனை மேம்படுத்துவது அவசியம்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x