Published : 01 Aug 2015 09:36 AM
Last Updated : 01 Aug 2015 09:36 AM

ஆஸ்திரேலிய ஏ அணிக்கெதிரான 2-வது டெஸ்ட்: தோல்வியின் பிடியில் இந்தியா

ஆஸ்திரேலிய ஏ அணிக்கெதிரான அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி தோற்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

சென்னையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 68.5 ஓவர்களில் 135 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் பான்கிராப்ட் 150 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 103 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்திருந்தது.

349-க்கு ஆல்அவுட்

3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 107.5 ஓவர்களில் 349 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஃபெகீட் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஓ’கீப் 16 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியத் தரப்பில் அபராஜித் 5 விக்கெட்டுகளையும், பிரக்யான் ஓஜா 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இந்தியா-265/6

முதல் இன்னிங்ஸில் 214 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் கேப்டன் புஜாரா 11 ரன்களில் ஆட்டமிழக்க, அபினவ் முகுந்துடன் இணைந்தார் விராட் கோலி. 94 பந்துகளைச் சந்தித்த கோலி 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் வந்த கருண் நாயர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு முகுந்துடன் இணைந்தார் ஷ்ரேயாஸ் ஐயர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது. 163 பந்து

களைச் சந்தித்த முகுந்த் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 59 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களும் (65 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன்) எடுத்து வெளியேறினர்.

பின்னர் வந்த நமன் ஓஜா 30 ரன்களில் ஆட்டமிழக்க, 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 83 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. அபராஜித் 28 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் கோபால் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி 51 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. அதனால் கடைசி நாளான இன்று எஞ்சிய விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தி, ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x