Last Updated : 14 Aug, 2015 05:49 PM

 

Published : 14 Aug 2015 05:49 PM
Last Updated : 14 Aug 2015 05:49 PM

ஆஸ்திரேலியா ஏ வீழ்ந்தது: முத்தரப்பு தொடரை வென்றது இந்தியா ஏ

ராகுல் திராவிட் பயிற்சியின் கீழ் உன்முக்த் சந்தின் கேப்டன்சியில் இந்தியா ஏ, முத்தரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

இன்று சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஏ அணியை 226 ரன்களுக்கு மட்டுப்படுத்திய இந்தியா ஏ, பிறகு 43.3 ஓவர்களில் 229/6 என்று ரன்களை எடுத்து வெற்றி பெற்று முத்தரப்பு ஒருநாள் தொடரை அபாரமாகக் கைப்பற்றியது.

தொடர் முழுதும் ஆஸ்திரேலியா ஏ ஆதிக்கம் புரிந்தாலும் இறுதிப் போட்டி என்ற இந்த பெரிய போட்டியில் அதன் பேட்டிங் சரிவு கண்டது.

கே.வி.சர்மா 3 விக்கெட்டுகளையும், குர்கீரத் சிங் 2 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் சிக்கனமாக வீசி கைப்பற்றினர். பவுலிங்கில் அசத்திய குர்கீரத் சிங் பிறகு பேட்டிங்கிலும் 85 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி 13.4 ஓவர்களில் 82 ரன்கள் என்ற நல்ல தொடக்கம் கண்டது. அப்போது 41 ரன்கள் எடுத்த ஜோ பர்ன்ஸ் விக்கெட்டை தன் பந்து வீச்சில் தானே கேட்ச் பிடித்து குர்கீரத் சிங் வீழ்த்தினார். ஹெட் 20 ரன்களில் ஷர்மாவிடம் அவுட் ஆன போது ஸ்கோர் 138/2 என்று இருந்தது, அதன் பிறகு லின், கவாஜா, வேட் ஆகியோர் விரைவில் ஆட்டமிழக்க 34.2 ஓவர்களில் 164/5 என்று ஆனது. இடையில் உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பிறகு ஸ்பின்னர்கள் ஆதிக்கம் புரிய 138/1 என்ற நிலையிலிருந்து அடுத்த 8 விக்கெட்டுகளை 88 ரன்களுக்கு இழந்து 226/9 என்று முடிந்தது.

தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ மயங்க் அகர்வால் (32), உன்முக்த் சந்த் (24) அதிரடியில் 8.3 ஓவர்களில் 59 ரன்கள் என்ற தொடக்கம் கண்டது. கூல்ட்டர் நீல் பந்தை மிட் ஆன் தலைக்கு மேல் மயங்க் அகர்வால் ஒரு பெரிய சிக்ஸ் அடித்ததோடு, அதே ஓவரில் உன்முக்த் சந்த் அப்பர் கட் ஒன்றை பவுண்டரிக்கு விரட்டினார். பிறகு சந்த் இந்திய வம்சாவளி சாந்துவை மிட்விக்கெட்டில் அலட்சிய சிக்ஸ் அடித்தார், ஆனால் அதே ஓவரில் 32 ரன்களில் மயங்க் அகர்வால் ரன் அவுட் ஆனார்.

பிறகு 24 ரன்களில் அபாய உன்முக்த் சந்த் ஆகர் பந்தில் அவுட் ஆனார். ஆகர் பிறகு இந்திய மிடில் ஆர்டரை அசைத்தார். பாண்டே 9 ரன்னில் அவர் பந்தில் எல்.பி.ஆனார்.

கேகே நாயர் ரன் எடுக்காமல் கூல்டர் நைல் பந்தில் அவுட் ஆனார். பாண்டே அவுட் ஆகும் போது இந்தியா 16.4 ஓவர்களில் 82/4 என்று சற்றே தொய்வடைந்தது. கேதர் ஜாதவ் இறங்கி 5 அருமையான பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஸாம்பா பந்தில் அவுட் ஆனார்.

அக்சர் படேல் 16 ரன்களில் சாந்துவிடம் அவுட் ஆக இந்தியா ஏ 142/6 என்று தோல்வி முகமே கண்டது.

ஆனால் அதன் பிறகு குர்கீரத் சிங் ஆதிக்கம் செலுத்த சஞ்சு சாம்சன் ஒரு முனையில் அவருக்கு பலம் சேர்த்தார். சஞ்சு 24 ரன்களையே எடுத்தாலும் இது ஒரு அற்புதமான பக்க பல இன்னிங்ஸ் என்றே கூற வேண்டும், கடும் நெருக்கடியில் அவர் ஆடினார். நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

குர்கீரத் சிங் அபாரமான பேட்டிங் திறமைகளை வெளிப்படுத்தினார், அதற்குச் சான்று ஆஷ்டன் ஆகர் பந்தை அவர் காத்திருந்து ஸ்பின் ஆகவிட்டு தேர்ட் மேன் திசையில் லேட் கட்டில் பவுண்டரி அடித்து 62 பந்துகளில் அரைசதம் கண்டார்.

இருவரும் அலட்டிக் கொள்ளாமல் ஆடினர், காரணம் தேவைப்படும் ரன் விகிதம் குறைவாகவே இருந்தது. டெஸ்ட் போட்டியில் ஆடுவது போல் மரியாதை கொடுத்து ஆடினர். கடைசியில் 44-வது ஓவரை சாம்பா வீச வர முதல் பந்தை மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்தார் குர்கீரத். பிறகு லாங் ஆஃபில் ஒரு சிக்ஸ், பிறகு லாங் ஆனில் மீண்டும் ஒரு சிக்ஸ் இதுவே வின்னிங் ஷாட்டாக அமைந்தது, குர்கீரத் வெற்றி நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மயங்க் அகர்வால் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றி குறித்து பயிற்சியாளர் ராகுல் திராவிட்:

புத்திசாலித்தனமான ஷாட்களை நாங்கள் ஆடவில்லை. அர்த்தமுள்ள கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். தேவைப்படும் ரன் விகிதம் 4-4.5-ஐ கடக்காமல் பார்த்துக் கொண்டோம். பவுலர்கள் இந்தப் போட்டியை வெற்றிபெற்றுத் தந்துள்ளனர். ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக நிறைய ஸ்பின்னர்களை வீசச் செய்வது உதவும் என்ற திட்டம் பயன் கொடுத்தது. வெற்றியில் மகிழ்ச்சியே, ஆனால் இந்த ஏ அணிகள் என்பது வாய்ப்புகளுக்கான அணிகளாகும். ஆஸ்திரேலியர்களை ஒப்பிடும் போது நம் அணி இளம் அணி. ஆஸி.யில் அனுபவஸ்தர்கள் அதிகம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x