Published : 17 Mar 2019 12:28 PM
Last Updated : 17 Mar 2019 12:28 PM

களத்தில் பெண்கள்: தீர்வை நோக்கிய பயணமே கொண்டாட்டம்

பல்வேறு தளங்களில் பணி புரியும் பெண் தொழிலாளர்களை ஒன்றிணைக்கவும் அவர்களின் கோரிக்கைகளை முன்னெடுக்கவும் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம், உந்துசக்தியாக உள்ளது. பெண்கள் மீதான பாலியல் வன்முறை, குழந்தைத் திருமணம், பள்ளி இடைநிற்றல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை இந்தியப் பெண்கள்  சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்திய உள்நாட்டு உற்பத்தியில் பெண் தொழிலாளர்களின் பங்கு 17 சதவீதம். இன்றைக்கு ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் பெண்கள் ஈடுபட்டாலும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெண்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி, பல ஆண்டுகளாகச் செயலாற்றிவரும் செயற்பாட்டாளர்களும் இதைத்தான் சொல்கிறார்கள்.

புறந்தள்ளப்படும் அமைப்புசாரா பெண்கள்

தமிழகத்தில் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்குப் பிரச்சினையென்றால் களத்தில் முதல் ஆளாக நிற்பவர் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தேசியச் செயலாளர் ஆர். கீதா. ‘மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் அமைப்புசாராத் துறையில் உள்ள பெண் தொழிலாளர்களுக்குப் பேறுகால நலத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்’ என்பதை முக்கிய கோரிக்கையாக முன்வைக்கிறார்.

அத்துடன் “நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதம் அமைப்புசாராத் தொழில் துறையிலிருந்துதான் உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்தத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு வெறும் 107 கோடி ரூபாய்தான் மத்திய பட்ஜெட்டில்  ஒதுக்கப்பட்டுள்ளது. இது 17 துறைகளுக்குப் பிரித்துக்கொடுக்கப்படும். அப்படியென்றால் ஒரு துறைக்கு வெறும் பத்து கோடி ரூபாய்தான் அளிக்க முடியும். இந்த ஒரு சான்றே இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நிலையை உணர்த்தப் போதுமானது. ஒவ்வொரு மாநில அரசும் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு மாநில பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்க வேண்டும் எனச் சட்டம் உள்ளது. ஆனால், தமிழகத்தில் இதுவரை இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தவில்லை.

தமிழகத்தில் கட்டுமானத் துறையில் மட்டும் 30 சதவீதத்துக்கும் மேலான பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தத் துறையில் உள்ள பெண் தொழிலாளர்கள் மூச்சுத் திணறல், கை, கால், மூட்டு வலி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். பல ஆயிரங்களைச் செலவழிக்க முடியாத நிலையில் உள்ள அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு அரசு மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். இதற்காக இவர்களுக்கு  ஈ.எஸ்.ஐ. மருத்துவ உதவி வழங்க வேண்டும் என நீண்டகாலமாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். இந்த மருத்துவ உதவியைக்கூட நாங்கள் இலவசமாகக் கேட்கவில்லை. தொழிலாளர்கள் நலவாரியத்துக்குச் செலுத்தும் தொகையிலிருந்து பிடித்தம் செய்துதான் வழங்க வேண்டும் எனக் கேட்கிறோம். ஆனால், அரசு அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. 

துப்புரவுத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மீது பல்வேறுவிதமான பாலியல் சீண்டல்கள் நிகழ்த்தப்படுகின்றன. அரசோ தனியார் துறையோ எதுவாக இருந்தாலும் பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் ‘உள்ளகப் புகார் குழு' அமைக்க வேண்டும் எனச் சட்டம் உள்ளது. ஆனால்,  மாநகராட்சியில் இந்தப் பிரச்சினைகளைக் கேட்பதற்குக்கூட எந்த நடைமுறையும் இல்லை என்பதே நிதர்சனம். அதே போல் தமிழகத்தில் அமைப்புசாராத் தொழிலில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு உதவியாக 6 ஆயிரம் ரூபாய்தான் வழங்கப்படுகிறது. ஆனால், டெல்லி, ஒடிஷா போன்ற மாநிலங்களில் உதவித்தொகையாக 30 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்குகிறார்கள். இதுபோன்ற ஏராளமான பிரச்சினைகளை அமைப்புசாராத் துறையில் உள்ள  பெண் தொழிலாளர்கள் சந்தித்துவருகிறார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் சாதாரண மக்கள் மத்தியில் ஓட்டு கேட்க வரும் ஆட்சியாளர்கள், ஆட்சி அமைத்தவுடன் அவர்களின் கோரிக்கைகளை மறந்துவிடுகிறார்கள்” என்கிறார் கீதா.

தனித்து வாழும் பெண்கள்

கணவனை இழந்தவர்கள், விவாகரத்தான பெண்கள், திருமணமாகாத பெண்கள்  உள்ளிட்ட தனித்து வாழும் பெண்களுக்காகக் கடந்த 25 வருடங்களாக செயல்பட்டுவருகிறது ‘பெண்கள் முன்னேற்றம், ஆராய்ச்சி மையம்’. இந்த மையத்தின் இயக்குநர் ரேணுகா. “பொதுவாகப் பெண்கள் என்றாலே பிரச்சினைகள் அதிகம். அதிலும், தனித்து வாழும் பெண்களுடைய நிலை மிகவும் மோசம். அவர்களை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற கீழ்மையான மனப்பான்மை சமூகத்தில் நிலவுகிறது. பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ள ஒரு பெண்ணின்  கணவர் இறந்துவிட்டால், அப்படிப்பட்டவர்களை உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிருந்தாவனத்தில் விட்டுவிடுகிறார்கள். அல்லது ஊர், பெயர் தெரியாத ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள்.

ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்குப் பாலியல்ரீதியான தொந்தரவு பெரும் பிரச்சினையாக உள்ளது. இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தால்கூடப் பாதிக்கப்பட்ட பெண்ணைத்தான் விசாரிக்கிறார்கள். இதனாலேயே தனித்து வாழும் பல பெண்கள் தங்களுக்கான பிரச்சினைகளை வெளியே சொல்லத் தயங்குகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலைச் சமுதாயம்தான் உருவாக்க வேண்டும்.  தனித்து வாழும் பெண்களுக்கெனத் தனி அடையாள அட்டையை அரசு வழங்க வேண்டும்.  அவர்களுக்கு அரசுக் குடியிருப்பில் தனி வீடு ஒதுக்க வேண்டும்” என்கிறார் ரேணுகா.

அலைக்கழிக்கப்படும் தொழிலாளர்கள்

மிடுக்கான ஆடைகளால் கம்பீரமான தோற்றத்தைத் தர முடியும். ஆனால், அந்த உடைகளைத் தயாரிக்கும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் நிலை அந்த அளவு கம்பீரமாக இல்லை. நாட்டின் அந்நியச் செலாவணியில் முக்கியப் பங்காற்றும் துறைகளில் ஆயத்த ஆடைத் தயாரிப்பும் ஒன்று. தமிழகத்தில் மட்டும் பத்து லட்சம் பெண்கள் இந்தத் துறையில் பணியாற்றிவருகிறார்கள்.  ஆயத்த ஆடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் மத்தியில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார் சுஜாதா மோடி.

“திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, திருப்பூர் போன்ற பகுதிகளில் ஆயத்த ஆடை நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. இந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலான பெண்கள் கிராமப்புறங்களில் இருந்துதான் அழைத்து வரப்படுகிறார்கள். இவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதிய மாக 8,200 ரூபாய் வழங்க வேண்டும் எனச் சட்டம் உள்ளது. ஆனால், அதற்கும் குறைவான சம்பளத்தில் பத்து மணி நேரம் தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகிறார் கள்.  உடல்நிலை சரியில்லை என நான்கு நாள் தொடர்ந்து விடுப்பு எடுத்தால், அடுத்த நாள் வேலை மறுக்கப்படுகிறது. மேலும், வேலையிலிருந்து நிற்கும்போது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வருங்கால வைப்பு நிதி முறையாக வழங்கப்படு வதில்லை. இதுபோன்ற நிறுவனங்களைத் தொழிலாளர் நலத் துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் சுஜாதா.

மீட்கப்படவேண்டிய மீனவப் பெண்கள்

விவசாயத் துறையைப் போல் மீன்பிடித் துறையிலும் பெண்களின் உழைப்பு மறைக்கப்பட்டுவருகிறது. கடலுக்குள் சென்று மீன் பிடிக்கவில்லை என்றாலும் கரையில் பணிபுரியும் மீனவப் பெண்களின் உழைப்பு அளப்பரியது. தமிழகத்தில் மீன்வளத் துறையில் மட்டும் 50 சதவீதப் பெண்கள் ஈடுபட்டுவருகிறார்கள். “மீனவப் பெண்கள் மீன்களை எடுத்துச் செல்லவும் வியாபாரம் செய்யவும் தமிழகத்தில் எந்த நடைமுறையும் பின்பற்றப்படுவதில்லை” என்கிறார் மீனவப் பெண்கள் மத்தியில் பணியாற்றிவரும் ‘சிநேகா’ அமைப்பின் இயக்குநர் ஜேசு ரத்தினம்.

“மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் மீனவப் பெண்களுக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் உண்டு. ஆனால், தமிழ்நாட்டில் மீனவக் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்படவில்லை. மேலும், மீனவப் பெண்கள் மீன் கூடைகளுடன் பேருந்தில் ஏறினால், அவர்களை ஏளனமாகப் பார்க்கும் மனநிலை உள்ளது. அவர்களைப் பேருந்தில் இருந்து இறக்கிவிடும் கொடுமையும் நடக்கிறது. தமிழகத்தில் மீனவப் பெண்களுக்கு மீன்களை எடுத்துச் செல்லப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். அதேபோல் மீனவப் பஞ்சாயத்துகளில் தங்களுடைய பிரச்சினைகளைப் பற்றிப் பெண்கள் சொல்ல புகார் குழுக்களை அமைக்க வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களில் தேர்தல் நடத்தி, பெண் பிரநிதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்கிறார் அவர்.

மகளிர் தினத்தைக் கொண்டாடுவதன் நோக்கம், இதுபோல காலம்காலமாகத் தொடரும் சிக்கல்களுக்கான தீர்வைக் கண்டறிவதை நோக்கி நகர்வதாகவும் இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x