Published : 20 Jan 2019 10:15 AM
Last Updated : 20 Jan 2019 10:15 AM

நம்பிக்கை முனை: இப்படித்தான் சாதித்தார் வீனஸ் வில்லியம்ஸ்

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், 14 வயது சிறுமியாக இருந்தபோது ஒரு டென்னிஸ் போட்டியில் பங்கேற்கிறார். போட்டி தொடங்கும் முன் ஏபிசி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜான் மெக்கன்ஸி அவரைப் பேட்டி காண்கிறார். போட்டியில் எதிராளியை வீழ்த்த முடியும் என்று எந்த அளவுக்கு நம்புகிறாய் என்று வீனஸைக் கேட்கிறார் ஜான். “என்னால் அவளை வீழ்த்த முடியும். அதை உறுதியாக நம்புகிறேன்” என்று புன்னகையுடன் பதில் சொல்கிறார் வீனஸ்.

“அது எப்படி அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டாய்” என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார் ஜான். “ஏனென்றால் நான் அதை நம்புகிறேன்” என்று சொல்கிறார் வீனஸ்.  இந்த உரையாடல் பதிவான வீடியோ கடந்த ஆண்டு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

சம ஊதியம் பெற்ற முதல் பெண்

இந்தத் தன்னுணர்வுதான் அவரைத் தொழில்முறை டென்னிஸ்ஸில் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. உலக அளவில் முதலிடம் வகிக்கும் வீராங்கனை ஆக்கியிருக்கிறது.

வீனஸின் தனிப்பட்ட வளர்ச்சி, பாலினச் சமத்துவத்தை மேம்படுத்தும் அவரது முயற்சிகளுக்கு இன்றியமையாதவையாக அமைந்திருக்கின்றன. விம்பிள்டன் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வெல்லும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தில் அவர் வெற்றிபெற்றார். 2007-ல் நான்காவது விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றபோது ஆடவர் பிரிவில் வென்ற ரோஜர் ஃபெடரருக்கு அளிக்கப்பட்ட 14 லட்சம் டாலர் பரிசுத் தொகை வீனஸுக்கும் கிடைத்தது. ஆடுகளத்தில் வீனஸ் நிகழ்த்திய பல சாதனைகளுடன் விம்பிள்டனில் ஆண் வெற்றியாளருக்குச் சமமான பரிசுத் தொகையை வென்ற முதல் பெண் என்ற புகழும் சேர்ந்துகொண்டது.

ஃபேஷன் துறையில் ‘இலெவன்’ (EleVen), உட்புற வடிவமைப்புத் துறையில் ‘வி ஸ்டார்’ (V Starr Interiors) என அவர் தொடங்கிய நிறுவனங்களின் மூலம் வீனஸ் வெற்றிகரமான தொழிலதிபராக இயங்குவதற்கும் அவரது தன்னம் பிக்கையே அச்சாரமாக அமைந்தது. அதுவே அவரது பல்வேறு சாதனைகளின் மையமாக விளங்குகிறது. தன்னம்பிக்கையைக் கற்பிக்கவும் தொடர்ந்து உழைத்து வளர்த்துக்கொள்ளவும் கூடிய ஒரு திறன் என்று அதை அவர் வரையறுக்கிறார்.

பொதுவாகவும் அனைவரும் குறிப்பாகப் பெண்கள், தன்னம்பிக்கையை உற்பத்தி செய்யவும் தொடர்ந்து பேணிக் காக்கவும் ஏதாவது சூத்திரம் இருக்கிறதா என்று வீனஸிடம் கேட்டோம்.  “ஒருவர் தனது உடலை ஒரு விஷயத்துக்காகப் பயிற்றுவிப்பது போலவே தனது மதிப்பை நம்பும்படி மனத்தையும் பயிற்றுவிக்க  முடியும்” என்கிறார். மேலும், இது தொடர்பாக வீனஸ் மூன்று விதிகளைப் பகிர்ந்துகொண்டார்:

உணர்வுகளுக்கு நேர்மையாக இருத்தல்

ஏதேனும் ஒரு விஷயம் நான் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்றால் ஏன் அப்படி நடக்கவில்லை என்ற எளிதான, ஆனால் முக்கியமான கேள்வியை என்னை நானே கேட்டுக்கொள்வேன். உங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒரு விஷயம் உங்கள் உணர்வுகளுக்கு நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதே.

உங்களுக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களை மூடிமறைப்பதைக் காட்டிலும், உங்களைப் பற்றி நீங்கள் நம்பிக்கையில்லாமல் இருக்கும்போது அதை அங்கீகரியுங்கள். அதே நேரத்தில் நீங்கள் இந்தத் தருணத்தில் தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், உங்கள் இலக்கை அடைவதன் மீதான ஈடுபாட்டை விட்டுவிடக் கூடாது என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

தேவையில்லை ஒப்பீடு

என்ன செய்தாலும் அதற்கான எளிய வழியை நாடாதீர்கள். அது தற்காலிக இன்பத்தை மட்டுமே கொடுக்கும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். இன்னொருவர் உங்களைவிடப் புத்திசாலியாகவோ அழகாகவோ உயரமாகவோ இருப்பதால்தான், அவர் உங்களைவிட வெற்றிகரமாக இருக்கிறார் என்று நினைப்பது உங்கள் வெற்றியை நீங்களே குறைத்து மதிப்பிடத்தான் உதவும். அதேநேரம் நீங்கள் மனம்விட்டுப் பேச யாரேனும் இருப்பது மிகவும் உதவியாக இருக்கும் என்பதையும் மறந்துவிடாதீர்கள். அந்த நபர் உங்கள் பயிற்றுநராகவோ வழிகாட்டியாகவோ நீங்கள் மதிக்கும் யாரேனும் ஒருவராகவோ இருக்கலாம்.

நம்மால் முடியுமா என்ற சந்தேகம் இருக்கலாம்தான். அது  இயல்பான மனித உணர்வு. ஆனால் அந்தப் பாதுகாப்பின்மை உணர்வு உங்களை  ஆட்கொள்ள அனுமதிக்கக் கூடாது. நான் எப்போதும் எனக்குள் சொல்லிக்கொள்வது இதுதான்: ‘படபடப்பு இருக்கலாம். ஆனால், அந்தப் படபடப்பு என் விளையாட்டில் தாக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது’.

nambikkaijpg

இலக்குகளின் வரைபடத்தை உருவாக்குங்கள்

வாழ்வில் இருப்பதிலேயே மோசமான விஷயங்களைப் பெற நான் விதிக்கப்பட்டிருக்கிறேன்; தோல்வியையும் மகிழ்ச்சியின்மையும் நான் பெறப் போகிறேன் என்று உங்களுக்குள் சொல்லிப் பாருங்களேன். அது சரியானதா? நிச்சயம் இல்லை. இதற்கு நேர் எதிரானதை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டு அதை நோக்கிச் செல்லுங்கள்.  இலக்குகளை அடைந்தவர்களாகத் தங்களைப் பார்க்க முடிந்தவர்கள்தான், அந்த இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கான ஆதாரங்களை ஒஹையோ பலக்லைக்கழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் தருகின்றன. இலக்கை அடைந்துவிட்ட நிலையை மனக்கண்ணில் ஓட்டிப் பார்க்க முடிந்தபின், அந்த இடத்தை அடைவதற்கான செயல்திட்டத்தை உருவாக்கத் தொடங்குங்கள்.

போட்டியில் வெல்வதும் தோற்பதும் நீங்கள் ஆடுகளத்தில் நுழைவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது என்பதை நினைவில்கொள்ளுங்கள். அதேபோல், ஒரு நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் முன்பே நீங்கள் வேலையைப் பெற்றுவிடுகிறீர்கள் அல்லது இழந்துவிடுகிறீர்கள். உங்கள் இலக்கை அடைவதற்கான வழியை முன்கூட்டியே தீர்மானித்து வைத்திருப்பது மிக அவசியம்.

தோல்விகளைச் சாதகமாக்கிக்கொள்ளுங்கள்

தோல்வி என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கம். நான் என் தோல்விகள் குறித்து எனக்குள் மனசாட்சியற்ற நேர்மையைக் கடைபிடிப்பேன். விளையாட்டு வீராங்கனையாக இருப்பதால் எனக்கு இந்தப் பழக்கம் வந்துவிட்டது. விளையாட்டில் தோல்வியை வரையறுப்பது மிக எளிது: உங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளாதவரை தோல்வியைத்தான் அடைவீர்கள்.

என்னைப் பொறுத்தவரை தோல்வி என்பது நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதுதான். கைவிடுவதைப் பற்றி எப்போதும் யோசித்ததில்லை. தோல்வி உங்களை மேலும் வலிமையானவராகவும் புத்திசாலியாகவும் மேம்பட்டவராகவும் ஆக்குகிறது. என்னுடைய மிகப் பெரிய தோல்விகள் எப்போதும் என்னுடைய மிகப் பெரிய வெற்றிகளின் உள்ளார்ந்த பகுதியாக இருந்துள்ளன.

வாழ்க்கையில் ஏதேனும் ஒரு புள்ளியில் நாம் சவால்களை எதிர்கொண்டிருக் கிறோம். ஆனால், தாழ்மை உணர்வின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது குறைந்த கால நடவடிக்கை. நீண்ட காலத்தில் சாதிப்பதையும் நம் முழுமையான திறமை, ஆற்றல் பயன்படுத்தப்படுவதையும் அது தடுத்துவிடும். தன்னம்பிக்கையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க நாம் எந்த அளவு பழகியிருக்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் நம் கனவுகளை நனவாக்கத் தொடர்ந்து உழைப்பதற்கான வலிமையைப் பெறுகிறோம். என்னைப் பொறுத்தவரை அதுதான் வெற்றியின் உன்மையான வரையறை.

 ‘தி இந்து’ ஆங்கிலம் | (தமிழில்: ச.கோபாலகிருஷ்ணன்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x