Last Updated : 20 Jan, 2019 10:19 AM

 

Published : 20 Jan 2019 10:19 AM
Last Updated : 20 Jan 2019 10:19 AM

பெண்கள் 360: நீதி கேட்டவர்களுக்குத் தண்டனையா?

நீதி கேட்டவர்களுக்குத் தண்டனையா?

2014 முதல் 2016வரை கன்னியாஸ்திரி ஒருவரை ஜலந்தர் மறைமாவட்ட ஆயர் பிராங்கோ முல்லைக்கால் என்பவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனுபமா, ஆல்ஃபி, ஜோஸ்பின், அன்சிட்டா ஆகிய நான்கு கன்னியாஸ்திரிகள் போராடினர். ‘சேவ் அவர் சிஸ்டர்ஸ்’ என்ற பரப்புரை மூலம் அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தால், பிராங்கோ முல்லைக்கால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீதிக்காகப் போராடிய அந்த நான்கு கன்னியாஸ்திரிகளை கடந்த வியாழன் அன்று திருச்சபை இடமாற்றம் செய்துள்ளது. “நாங்கள் பயப்படவில்லை. எங்களை இடம்மாறிபோக வேண்டுமென அவர்கள் சொன்னால், நாங்கள் போக மாட்டோம். எங்களை நீக்க வேண்டுமானால் நீக்கட்டும். நாங்கள் இங்குதான் இருப்போம்” என்று சொல்லி அவர்கள் மீண்டும் ஒரு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

tweetjpg

ட்வீட்டால் கிடைத்த விடுதலை

ரஹஃப் முகமது அல்குனம் (18) சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர். குடும்பத்தினர் இவருக்கு ஏற்பாடு செய்த திருமணத்தை மறுத்தார். அதனால் அவரை அறைக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார்கள். அங்கிருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முயன்றார். பாஸ்போர்ட்டைப் பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகள், பெற்றோர் அனுமதி இல்லாமல் அவரை வெளிநாடு அனுப்ப மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை கண்கணிப்பு ஆணையத்துக்கு ட்விட்டரில் ரஹஃப், தகவல் தெரிவித்தார். தூதரக அதிகாரிகள் அவரைத்  திரும்ப அனுப்பப்போகிறோம் என்றனர். இதை ஏற்க மறுத்த ரஹஃப், “என்னைச் சிறையில் அடைப்பார்கள். வெளியே வந்ததும் கொன்றுவிடுவார்கள். தயவுசெய்து என்னைத் திரும்ப அனுப்பாதீர்கள்” என்று கண்ணீர்விட்டார். இந்நிலையில் கனடா பிரதமர், அவரை ஏற்றுக்கொள்வதாக அறிவித்ததையடுத்து அவர் கனடாவுக்கு அனுப்பப்பட்டார்.

kaakkajpgright

காக்கத் தவறிய சட்டமும் பக்தியும்

பிந்து தங்கம் கல்யாணி, பாலக்காட்டில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தவர்களில் இவரும் ஒருவர். சபரிமலைக்குச் செல்ல முயன்ற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தன் 11 வயது மகளைச் சேர்ப்பதற்காக ‘வித்யா வனம்’ பள்ளியை அணுகினார். அவர்களும் பள்ளியில் சேர்த்துக்கொள்வதாக உறுதியளித்தனர். கடந்த வாரம் தனது மகளை அழைத்து கொண்டு பள்ளிக்குச் சென்றார்.

அங்கு 60 பேர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டதால், அவருடைய குழந்தைக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதேபோல் சபரிமலை கோயிலுக்குச் சென்றதற்காக, 38 வயது கனக துர்காவை அவரது மாமியார் அடித்து உதைத்தார். படுகாயம் அடைந்த கனகதுர்கா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சட்டத்தின் அனுமதியுடன் பக்தியின் உந்துதலில் கோயிலுக்குச் சென்றவர்களைச் சட்டமும் காக்கவில்லை; பக்தியும் காக்கவில்லை.

isaiyinjpg

இசையின் நிரந்தரக் குரல்

தலிதா, மனத்துக்கு இதமளிக்கும் குரலுக்கும் வசீகர அழகுக்கும் சொந்தக்காரர். கெய்ரோவில் 1933 ஜனவரி 17-ல் பிறந்தார். அவரின் பெற்றோர் எகிப்தில் அகதியாகக் குடியேறியவர்கள். தந்தை கெய்ரோ வயலின் இசைக் கலைஞர் என்பதால் தலிதாவின் பால்யம் இசையும் மகிழ்வும் நிறைந்ததாக இருந்தது. 1951-ல் எகிப்தில் நடந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். 1954-ல் மிஸ்.

எகிப்தாகத் தேர்வு செய்யப்பட்டார். அந்த வெற்றி அவரை பாரிஸுக்கு அழைத்துச் சென்றது. 1955-ல் அவரது முதல் இசைத் தொகுப்பு ‘மடோனா’வும் 1956-ல் இரண்டாவது இசைத் தொகுப்பான ‘பாம்பினோ’வும் வெளியாகின.

காதலின் பிரிவால் வாடும் இளைஞனைப் பற்றிய ‘பாம்பினோ’ எனும் பாடல் தலிதாவை இசையின் நிரந்தர முகமாக்கியது. இனிமையும் மென்மையும் கம்பீரமும் மிகுந்த அவரது குரல் உலகெங்கும் ஒலித்தது; இன்றும் ஒலிக்கிறது. ரசிகர்களுக்கு மகிழ்வையும் உற்சாகத்தையும் பரிசளித்தவருக்குத் தனிப்பட்ட வாழ்வில் அவை கிடைக்கவே இல்லை. காதல்களும் கல்யாணங்களும் வலி மிகுந்த தோல்வியிலேயே முடிந்தன. 1987 மே 3 அன்று ‘என்னை மன்னித்துவிடுங்கள்; ‘வாழ்வு’ என்னால் சுமக்க முடியாததாக மாறிவிட்டது’ என எழுதிவைத்துவிட்டு விடைபெற்றார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ‘நீங்கள் மகிழ்ந்தீர்களா?’ எனக் கேட்ட தலிதாவின் 86-வது பிறந்த நாளை யொட்டி கடந்த வியாழன் அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது. 

பேராசிரியரின் ‘சமூக ஆராய்ச்சி’

கொல்கத்தாவில் இருக்கும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கனக் சந்திர சர்க்கார் என்பவர் பேராசிரியராக உள்ளார். சர்வதேச உறவுகளைப் பற்றி கற்பிக்கும் அவரின் சமீபத்திய ஃபேஸ்புக் பதிவு நாடெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பதிவில், ‘கன்னிப் பெண்கள் சீலிடப்பட்ட பாட்டில்களைப் போன்றவர்கள். குளிர்பான பாட்டிலையோ பிஸ்கட் பாக்கெட்டையோ சீல் உடைந்திருந்தால் நீங்கள் வாங்குவீர்களா?’ எனக் கேட்டுள்ளார்.

மாணவர்களும் மகளிர் அமைப்பினரும் அவருக்கு எதிராகப் போராடியதால், அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில், “யாரையும் பெயரைக் குறிப்பிட்டுத் தனிப்பட்ட வகையில் அவமானப்படுத்தும் நோக்கில்  நான் ஃபேஸ்புக்கில் பதிவிடவில்லை.

சமூகம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நான், சமூகத்தின் நலனுக்காகவே அதைப் பதிவிட்டேன். தஸ்லிமா நஸ்ரினின் கருத்துச் சுதந்திர உரிமைக்கு ஆதரவாக நின்றவர்கள், இன்று என்னைத் தூற்றுகின்றனர்” என்று அவர் தன் செயலுக்கு நியாயம் கற்பித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x