Last Updated : 13 Jan, 2019 12:27 PM

 

Published : 13 Jan 2019 12:27 PM
Last Updated : 13 Jan 2019 12:27 PM

மகளிர் நூல்கள் 2019: வாசிக்கத் தூண்டும் பெண் எழுத்து

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடை பெற்றுவரும் 42-வது சென்னை புத்தகக் காட்சியில் இந்த ஆண்டின் வரவாகப்  பெண் எழுத்தாளர்கள் எழுதியவையும் பெண்கள் சார்ந்து எழுதப்பட்ட புத்தகங்களும் ஏராளமாக வெளிவந்துள்ளன. அவற்றில் வாசிக்கத் தவறவிடக் கூடாத புத்தகங்களின் தொகுப்பு:

ஜோனை அறிவோம்

மக்களின் யதார்த்த நிலையைப் பேசுபவை எனப் போற்றப்படுபவை மலையாளத் திரைப்படங்கள். ஆனால், அவற்றில் ஒளிந்திருக்கும் சாதியம்,  தலித் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அரசியலில் தலித் சமூகத்தினரின் பங்கு உள்ளிட்டவற்றைப் பேசுகிறது  ‘விடியல் பதிப்பகம்’ வெளியிட்டிருக்கும் ‘தலித் பெண்ணின் இடைமறித்தல்கள்’ புத்தகம். (ஆசிரியர்: ரேகா ராஜ், தமிழில் குஞ்சம்மாள், விலை: ரூ.120)

உலக வரலாற்றில் வீரமங்கையாகத் திகழும் ஜோன் ஆஃப் ஆர்க் குறித்து ‘கிழக்கு பதிப்பகம்’ சார்பில் வெளியிடப்பட்டுள்ளது ‘ஜோன் ஆஃப் ஆர்க் – வரலாற்றை மாற்றிய வீரமங்கை’ புத்தகம். (ஆசிரியர்: ரஞ்சனி நாராயணன், விலை ரூ.225).

பல ஆண்டுகள் கழித்து மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது  முனைவர் ர. விஜயலட்சுமி  எழுதியுள்ள ‘தமிழக மகளிர்  தொடக்கக் காலம் முதல் ஆறாம் நூற்றாண்டுவரை’ (விலை ரூ.300) புத்தகம். காலந்தோறும் பெண்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளை ஒரு ஆய்வாளரின் நிதானத்துடன் மேற்கோள் காட்டியுள்ளார் ஆசிரியர். நாட்டை விட்டு வெளியேறிய புலம்பெயர்ந்த மக்களின் சொல்லப்படாத கதைகள் பற்றிக் கூறுகிறது ‘அணங்கு பெண்ணியப் பதிப்பகம்’ சார்பில் வெளியாகியிருக்கும் ‘இடாவேணி’ புத்தகம் (ஆசிரியர்: நிரூபா, விலை. ரூ.130).

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை

‘இந்து தமிழ்’ நாளிதழின் இணைப்பான ‘பெண் இன்று’வில் சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா  எழுதிய  ‘பெண்ணும் ஆணும் ஒண்ணு’ தொடர் தற்போது புத்தக வடிவில் ‘நிகர்மொழி பதிப்பகம்’ சார்பில் வெளியாகியுள்ளது (விலை: ரூ.110). பாலினச் சமத்துவத்தையும் ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும் பேசுகிறது இந்தப் புத்தகம்.

‘காலச்சுவடு பதிப்பகம்’ சார்பில் பெண்கள் சார்ந்து வெளியான புத்தகங்கள் அதிகம். போர் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறும் பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துப் பேசுகிறது காலச்சுவடு வெளியிட்டிருக்கும் ‘இழப்பின் வரைபடம்’ புத்தகம் (ஆசிரியர் லாரா ஃபெர்கஸ் – தமிழில் அனிருத்தன் வாசுதேவன், விலை ரூ. 250).

உதாசீனம் செய்த கணவனை உதறிவிட்டுத் தன் உழைப்பால் உயரும் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தைக் கூறுகிறது ‘பணிக்கர் பேத்தி’ புத்தகம் (ஆசிரியர்: ஸர்மிளா ஸெய்யித், விலை: ரூ.125).

கார் ஓட்டுநராகச் சிறந்து விளங்கும் பெண் கார் ஓட்டுநர்கள் குறித்து வெளிவந்துள்ளது ‘பெண் டிரைவர்’ புத்தகம் (ஆசிரியர்: ஜெயவதி ஸ்ரீவத்சவா – தமிழில் சுரேஷ், விலை: ரூ.190).

தமிழக எழுத்தாளர்களில் முக்கியமானவரான அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ (விலை ரூ.190) என்ற புத்தகம் இந்தக் கண்காட்சியில் வெளியாகி யுள்ளது.

600 கவிதைகளின் தொகுப்பு

‘எதிர் வெளியீடு’ சார்பில் இரண்டு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் காலத்தால் புறக்கணிக்கப்பட்ட ஆப்ரிக்க - அமெரிக்கர்கள் குறித்து ‘அன்புள்ள ஏவாளுக்கு’ (விலை: ரூ.350) என்ற பெயரில் எழுதியுள்ளார் புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளர் ஆலிஸ் வாக்கர். தமிழில் ஷஹிதா மொழிபெயர்த்துள்ளார்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் வாழும் சாமானியப் பெண்களின் வாழ்க்கை பற்றிப் பேசுகிறது ‘சூன்யப் புள்ளியில் பெண்’ புத்தகம் (ஆசிரியர்: நவல் எல் சாதவி – தமிழில் சசிகலா பாபு, விலை: ரூ.160).

கவிஞர் குட்டி ரேவதியின் 600 கவிதைகளின் தொகுப்பை ‘ஆதிவாயில்’ (விலை: ரூ.490) என்ற  பெயரில் வெளியிட்டுள்ளது ‘அடையாளம் பதிப்பகம்’.

‘சந்தியா பதிப்பகம்’ சார்பில் வேதகாலத்தில் வாழ்ந்த பெண்கள் சம உரிமையுடன் நடத்தப்பட்டனர் என்பதை விளக்கும் விதமாக ‘வேதவாழ்வில் பெண் குரல்’ (விலை: ரூ.115) என்ற புத்தகத்தை ஆசிரியர் ஜி.ஏ.பிரபா எழுதியுள்ளர்.

பெண் தெய்வ வழிபாடு குறித்து சிகரம் ச.செந்தில்நாதன் எழுதிய ‘பெருந்தெய்வ வழிபாடும் பெண் தெய்வ வழிபாடும்’ (விலை: ரூ.110) வெளியாகியுள்ளது.

மொகலாயப் பேரரசி நூர்ஜஹானின் ஆளுமை, அவரின் அரசியல் வியூகங்கள், வாழ்க்கை வரலாறு ஆகியவை குறித்து ச.சரவணன் எழுதியுள்ள ‘நூர்ஜஹான் சர்தார் ஜோகிந்தர் சிங்’ (விலை: ரூ.210) நூலும் குறிப்பிடத்தகுந்தது.

‘கறுப்புப் பிரதிகள்’ சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் ‘உங்களில் யாராவது முதல் கல்லை எறியட்டும்’ (ஆசிரியர்: கறுப்பி சுமதி, விலை: ரூ. 150) நூலும் பாரதி புத்தகாலயம் சார்பில் குஜராத் கலவரம் குறித்து ‘தீஸ்தா செடல்வாட் நினைவோடை’ (தமிழில்: ச. வீரமணி, தஞ்சை ரமேஷ், விலை: ரூ.200) என்ற புத்தகமும் மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷ் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு ‘கௌரி லங்கேஷ்: தெரிவு செய்யப்பட்ட சொற்கள்’ (தமிழில்: கி. ராசு, விலை: ரூ.50) புத்தகமும் இந்தப் புத்தகக் காட்சியையொட்டி வெளியாகியுள்ளன.

கலையே வாழ்வாக

தமிழகத்தில் வழிபாட்டின் அங்கமாகக் கோயில்களில் இறைசேவைக்காக நேர்ந்துவிடப்பட்ட தேவரடியார் பெண்கள் குறித்து எழுத்தாளர் அ.வெண்ணிலா எழுதிய ‘தேவரடியார்’ புத்தகம் அகநி பதிப்பகம் (விலை: ரூ.250) சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x