Last Updated : 08 Dec, 2018 05:55 PM

 

Published : 08 Dec 2018 05:55 PM
Last Updated : 08 Dec 2018 05:55 PM

பாதையற்ற நிலம் 20: நீலநிறக் கவிதைகள்

தமிழில் புதுக் கவிதை தோன்றி கால் நூற்றாண்டுக்குப் பிறகுதான் பெண்களின் உலகம் திடமாக வெளிப்படத் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில்தான் பெண்கள் பலர் கவிதைகள் எழுத வந்தனர். பெண்களின் தனித்துவமான உலகம், அது சார்ந்த  பிரச்சினைகளைப் பேசிய அந்தக் கவிதைகள் ‘பெண்ணியக் கவிதைகள்’ என்ற வகைக்குள் சிக்கிக்கொண்டன.

80-களின் இறுதியில் தொடங்கி 10 ஆண்டுகள்வரை நீடித்த இந்தப் போக்கு இதற்குப் பின் கவிதை எழுதவந்த பெண் கவிஞர்கள் பலரையும் பாதித்தது. அவர்களது கவிதைகளில் இந்த அம்சம் வெளிப்பட்டது. இந்த எல்லைகளுக்கு அப்பால் சுதந்திரமாகச் சிறகை விரித்தவர்கள் சிலரே. அவர்களுள் ஒருவர் கவிஞர் தென்றல்.

தனித்தனி வானம்

தென்றலின் கவிதைகள் விநோதமான காலகட்டத்தில் நிகழ்பவை. அன்றாடங்களான வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒரு முனையை நோக்கி அவரது கவிதை நதி பாய்கிறது. ‘சூரியக் குடும்பத்திலிருந்து / என்னை நான் / விலக்கிக் கொண்ட நேரம் / வித்தியாசமாய் / ஏதும் நடந்ததாய்த் தெரியவில்லை’ என்ற தென்றலின் கவிதை வரிகள், இந்த உலகம் தொடங்கிய இடம் வரை வாசகனை அழைத்துச் செல்லக்கூடியவை.

உலகம் தொடங்கிய இடத்தில் எப்படி ஆண்/ பெண் பேதமில்லையோ அதுபோல் தென்றலின் கவிதைக்கும் இல்லை. அந்த நேரத்தில் அறம் கண்டுபிடிக்கப்படவில்லை. உண்மை/பொய், நீதி/அநீதி என எதுவும் இல்லை.

விசுவாமித்திரர், சத்தியவிரதனுக்காக பூமிக்கும் சொர்க்கத்துக்கும் நடுவில் ஒரு திரிசங்கு சொர்க்கத்தை உருவாக்கியதுபோல் தென்றலின் கவிதைகள், ஒரு புதிய உலகை உருவாக்குகின்றன. தென்றலின் தாய்க்கிளி தன் ஒவ்வொரு குஞ்சுக்கும் தனித் தனி வானத்தை உயில் எழுதிவைப்பதுபோல் வாசகர்களும் இந்தக் கவிதைகள் உருவாக்கும் தனியுலகில் சஞ்சரிக்கலாம். 

முயல், நரி, நீலநிறக் கிளி, பொன் வண்டு, பூனை, பருந்து, கழுகுக் குஞ்சு ஆகியவை இந்தக் கவிதாலோகத்தில் உண்டு. எண்ணற்ற தும்பிகள் அதற்குள் பறந்துசெல்கின்றன. உணவைக் கோராத மீன்கள் நீந்துகின்றன. இவற்றுக்கிடையில் ஒரு நானும் ஒரு நீயும் உரையாடல்களை நிகழ்த்துகின்றன.

கற்பிதங்களுக்கு எதிரான மனநிலை

தென்றலின் இந்தக் கவிதைகள், சாஸ்திரங்கள், நியதிகள் எனத் தனி ஆளுமைமீது கவிழ்க்கப்படும் கற்பிதங்களுக்கு எதிரான மனநிலை கொண்டவை. அதனால், அவற்றுக்கு எதிரானதோர் உலகத்தில் இயங்குகின்றன. குழந்தைகளின் அதிசயக் குழப்பங்களும் தென்றலின் கவிதைக்கு உண்டு. அந்த முட்டாள்தனம்தான் அவரைத் தும்பியாக்கப் பார்க்கிறது.

ஒரு பட்டாணிக் கடலையின் தலை கிடைத்தால் போதும் தும்பியுடன் பறக்கலாம் என்கிறது அவரது ஒரு கவிதை. தென்றலின் இன்னொரு கவிதை, ஒரு பிடி உணவு வேண்டி எறும்பின் வாசலில் நிற்கிறது. இந்தக் குழப்பங்கள் தென்றலின் கவிதைக்கு ஒரு விநோதத் தன்மையை அளிக்கின்றன. இந்த விநோதத்தைத் திறக்கும் முயற்சி வாசகனுக்குச் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது. இது தென்றலின் பெரும்பாலான கவிதைகளில் வெளிப்படுகிறது.

எறும்பும் கடவுளும்

தென்றலின் இந்தத் தன்மை, இன்னொருவிதத்தில் இருத்தலியல் பிரச்சினையின் வெளிப்பாடு எனலாம். பலவிதமான நீதிகள்/கோட்பாடுகளால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் இந்த வாழ்க்கைக்கு நடுவே கவிதை மனத்தின், எதிர்ச் செயல்பாடு என இந்தக் கவிதையை அணுகலாம். இந்த அடிப்படையில் தென்றலின் கவிதைகள் ஆங்கில நவீனக் கவிதைச் செயல்பாட்டின் தொடர்ச்சி எனலாம்.

பூமி தட்டையானது என்றவுடன் சமவெளி நோக்கி ஓடிய கூட்டத்துக்கும், பூமி உருண்டையானது என்றதும் மையத்தை நோக்கி ஓடிய கூட்டத்துக்கும் இடையில் மிதிபட்டு ஒரு எறும்பும் ஒரு கடவுளும் இந்தக் கவிதைக்குள் மடிந்துபோகிறார்கள். தென்றல், அந்த எறும்பாகவும் அந்த கடவுளாகவும் இருக்கிறார்.

 தென்றலின் கவி மொழி, எளிமையானது. ‘வானம் இடிந்து உச்சந்தலையில் விழுகிறது என்று அலறியபடி/ என் கதவைத் தட்டும் கோழிக்குஞ்சை/ உள்ளே விடுவதா வேண்டாமா?’ எனக் கேட்கும் குழந்தைமைக்குரிய விளையாட்டுத்தனம் அவரது மொழிக்கு உண்டு. இந்தத் தன்மை எளிய வாசகன் நுழைவுக்கான சாத்தியத்தை ஏற்படுத்தித் தருகிறது.

ஒரே மனத்தின் இருநிலைகள்

தென்றலின் கவிதை வெளிப்படுத்தும் இன்னொரு பொதுவான அம்சம் உறவுச் சிக்கல். பாலினப் பாகுபாடற்று வரும் அந்த ‘நீ’யுடன் தென்றலின் ‘நான்’ முரண்பட்டு நிற்கிறது. ‘ஜாடி உன் கை தவறி உடைந்ததா/ வீறல்விட்டு உடைந்ததா/ தெரியவில்லை/ எல்லாம் ஒன்றுதான்/ ஜாடி உடைந்திருக்கிறது’ என்ற கவிதை ‘நீ’க்கும் நானுக்குமான அரூபமான உறவுச் சிக்கலைச் சொல்கிறது. கனவுப் பறவையைச் சுமந்தபடி தென்றலின் நான், நீயின் தெரு வழியே செல்கிறது. ஆனால், எல்லோரும் விழித்திருக்க நீ மட்டும் தூங்கிப் போனதாம். சில கவிதைகளில் நானும் நீயும் ஒரே மனத்தின் இரு நிலைகளாகவும் வெளிப்பட்டுள்ளன.

தென்றலின் கவிதைகள் நீலநிறத்தின் மீது பிரியம் கொண்டவையாகவும் உள்ளன. ‘மயிலினம் தோன்றுவதற்கு முன்பே கிருஷ்ணனை அலங்கரித்த’ நீல நிறத்துக்காகத் தென்றலின் பச்சைக்கிளி தற்கொலை செய்துகொள்கிறது. நீல நிறம் என்பது உலகத்துக்குக்கு வெளியே வியாபகம் கொண்டிருக்கும் வெளியின் மீதான பிடித்தம். அல்லது இந்த உலகம் மீதான தென்றலின் பிடித்தமின்மை. இந்த பிடித்தத்துக்கும் பிடித்தமின்மைக்கும் இடையிலானவை தென்றலின் கவிதைகள்.

கடல் பற்றிய கவிதை

தண்ணீர் குறித்த

பயத்தைப் போக்க

கடற்கரைப் பக்கம் சென்றது

என் கவிதை

மூர்ச்சையாகி

ஓரமாய்க் கிடக்கிறதென

யாரோ சொல்லிவிட்டுச்

சென்றார்கள்

வீட்டிற்கு அழைத்து வந்து

தேநீர் கொடுத்து

தலை துவட்டிவிட்டேன்

அதன் பிறகு

கடலைப் பற்றி

நானோ

கவிதையோ

பேசியதாய்

ஞாபகமில்லை

தென்றல், கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர். சொந்த ஊர் பாண்டிச்சேரி. சென்னை தி.நகரில் தானியம் என்ற பெயரில் இயற்கை வேளாண் பொருட்கள் அங்காடி ஒன்றை நடத்திவருகிறார். ‘நீல இறகு’ என்ற ஒரேயொரு கவிதைத் தொகுப்பு உயிர்மை வெளியீடாக 2006-ல் வெளிவந்துள்ளது.


(பாதைகள் நீளும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x