Published : 14 Oct 2018 08:56 AM
Last Updated : 14 Oct 2018 08:56 AM

பார்வை: #நானும்கூட என்பதில் இருக்கும் ‘நான்’ யார்?

பெண்களின் ஒவ்வொரு முன்னகர்வும் வெற்றியும் கடும் எதிர்ப்புக்கிடையில்தான் நிகழ்ந்திருக்கின்றன என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. பெண்களுக்கு வாக்குரிமை கேட்ட உலக நாடுகளிலும் இதுவே நடந்தது.

இந்துப் பெண்களின் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்ட பிற உரிமைகளைப் பெற வழிவகை செய்யும் சட்ட மசோதாவை பாபாசாகேப் அம்பேத்கர் எத்தனை எதிர்ப்புகளுக்கு இடையில் முன்னகர்த்தினார் என்பதும், எல்லாவற்றுக்குப் பிறகும் அந்தச் சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியாத நிலையில் தனது அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார் என்பதும் இந்திய வரலாறு.

கிட்டாத பணியிடப் பாதுகாப்பு

பாலியல் வல்லுறவுக்கு நியாயம் பெற சட்டமே எதிராக இருந்ததும், அதற்கான நீண்ட நெடிய போராட்டங்களால் மட்டுமே ஓரளவுக்காவது மேம்பட்ட சட்டதிட்டங்கள் உருவாயின என்பதும் இன்னொரு வரலாறு. இதிலும் இன்னமும் பல ஓட்டைகள் இருப்பதும், குற்றம்சாட்டப்படுபவருக்கு இவை பயன்படுவதும், பாதிக்கப்பட்ட பெண்கள் எல்லாவிதமான எதிர்மறை விளைவுகளைச் சந்திப்பதும் தொடர்ந்துவருகின்றன.

சாதிய வன்மமாக நிகழும் பாலியல் வன்முறைகளுக்குப் பெரும்பாலும் நியாயம் கிடைப்பதில்லை. மாறாக, தலித் பெண்கள் மேலும் ஒடுக்குதல்களை சந்தித்துவருகின்றனர் என்பது பதிவுசெய்யப்பட வழக்குகளின் நிலையை ஆராய்ந்தால் தெரியவருகிறது.

இந்நிலையில் பாலியல் வல்லுறவு என வரையறுக்க முடியாத, அதனினும் குறைவான ஆனால் பெண்களின் உடல் மாண்புக்கும் அவர்களின் சுயாதீனத் துக்கும் ஊறுவிளைவிக்கும் பாலியல் வன்முறைகளை முதன்முறையாகச் சட்டத்தின் பார்வைக்குக் கீழ் கொண்டுவரும் விசாகா நெறிமுறைகளை 1997-ல் உச்ச நீதிமன்றம் ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரிதேவி வழக்கில் உருவாக்கியது.

தனது  ‘கிராம ஊழியர் பணி’யின் பகுதியாக ஒரு குழந்தைத் திருமணத்தைத் தடுக்க முனைந்தார் என்பதற்காகச் சாதி இந்து ஆண்கள், பன்வாரிதேவியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய வழக்கின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றம் இதை உருவாக்கியது.

97-ல் இருந்து வெறும் நெறிமுறையாக இருந்தது,  2013-ல் சட்ட வடிவம் பெற்றது. இதன் முக்கியக் கூறான, பெண்கள் பணிபுரியும் எல்லாப் பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் பற்றி புகார் செய்ய ஒரு ‘உள்ளகப் புகார் கமிட்டி’ அமைக்கப்பட வேண்டும் என்ற ஆணை இன்னமும் பல அரசு அலுவலகங்களில்கூட நடைமுறைக்கு வரவில்லை. கமிட்டி உருவாக்கப்பட்டுச் செயல்படும் இடங்களில்கூடப் பாதிக்கப்பட்ட பெண்களின் பெரும் போராட்டங்களின் விளைவாகவே இவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த கமிட்டிகளிலும் பல நேரம் எதிர்மறை விளைவுகளும், பெண்கள்தான் பிரச்சி னைக்குரியவர்கள் என்ற மனநிலை யும், ஆண்களின் பாலியல் எல்லை மீறல்கள் பற்றிய பாராமுகமுமே நிலவி வருகின்றன எனப் புகார் கொடுத்த பல பெண்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அடையாளம் காட்டுவது அவசியம்

இந்தப் பின்புலத்தில்தான் நாம் ‘#மீடூ’ அல்லது ‘#நானும்கூட’ என்ற சமூக வலைத்தள இயக்கத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. வட அமெரிக்காவில் 2006-ம் ஆண்டு தரனா புர்க் எனும் ஆப்பிரிக்க அமெரிக்க சிவில் உரிமைப் போராளி இந்த ஹேஷ்டேகைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பாலியல் அத்துமீறல்களைப் பதிவுசெய்தார்.

அது பல பெண்களும் தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களைப் பதிவுசெய்யும் ஒரு வெளியை உருவாக்கியது. பின்னர்  அமெரிக்கத் திரைத்துறையின் ஹார்வி வெய்ன்ஸ்டீன் எனும் தயாரிப்பாளர் ஏராளமான பெண்கள் மீது நிகழ்த்திய பாலியல் துன்புறுத்தல்களை அந்தப் பெண்கள் #மீடூவின் கீழ் பதிவுசெய்தனர். இந்தியாவின் பாலியல் வக்கிரர்களை அடையாளம் காண்பிக்கும் ‘#மீடூ’ பட்டியலைச் சட்ட மாணவி ரயா சர்க்கார் சென்ற ஆண்டு வெளியிட்டார்.

ஒரு முக்கிய கேள்வி ரயா சர்க்கார் பட்டியலின் மீது சில பெண்ணியவாதிகளால் எழுப்பப்பட்டது. அதுவே வேறு பல வடிவங்களிலும் வகைகளிலும் இப்போது வெளிவரும் குற்றச்சாட்டுகளின் மீதும் பலராலும் முன்வைக்கப்படுகிறது.  பொதுவெளி அம்பலப்படுத்துதல் என்பது நிரபராதிகளையும் பாதிக்க முடியும் என்பதே அது.

இது முக்கியமான கேள்விதான். ஆனால், பாலியல் வன்முறைகள் அது வன்புணர்வாக இருந்தாலும் கீழ்த்தரமான பலவகை துன்புறுத்தல்களாக இருந்தாலும் அவற்றை வெளியில் சொல்வதோ புகார் அளிப்பதோ இப்போதும்கூட பரவலான நிகழ்வாகவோ சுலபமானதாகவோ இல்லை.

‘கற்பழிப்பு’ என்ற சொல்லாடலே மிகச் சமீப காலம்வரை பயன்பாட்டில் இருந்தது. இப்போதும் சிலர் அதைப் பயன்படுத்துகின்றனர் என்பதிலேயே இந்த வன்முறை எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதை விளக்கும். ‘கற்பிழந்த’ பெண்களை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கும், நடத்தும் என்பதும் அவர்கள் மேலும் எத்தகைய வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற நிலையும் இந்தச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

ஆணுக்குத் துணைநிற்கும் சமூகம்

இங்கு உண்மையில் நாம் பார்க்க வேண்டிய விஷயம் Impunity. பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டால் தனக்குத் தண்டனையோ எதிர்ப்போ வரும் என எந்த அச்சமும் இல்லாமல் ஆண்கள் மிக சகஜமாக நடந்துகொள்ளும் இந்த அறமற்ற நிலை இன்னமும் சமூகத்தில் தொடர்கிறது. இப்போதைய #மீடூவில் வந்திருக்கும் சம்பவங்களைப் பார்த்தாலே இது தெரியும்.

சாதாரணமான அலுவல் கூட்டங்களில் பெண்களை முறைதவறித் தொடுவது, மின்தூக்கியில் அத்துமீறுவது, வேலை பார்க்கும்போது பின்னால் இருந்து வந்து பிரா பட்டையை இழுப்பது, பாட்டு கற்றுக் கொள்ள வந்த பதின்பருவச் சிறுமியின் மார்பகங்களைத் தொடுவது, காரில் உடன்வரும் சக கலைஞரை அத்துமீறித் தொடுவது என ஏதோ இவையெல்லாம் அவர்களின் தினசரி நடவடிக்கைகள் போலவே பல வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன.

பதிவு செய்யும் பெண்கள் பலரும் அந்த அலுவலகத்தையோ துறையையோ விட்டு விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

me-too-2jpg

யாரும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது என்னும் ஆணவத்தோடு இந்த வக்கிரர்கள் பிற பெண்களிடமும் இப்படியான தமது வன்செயல்களைத் தொடர்ந்திருக்கின்றனர். இது சுற்றியிருக்கும் ஆண்கள், பெண்கள் பலருக்கும் தெரிந்தே நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்தான் அதற்கு உடனடியாக ஏதாவது செய்திருக்க வேண்டும் என நினைக்கும் இந்தப் போக்கு, பாலியல் குற்றமிழைக்கும் ஆண்களுக்குத் துணை நிற்கிறது.

பாலியல் துன்புறுத்தல்களை வெளியில் சொல்லும் பெண் அனுபவிக்கும் துயரத்தில், வலியில், அவமானத் தில் ஒரு சிறு பகுதிகூடக் குற்றம்சாட்டப்பட்ட ஆண் அனுபவிப்பதில்லை என்பதே நமது சமூக யதார்த்தம். ‘#மீடூ’வில் பதிவு செய்திருக்கும் நஸ்ரின்கான் மற்றும் தனுஸ்ரீ தத்தா ஆகியோர் காவல்துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதற்கு மேலாக, அதன் பொருட்டு மேலும் துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி வந்ததையும் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

பொதுவெளியில் அம்பலப்படுத்துதல் என்பது பெண்களிடையே ஆதரவு நிலைகளை உருவாக்கவும் பாலியல் வக்கிரர்கள் குறித்து எச்சரிக்கைகளைப் பரப்பவும் முக்கியம் என ரயா சர்க்கார் முன்னர் குறிப்பிட்டிருந்தார். நிர்பயா வழக்கு குறித்தும் அதற்கு மட்டுமே கிடைத்த ஊடக வெளிச்சம் பற்றியும் நமக்குப் பல விவாதங்கள் இருந்தாலும், அந்தப் போராட்டத்தின் விளைவாகப் பாலியல் வல்லுறவு வழக்குப் பதிவுகள் அதிகரித்திருக்கின்றன என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்தி விடுவார்களோ என்ற சந்தேகத்தில் இப்படியான ஒரு வரலாற்று நகர்வை நாம் பின்னகர்த்த வேண்டியதில்லை.

அனைவருக்கும் சமவாழ்வு

பாலியல் வன்முறை மிக மோசமான வன்முறைச் செயல். அது பெண்களின் உடல் மாண்பை மறுதலிக்கும் அத்துமீறல். ஆழமான வலியையும் சமூக வளர்ப்பின் காரணமாக அவமானத்தையும் குற்றவுணர்வையும் ஒருங்கே ஏற்படுத்தும் செயல். இதை வெளியில் சொல்ல முடியும் ஒரு பொதுவெளி மட்டும்தான் தவறான குற்றச்சாட்டுகளை இனம் காண உதவும். பாதிக்கப்படு பவர்களுக்கு நியாயம் கிடைக்கவும் நாம் அனைவரும் சமமான மனிதர்களாய் சகவாழ்வு வாழவும் வழி செய்யும்.

இன்னொரு முக்கியக் கேள்வி இருக்கிறது. அது இந்த ‘#மீடூ’ அல்லது ‘#நானும்கூட’ பரப்புரையில் இருக்கும் ‘நான்’ யார் என்பது?  ‘தலித்விமன்பைட்’ என்னும் தலித் பெண்கள் அமைப்பினர் இப்படி எழுதியிருக்கின்றனர்.

“தலித் பெண்களாக, நாங்கள் இந்த அறிக்கையைச் சிக்கல் நிறைந்த கடினமான சூழலில் எழுதுகிறோம். #மீடூ எனும் #நானும்கூட இயக்கத்தின் ‘நான்’ யார் என நாங்கள் யோசித்துப் பார்க்கிறோம். இப்போதைய இந்தச் சட்டகத்தில் எங்களுக்கு இடம் இல்லை. பலவகைப்பட்ட வன்முறைகளை நாங்கள் எதிர்க்கும் புள்ளியாக எமது கூட்டுப் போராட்ட உணர்வே இருந்துள்ளது.

சாதியப் படிநிலைகள் நிலைப்படுத்தப்பட்ட ஒரு சமூகம் பலகாலமாக எங்களது தனித்துவமான மாண்பை மறுத்து எமது வாழ்வை வெறும் செய்தியாகவோ புள்ளி விவரமாகவோ குறுக்கியிருக்கிறது.

எமது போராட்டங் களின் அணுகுமுறைகள் பலவாக இருந்தாலும் எமது போராட்ட மொழி எப்போதுமே ஒட்டுமொத்த மாற்றமாக இருந்திருக்கிறது. சாதி எதிர்ப்புப் பெண்ணியவாதிகளாக நாங்கள் சாதியைத் தகர்த்து, கூடவே பாலினச் சமத்துவத்தை நோக்கி நகரும் ஒரு உலகைக் கட்ட விரும்புகிறோம்.”

தற்போது தமக்கேற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்திவரும் பெண்களுக்கு முழுமையான ஆதரவு அளிக்கும் இந்த அறிக்கை, சாதி மற்றும் ஆணாதிக்கத்தின் ஊடுபரவலை இனம்கண்டு பேசாமல் போனால் ‘#மீடூ’ இயக்கம் தலித் பெண்களைப் பொறுத்தவரை அர்த்தமற்றதாகப்போய்விடும் என எச்சரித்திருக்கிறது.

இந்த எச்சரிக்கையைக் கவனத்தில் வைத்து இந்தப் பாலியல் பாகுபாடு எதிர்ப்பு தருணம் ஒரு இயக்கமாக மாறினால் அவர்கள் சுட்டும் சமத்துவ உலகை நோக்கி நாம் நகர முடியும்.

- ப்ரேமா ரேவதி
கட்டுரையாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: revathi.work@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x