Last Updated : 14 Oct, 2018 09:21 AM

 

Published : 14 Oct 2018 09:21 AM
Last Updated : 14 Oct 2018 09:21 AM

மகளிர் திருவிழா: மங்கையரை மகிழ்வித்த விழா!

‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில், கோயில் நகரம் என அழைக்கப்படும் கும்பகோணத்தில் அக்டோபர் 7 அன்று மகளிர் திருவிழா நடைபெற்றது. கும்பகோணம் சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி அரங்கில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் மழை எச்சரிக்கையையும் மீறி வாசகிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.  

நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை ஆரத்தியெடுத்து வரவேற்றார், ‘பெண் இன்று’ வாசகி மைதிலி. கும்பகோணம் முதலாம் எண் நீதிமன்ற நீதிபதி ஏ.சண்முகப்பிரியா, மாவட்ட அரசுத் தலைமை  மருத்துவமனை மருத்துவர் எஸ்.விமலா இருவரும் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினர். 

நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி ஏ.சண்முகப்பிரியா, பெண்களைப் பாதுகாக்க ஏராளமான சட்டங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

“பெண் சிசுக்கொலைத் தடுப்புச் சட்டம், பெண்களின்  கல்வியை உறுதிசெய்யும் பெண் கல்விச் சட்டம், வரதட்சிணை, கணவர் - அவருடைய குடும்பத்தினரால் நிகழ்த்தப்படும் வன்முறை குறித்துப் புகார் தெரிவிக்க  குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், விவாகரத்துச் சட்டம், வயதான பெற்றோரை மகளோ மகனோ பராமரிக்கவில்லையென்றால் அவர்கள் மீது வழக்கு தொடுத்து, ஜீவனாம்சம் கொடுக்க வலியுறுத்தும் சட்டம் எனப் பெண்களைக் கருவறை முதல் பாதுகாக்கும் சட்டங்கள் நம் நாட்டில் உள்ளன.

அவற்றை முறையாகப் பயண்படுத்த வேண்டியது பெண்களின் கடமை” என்றார். மேலும், பொதுவாக ஆண்களைவிடப் பெண்களே திறமைசாலிகள் என ஆய்வுகள் கூறுகின்றன என்றும் ஆண்கள் ஒரு நேரத்தில் ஒரு வேலையைச் செய்தால் அதே நேரத்தில் பெண்கள் பல வேலைகளைச் செய்து முடித்துவிடுவார்கள் என்றும் தெரிவித்தார். 

பிறந்தோம், வளர்ந்தோம் என்றிருக்காமல் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று உற்சாகமூட்டிய அவர், தடைகளைத் தகர்த்துச் சாதனை படைத்த பெண்களை முன்னுதாரணமாகக் கொண்டு நாமும் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை பெண்களுக்குக் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

வளர்ந்துள்ள நவீனத் தொழில்நுட்பங்கள் பல பெண்களுக்கு எதிரானதாகச் செயல்படுத்தப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், டப்ஸ்மாஷ், செல்ஃபி போன்றவை திருட்டுத்தனமாகப் பிறரால் எடுக்கப்பட்டுத் தவறாகப் பயன்படுத்தப் படக் கூடும் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

மனதை வலுப்படுத்தும் உடல்

மருத்துவர்  எஸ்.விமலா, “பெண்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றால் அவர்களுக்கு மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல், மனம்  இரண்டின் ஆரோக்கியமும் பெண்களுக்கு முக்கியம். இப்போது பெரும் பாலான பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். வீடு, அலுவலகம் என இரண்டு இடங்களிலும் வேலை செய்வதால் தங்கள் நலனில் அக்கறை செலுத்து வதில் கவனக்குறைவாக உள்ளனர். உடற்பயிற்சி செய்யச் சொன்னால் பலரும் நேரமில்லை என்கின்றனர்.

ஆனால், நமக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உள்ளது. நாம் சொல்வதைச் செய்யும் நம் உடம்பை நாம் பராமரிக்க வேண்டுமல்லவா? அதற்கான நேரத்தை நாம் ஒதுக்கித்தான் ஆக வேண்டும். அதிகாலையில் எழுவதற்குப் பழக வேண்டும். எழுந்ததும் முதல் அரை மணி நேரம் உடற்பயிற்சி, யோகா போன்ற சிறு சிறு உடற்பயிற்சிகளைச் செய்வது நல்லது.  உடற்பயிற்சி செய்தாலே மனம் சம்பந்தமான பிரச்சினைகள் வராது.

குறிப்பாக மன உறுதி அதிகரிக்கும், சோர்வு நீங்கும், எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். அதிகாலையில் எழுவதால் நமக்கு நிறைய நேரம் கிடைக்கும். நாம் உடற்பயிற்சி செய்தால்தான் குழந்தைகளும் அதைப் பின்பற்றுவார்கள். இந்த அவசர உலகத்தில் பொறுமையாகச் செயல்பட உடற்பயிற்சி உதவும். நிதானம், பொறுமை போன்றவற்றுக்கு அடிப்படைக் கருவியாக இருப்பது உடற்பயிற்சிதான்” என்றார். 

ஆபத்துக்கு உதவும் எண்

சமையல் எரிவாயு சிலிண்டர்களை எப்படிக் கையாள்வது என இந்தியன் ஆயில் விற்பனை அதிகாரி ரோஷ்ணி விளக்கினார். “திடீர் மின் அழுத்ததால் ஏற்படும் மின்கசிவுதான் பல வீடுகளில் சிலிண்டர் வெடிப்புக்குக் காரணம். இதனால் வெளியூர்களுக்குச் செல்லும்போது கண்டிப்பாக மெயின் சுவிட்சை அணைத்துவிட்டுச் செல்ல வேண்டும்.  எரிவாயு கசிவு ஏற்பட்டால் 1906 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். இந்த எண் 24 மணி நேரமும் செயல்படும்” என்றார் அவர்.

இதையடுத்து ‘இன்றைய தேதியில் குழந்தை வளர்ப்பில் யாருக்குப் பங்கு அதிகம் ஆண்களுக்கா பெண்களுக்கா’ என்ற தலைப்பில் விறுவிறுப்பான பேச்சரங்கம் நடந்தது. நடுவராக திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரித் தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியை முனைவர் ந.விஜயசுந்தரி தலைமை வகித்தார்.

குழந்தை வளர்ப்பில் அதிகம் பங்கெடுப்பவர்கள் பெண்களே என கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியை ஜெயவாணிஸ்ரீயும் ஆண்களே என குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியை இந்திராகாந்தியும் தங்களுடைய வாதங்களை முன்வைத்தார்கள். இறுதியில் “இன்றைய இயந்திரத்தனமான சூழலில் அன்புக்கு அன்னையும் அறிவுக்குத் தந்தையும் என இருவருடைய பங்கும் தேவை” எனத் தீர்ப்பளித்தார் நடுவர்.

அன்னை கலைக் கல்லூரி மாணவிகளின் ஒயிலாட்டம், கரகாட்டம், பறையாட்டம் போன்றவை வாசகிகளை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தின.

இடைவிடாத பரிசு மழை

மதிய உணவுக்குப் பிறகு வாசகிகளைக் குதூகலப்படுத்தும்விதமாக ரங்கோலிப் போட்டி, பந்து  கடத்தும் போட்டி, பலூன் உடைக்கும் போட்டி, மைம் நடிப்புப் போட்டி எனப் பல்வேறு போட்டிகள் நடந்தன. கணவருக்குக் காதல் கடிதம் எழுதும் போட்டியில் வெற்றிபெற்ற வாசகியரின் கடிதங்களைப் படித்தபோது அரங்கம் முழுக்கக் கரவொலி! இடையிடையே ஆச்சரியப் போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாலை நிகழ்ச்சியைச் சின்னத்திரை தொகுப்பாளர் தேவி கிருபா தொகுத்து வழங்கினார். போட்டிகளில் வென்ற வாசகிகளுக்குப் பல வகையான வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. அது மட்டுமல்லாது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நிச்சயப் பரிசுகள் வழங்கப்பட்டன. ராஜேஸ்வரி, ஷாலினி, துர்காதேவி ஆகியோருக்குச் சிறப்பு பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டன.

கும்பகோணம் மகளிர் திருவிழாவை ‘இந்து தமிழ்’ நாளிதழுடன் சேர்ந்து  ஜெப்ரானிக்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், சௌபாக்யா, ஜீ டிவி, மந்த்ரா கோல்டு கோட்டிங்ஸ், அணில் புட்ஸ், பொன்மணி வெட்கிரைண்டர், மூன்லைட் போட்டோகிராபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திப் பரிசுகளை வழங்கின. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x