Last Updated : 14 Oct, 2018 09:21 AM

 

Published : 14 Oct 2018 09:21 AM
Last Updated : 14 Oct 2018 09:21 AM

ஆடும் களம் 23: ரன் சுனிதா ரன்!

மாரத்தான் போட்டியில் பெண்கள் பங்கேற்பதை ஏளனமாகப் பார்த்த காலம் உண்டு. முழுக்க முழுக்க உடல் வலிமையோடு தொடர்புடைய இந்த விளையாட்டை மேற்கத்திய நாடுகளிலேயே 1960-களில்தான் பெண்கள் ஈடுபடத் தொடங்கினர். பாலின பேதம் நிறைந்திருந்த இந்தியாவில் மாரத்தான் ஓட்டப் போட்டியில் பெண்கள் ஈடுபடுவதெல்லாம் பெரும் கனவு. ஆனால், அந்தக் கனவை நனவாக்கியவர் மாரத்தான் வீராங்கனை சுனிதா கோதரா. இவர் இந்தியாவின் மாரத்தான் ஜாம்பவான் என்று போற்றப்படுபவர்.

சுனிதா கோதராவின் சொந்த ஊர் டெல்லி. சிறு வயதில் நடனத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்த சுனிதாவுக்கு நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டுவது என்றால் அலாதி பிரியம். பள்ளியில் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றபோதுதான் தடகளத்தின் மீது காதல் வந்தது. குறைந்த தூர ஓட்டப் போட்டிகளில் பங்கேற்பதைவிட நீண்ட தூரப் போட்டிகளில் விளையாடத்தான் சுனிதா முன்னுரிமை கொடுத்தார்.

அதற்கு அவரது ‘சைக்கிளிங்’ ஈடுபாடும் ஒரு காரணம். பதின் பருவத்திலிருந்துதான் நீண்ட தூரப் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். இத்தனைக்கும் அப்போது முன்மாதிரியாகக் கொள்ள மாரத்தான் வீராங்கனைகள் இந்தியாவில் இருந்ததில்லை. ஆனாலும், அந்த விளையாட்டின் மீதான ஆர்வம் அவருக்கு அதிகரித்தது.

தேசிய சாம்பியன்

இப்போது பரவலாக நடப்பதுபோல விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டங்கள் அப்போது குறைவு. அதனால், தினமும் சாலைகளில் நீண்ட தூரம் ஓடி தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.  1984-ம் ஆண்டில் டெல்லியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆர்வமாகப் பங்கேற்றார் சுனிதா.

 போட்டியாளராக சுனிதா பங்கேற்ற முதல் மாரத்தான் போட்டியும் இதுதான். அதில் வெற்றிபெற்று கவனம் ஈர்த்தார். மாரத்தான்  தேசிய சாம்பியன் என்று அவரை பெருமையோடு அழைத்தார்கள்.

முதல் வீராங்கனை

இதன் பின்னர் 1985-ம் ஆண்டில் பாஸ்டன் மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். ஏராளமான வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் 42.2 கிலோ மீட்டர் தூரத்தை 3:30 மணி நேரத்தில் கடந்து சாதனை புரிந்தார். இதே காலகட்டத்தில் மலேசியாவின் பினாங்கு நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பதக்கம் வென்று ஆச்சரியமூட்டினார்.

aadum-2jpgright

தொடர்ச்சியாக உலகின் பல்வேறு நகரங்களில் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றபடியே இருந்தார் சுனிதா. 1990-ம் ஆண்டு இங்கிலாந்தில் ‘வேர்ல்டு கிளாஸ் ரேஸ்’ நடைபெற்றது. இந்தப் போட்டியில் பந்தய தூரத்தை 2:49:21 மணி நேரத்தில் கடந்து வெற்றிபெற்றார். இதன்மூலம் ‘வேர்ல்டு கிளாஸ் ரேஸ்’ தொடரில் வெற்றிபெற்ற முதல் இந்திய வீராங்கனையானார் சுனிதா.

ஆசிய சாம்பியன்

1991-ம் ஆண்டு டெல்லியில் அரை மாரத்தான் (21.1 கிலோ மீட்டர்) போட்டியில் பங்கேற்ற சுனிதா, போட்டி தூரத்தை  1:16 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்தார். இந்தியாவில் அவரது மிகச் சிறந்த ஓட்டமாக இது அமைந்தது. அவருக்குப் பேர் சொல்லும் போட்டியாக அமைந்தது, ஆசிய மாரத்தான் போட்டிதான்.

1992-ம் ஆண்டில் ஜகார்தாவில் ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில்  42.2 கிலோ மீட்டர் தூரத்தை 2:43:33 மணி நேரத்தில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். ஆசிய மாரத்தான் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்ணானார். அவரது வாழ்நாளில் மிகச் சிறந்த வெற்றியாக இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒலிம்பிக் கவுரவம்

1993-ம் ஆண்டில் பாரிஸ் மாரத்தான் போட்டியில் முழு மாரத்தான் (42.2 கிலோ மீட்டர்) தூரத்தை 2:43:33 நேரத்தில் ஓடிக் கடந்தார். அதே ஆண்டு இத்தாலியில் நடந்த அரை மாரத்தான் போட்டியில் 21.1 கிலோ மீட்டர் தூரத்தை 1:16 மணி நேரத்திலும் ஓடி சாதனை புரிந்தார். இந்த இரு ஓட்டங்களும் சர்வதேச அளவில் அவரது சிறந்த ஓட்டமாக கருதப்படுகின்றன.  1996-ம் ஆண்டில் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச்செல்லும் கவுரவம் இவருக்கு வழங்கப்பட்டது.

பதக்கங்கள் குவிப்பு

1984-ம் ஆண்டு தொடங்கிய சுனிதாவின் மாரத்தான் பயணம் 2009-ம் ஆண்டுவரை நீடித்தது. இந்த 25 ஆண்டு காலப் பயணத்தில் அவரது காலடித் தடம் படாத நாடுகளே இல்லை. சர்வதேச அளவில் 76 முழு மாரத்தான் போட்டிகளிலும் 200-க்கும் மேற்பட்ட அரை மாரத்தான் போட்டிகளிலும் சுனிதா பங்கேற்றிருக்கிறார். இவற்றில் 23 அரை மாராத்தான் போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறார். இந்தியாவுக்காக அதிக மாரத்தான் போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீராங்கனையும் இவர்தான்.

இந்தக் காலட்டத்தில் தேசிய, சர்வதேச அளவில் நடந்த முழு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று 25 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என 50 பதக்கங்களைக் கைப்பற்றியிருக்கிறார் சுனிதா. அரை மராத்தானில் 90-க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவித்திருக்கிறார். சர்வதேச மாரத்தான் பயணத்தில் மொத்தமாக 1,05,00 கி.மீ. தூரம் ஓடியிருக்கிறார்.

aadum-3jpg

சுனிதாவின் உத்திகள்

மாரத்தான் போட்டி என்பது நீண்ட தூரம் ஓடக்கூடிய விளையாட்டு. உடலும் உள்ளமும் உற்சாகமாக இருந்தால்தான் மாரத்தான் போன்ற பெரிய விளையாட்டுகளில் பங்கேற்க முடியும். இதற்கு முதலில் உடல் வலுவாக இருக்க வேண்டும். மாரத்தான் போட்டியை முழுமையாக ஓடி முடிப்பதற்குக் கடின பயிற்சியும் தேவை.  ‘ஃபேர்ட்லெக்’ எனப்படும் மெதுவாக - வேகமாக ஓடிப் பயிற்சி எடுத்துக்கொள்ளும் உத்தியை சுனிதா கையாண்டார். இவற்றையெல்லாம் பின்பற்றியதால்தான் சுனிதாவால் சாதிக்க முடிந்தது. மாரத்தானில் இந்திய வீரர்களுக்கு முன்மாதிரியாகவும் மாறினார்.

தற்போது ஹெல்த் ஃபிட்னஸ் அறக்கட்டளை மற்றும் ஹெல்த் ஃபிட்னஸ் சொசைட்டியை சுனிதா நடத்திவருகிறார். இந்த அமைப்பின்மூலம் உடற்பயிற்சி, மாரத்தான் பயிற்சி ஆகியவற்றைக் குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு வழங்கிவருகிறார்.

தற்போது 58 வயதை எட்டிவிட்டபோதும் ஓடுவதை சுனிதா இன்னும் நிறுத்தவில்லை. அவ்வப்போது நடக்கும் மாரத்தான் ஓட்டங்களில் ஓடிக்கொண்டே இருக்கிறார். இதற்காகவே தினமும் 7 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடிப் பயிற்சி எடுப்பதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கிறார். ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன அவரது கால்கள். அவர் ஒரு பிறவி வீராங்கனை!

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x