Published : 14 Oct 2018 09:22 AM
Last Updated : 14 Oct 2018 09:22 AM

என் பாதையில்: யாருக்கான ரயில் பெட்டி?

நம்மில் பலரும் ரயிலில் பயணம் செய்திருப்போம். முன்பதிவு செய்தோ செய்யாமலோ சென்றிருப்போம். நாம் பயணிக்கும் எல்லா ரயில்களிலும் பெண்களுக்கென்று தனிப் பெட்டிகள் ஒதுக்கப்பட்டிருக்கும். அவை அனைத்தும் முன்பதிவு செய்யப்படாதவையே.  அந்தப் பெட்டிகளில் பயணம் செய்யும் அனைவருக்கும் போதுமான அளவில் இருக்கைகள் உள்ளனவா என்பது கேள்விக்குறியே.

பயணிகள் அனைவரும் பயணச் சீட்டு எடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் அரசும் அதிகாரிகளும் பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்யத் தவறுவது ஏன்? வெளியூர்களுக்குச் செல்லும் ரயில் பெட்டிகளில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பெட்டிகளின் அளவைப் பார்த்தால் தீப்பெட்டிகூட கொஞ்சம் பெரியதாக இருக்குமோ எனத் தோன்றும். விதிவிலக்காக சில ரயில்களில் பெண்களுக்கென இரண்டு, மூன்று பெட்டிகள் இருக்கலாம்.

பெண்களின் தலைவிதியோ என்னவோ இருபது பேர் பயணம் செய்ய வேண்டிய பெட்டியில் நூறு பேர் பயணம் செய்ய நேர்கிறது. அது பயணிகள் ரயிலா அல்லது பொருட்கள அடைத்து எடுத்துச் செல்லும் சரக்கு ரயிலா? சிறிய பெட்டியில் அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் பயணிக்க நேர்வதால் சண்டையும் சச்சரவும் சகஜம். நீ இடம் கொடு, நான் இடம் தர முடியாது என்று புதிய நண்பர்கள் கிடைக்க வேண்டிய இடத்தில் எதிரிகளையே சம்பாதித்துக்கொள்ள வேண்டியதாக உள்ளது.

இந்தக் கூட்ட நெரிசலில் பல பெண்கள் கழிவறையில்கூட உட்கார்ந்துக்கொண்டு கதவைப் பூட்டிக்கொள்வார்கள். ஏனென்றால் வேறு யாரும் வந்து அந்த இடத்தையும் பிடித்துக்கொள்ள கூடாது என்பதுதான்.

வேறு வழியில்லாமல் சில பெண்கள் படிகளில் உட்கார்ந்துகொண்டு வருவார்கள். சொந்த ஊருக்குப் போய் சேர்ந்தால் போதும் என்ற நிலைமையில் விழாக்காலங்களில் பெரும் அவஸ்தையோடுதான் பெண்கள் பயணம் செய்யவேண்டியுள்ளது.  பசிக்குச் சாப்பிடக்கூட முடியாத நெருக்கடி நிலை. சில மணி நேரப் பயணம் என்றால்கூட பரவாயில்லை. பல மணி நேரம் பயணம் செய்யும்போது ஆசுவாசமாக அமர்ந்து பயணிக்கக்கூட முடியவில்லை என்றால் என்ன செய்வது? முறையான பயணச்சீட்டு பெற்றும், அதற்குத் தகுந்த பயணத்தை மேற்கொள்ள முடிவதில்லை.

பெண்களின் பாதுகாப்பு கருதியே பெண்களுக்கென தனிப்பெட்டிகள் ரயிலில் சேர்க்கப்பட்டன. ஆனால் அவையே பெண்களின் நிம்மதியான பயணத்துக்கு ஊறு விளைவிக்கின்றன. ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ரயில்வே துறைக்குப் பல கோடிகள் ஒதுக்கப்படுகின்றன. புதிய ரயில்கலும் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெண்கள் பெட்டிகளின் எண்ணிக்கை மட்டும் விரிவுப்படுத்தபடாமலேயே உள்ளது.

பெண்கள் என்றால் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும், பயணங்கள் அவர்களுக்கு உகந்தவை இல்லை என்ற ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடுதான் பெண்களுக்கான பெட்டி அளவிலும் எண்ணிக்கையிலும் குறுகி இருக்கக் காரணம். 

-  ச. நி. தாரணி தேவி,  தருமபுரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x