Published : 07 Oct 2018 03:04 PM
Last Updated : 07 Oct 2018 03:04 PM

கற்பிதமல்ல பெருமிதம் 26: ஏன் அனைத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும்?

ஏன் அனைத்தையும் சகிக்க வேண்டும்?மாலை முழுவதும் கல்யாண ரிசப்ஷனில் நின்று களைத்துப்போயிருந்தாள் சந்தியா. தூக்கம் கண்களைச்  சுழற்றியது. கால் வலி வேறு.

ஆனால், முந்தைய நாள்வரை அவள் தூக்கத்தை அவள் மட்டுமே நிர்ணயித்தாள்.  இன்று காலை திருமணத்துக்குப் பிறகு அது சாத்தியமா எனத் தெரியவில்லை. அவளுடைய கணவன் நிர்மல், முதலிரவு அறையில் மிகவும்  மலர்ச்சியாக ஆவலுடன் இருந்தான். அவள் மிக அழகாக இருப்பதாகச் சொல்லிவிட்டு, போனையும் செல்ஃபி எடுக்கும் குச்சியையும் எடுத்து,  கட்டிலின் ஒரு பக்கப் பிடியில் பொருத்தினான். சந்தியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன செய்கிறான் எனக் கேட்டாள். முழு இரவையும் வீடியோ எடுக்கப்போவதாகச் சொன்னான்.

சந்தியாவுக்கு  அதிர்ச்சியாக இருந்தது. எதற்கு என்று பதற்றத்துடன் கேட்டாள். செல்ஃபி குச்சியிலிருந்து மொபைலை எடுத்தவன், அவளை அருகில் அமரச் சொல்லி ஒரு வீடியோவைக் காட்டினான்.

சந்தியா அதிர்ந்துபோனாள். படுக்கை அறையில் இருவர்  அன்னியோன்யமாக இருந்த காட்சி அது. அந்த இருவரும் நிர்மலின் நெருங்கிய தோழனும் அவன் மனைவியும்.

“அவங்க எல்லாம் நெருக்கமா இருந்ததை என்கூட ஷேர் பண்ணிக்கிட்டாங்க. இப்ப நம்மோட முறை” என்றான்  நிர்மல்.

சந்தியா தீர்மானமாக மறுத்துவிட்டாள்.

மறுநாள் அம்மாவிடமும் சித்தியிடமும் அப்பாவிடமும் தனக்கு இந்தத் திருமணம் வேண்டாம் என்று அழுதாள். அம்மாவும் சித்தியும் தனியாக அழைத்துக்கொண்டு போய், “முதலிரவு  முதலில் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். போகப் போகப் பழகிவிடும்” என்றார்கள்.

சந்தியா  பொறுக்க மாட்டாமல் வீடியோ வன்முறையைப் பற்றிச் சொன்னாள். அம்மாவும் சித்தியும் அதிர்ந்தனர். உண்மையான காரணத்தை நிறையப் பேரிடம் சொல்லாமல் விவாகரத்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

சந்தியாவின் முதலிரவு  வன்முறைக்குக் காரணம் என்ன? மாறிவரும்  தொழில்நுட்பம் மட்டும்தானா? நம்  மனநிலையும்தானே.

தாலி கட்டிக்கொண்டதால் கணவன் விரும்பியபோதெல்லாம் மனைவி அவன் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும், ஆண் என்றால் அப்படித்தான் இருப்பான், அவன் உடற்கூறு அப்படி, பெண்தான் பொறுத்துப் போக வேண்டும்  என்றுதானே பெண்ணுக்குப் போதிக்கப்படுகிறது. பாலியல் குறித்துப் பெண்ணின் அறிவு என்ன, எதிர்பார்ப்பு என்ன என்று தெரியாமலேயே தாலி கட்டியதால் பெண்ணின் உடல் மேல், வாழ்க்கை மேல் தனக்கு முழு அதிகாரம் இருப்பதாக ஆண் நம்புகிறான்.

திருமண வல்லுறவு சரியா?

இப்படிக் கட்டமைக்கப்படும் ஆண் மனதுதான்  படுக்கையறையில் வீடியோ படம் எடுப்பது பற்றிய குற்றவுணர்வு  இல்லாமல் இயங்குகிறது. பெண் இதை எப்படிச் சகிப்பாள்? ஏன் சகிக்க வேண்டும்?

சில நாடுகளில் உள்ளதுபோல இந்தியாவிலும்  marital rape (திருமண பந்தத்துக்குள் பாலியல் வல்லுறவு) தண்டனைக்குரியது என்று சட்டம் வந்தால்  என்னவாகும்? இன்றைக்குக் குடும்பம் என்ற அமைப்பு, பொருளாதாரரீதியாக, வேலைச் சுமைரீதியாகப் பெண்களை ஒடுக்குவதுபோல், பாலியல்ரீதியாகவும் ஒடுக்குகிறது. பொருளாதாரரீதியாகத் தன் காலில்  நிற்பதை நிறுவும் பெண்ணைத் திமிர் பிடித்தவள் என்கிறது. பாலியல்ரீதியாகத் தேர்வு தேடும் பெண்ணைக் கீழ்த்தரமாக விமர்சிக்கிறது. ஆனால், அவளோடு உறவுகொள்ளும் ஆணை இப்படிச் செய்யாதே என்று யாரும் சொல்ல முற்படுவதில்லை.

சட்டப்பிரிவு 497-ஐ ஒட்டிவந்த  தீர்ப்பை  முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், “இனிமேல் திருமணத்தைத் தாண்டிய உறவு வைத்துக்கொள்ளலாம்” என்று ஆணின் மனது கீழ்த்தரமாக அணுகுகிறது. இந்தத் தீர்ப்பு பற்றி அலசும் சுதந்திரமான பெண்களை அவர்களால் ஏற்க முடியவில்லை.

வேலை செய்தால் பொண்டாட்டிதாசனா?

ஏன், ‘கள்ளக் காதலன்’ (இந்தச் சொல்லே விவாதத்துக்குரியது என்பது வேறு விஷயம்) என்ற சொற்பிரயோகம்போல், ‘கள்ளக் காதலி’ அதிகம் இல்லை? ஆண் ‘கள்ள’ உறவில் ஈடுபடலாம். ஆனால், பெண் ஈடுபட்டால் அந்த ஆண் கள்ளக் காதலன் ஆகிவிடுவான். நீதிமன்றத்தில் சமீபத்திய சில தீர்ப்புகளையொட்டி முகநூலிலும் தனிப்பட்ட பேச்சுகளிலும் குடும்பம் என்ற  அமைப்பு திரும்பத் திரும்ப தூக்கிப் பிடிக்கப்படுகிறது.

கூடவே இந்தியப் பாரம்பரியம், கலாச்சாரம் என்ன ஆகுமோ என்ற பொய்யான கவலையும் முன்வைக்கப்படுகிறது. ஆண்களும் பெண்களும் இங்கு ஆண்தான் பிரதானம், பெண் அவனுக்குக் கீழ் என்ற கருத்தாக்கத்திலேயே  வளர்க்கப்படுகிறார்கள்.  குடும்ப வாழ்க்கையில் பெண்ணுக்கு அனுசரணையாக இருக்கும்

ஆணை எப்படி அணுகுகிறோம்? தனக்குச் செய்யாத வீட்டு வேலைகளை அவன் தன் மனைவிக்குச்  செய்தால்  காலத்துக்கு ஏற்றாற்போல் அவன் ஈடுகொடுக்கிறான் என்றுதானே பாராட்ட வேண்டும்? ஆனால், அவனைப் ‘பொண்டாட்டிதாசன்’ என்று அவன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களே கிண்டல் செய்கிறார்கள்.  இதற்கு, பெண்களே பெண்களுக்கு எதிரி என்று  சாயம்  பூசப்பட்டுவிடுகிறது. தன்னைவிடச் சுதந்திரமாக இயங்கும்  ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணால்  ஏற்க முடியவில்லை. தனக்குக் கிடைக்காதது,  தன் மருமகளுக்குக் கிடைக்கிறது என்ற  பொறாமை உணர்வே இப்படிப் பேசவைக்கிறது.

விடுதலை அடையாத மனது

அலுவலகத்தில் பதவி உயர்வு நேரத்தில் ஆண்கள் இப்படிப் பேசுவது இல்லையா? குலம் சார்ந்து,  பாலினம் சார்ந்து பதவி

உயர்வு அளிக்கப்படும்போது கொந்தளிப்பது இல்லையா? அதே மாதிரிதான் இதுவும். விடுதலை அடையாத மனதுதான் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம்  என்றெல்லாம் பேசும். விடுதலை அடைந்த மனத்தில் பொறாமையும் இருக்காது. குற்றவுணர்வும் இருக்காது.

தனக்கு இருக்கும் சுதந்திரம், மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும் என்று அந்த மனது நினைக்கும். அப்படியான மனநிலை இல்லாததால்தான், இந்தத் தீர்ப்புகள் பலரையும் பலவிதமாகப் பேசவைக்கின்றன; இயங்க வைக்கின்றன.

குடும்பம் யாருக்கு நல்லது?

குடும்பம் என்பது ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தின் மூலம் இணைந்து உருவாக்குவது.  ஆனால், பெரும்பாலும்  குடும்பம் என்ற அடிப்படை அலகு பெண்களுக்குப்  பாதுகாப்பையும் அன்பையும் பலத்தையும் தருவதைவிட அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும் அலகாக ஆகிப்போனது எதனால்?

திரும்பவும் குழந்தை வளர்ப்பில்தான் போய் நிற்க வேண்டியுள்ளது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் குடும்ப உறவில் இருக்கும் டைனமிக்ஸைத்தான் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் கற்கிறார்கள். கோளாறு இங்கேயே தொடங்கிவிடுகிறது.

பாட்டிகளையும்  அம்மாக்களையும்விட இன்றைய தலைமுறைப் பெண்கள்  அதிகம் பேர் சொந்தக் காலில் நிற்கிறார்கள். தன் தேவை பற்றிய  தேர்வுகளோடு  இருக்கிறார்கள். உப்பு, புளி விவகாரத்தில் தொடங்கிப் படுக்கையறைவரை இது நீள்கிறது. சம்பாதிக்கும் பெண்களும் வேண்டும்,  ஆனால், அவர்கள் சமத்துவமாகவும் இருக்கக் கூடாது.  அம்மா, பாட்டியைப் போல் தன்னைப் பார்த்துக்கொள்பவளாக இருக்க வேண்டும் என ஆண் மனது  கட்டமைக்கப்பட்டிருப்பது அவனுடைய  வளர்ப்பின் பிரச்சினை.

வளர்ப்பில்தான்  மாற்றம் வர வேண்டும். ஆணுக்குச் சரி என்பது பெண்ணுக்கும் சரி என்று இருக்க வேண்டும். அப்படிப் பெண்ணுக்குச் சரி என்று இல்லாதது ஆணுக்கும் மறுக்கப்பட வேண்டும் .

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com
| ஓவியம்: அ. செல்வம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x