Published : 30 Sep 2018 03:47 PM
Last Updated : 30 Sep 2018 03:47 PM

கற்பிதமல்ல பெருமிதம் 25: நம்பிக்கைதான் பேசவைக்கும்

சித்ராவும் அகிலாவும் பள்ளி  வேனைவிட்டு இறங்கினார்கள். சித்ராவைக் கூட்டிக்கொண்டுப் போக அவளுடைய அம்மா வந்திருந்தார். சித்ரா, அவளுடைய அம்மா, அகிலா மூவரும் நடக்க ஆரம்பித்தார்கள். இன்றைக்கு ஸ்கூலில், வேனில் என்ன நடந்தது, வகுப்பில் யாருக்கு இன்று பிறந்தநாள் என சித்ராவின் அம்மா கேட்கக் கேட்க சித்ரா பேசியபடி வந்தாள்.  அகிலா மௌனமாக வருவதைப் பார்த்த சித்ராவின் அம்மா, அவளிடமும் சிலவற்றைக் கேட்டார்.

அகிலாவால் சித்ராவைப் போல் கலகலவென்று பேச  முடியவில்லை. அப்படிப் பேசிப் பழக்கம் இல்லாததால் ஓரிரண்டு வார்த்தைகளிலேயே பதில் சொன்னாள். அந்த வாட்ச்மேன் இப்ப தொடாம பேசறாரா என்றார் சித்ராவின் அம்மா. “வாட்ச்மேன்கிட்ட  நீ சொன்ன மாதிரி,  எங்க அம்மா கிட்ட சொல்லிட்டேன், அவங்க  ஸ்கூல்ல வந்து சொல்லிடுவாங்கன்னு  சொன்னேன். அதுக்கப்புறம் தொடுவதில்லைம்மா” என்றாள் சித்ரா.

அகிலா திகைத்து  நின்றாள். சித்ரா அவள் அம்மாவிடம் எல்லாவற்றையும் பேசுவது அகிலாவுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. பார்க்க சந்தோஷமாகவும் இருந்தது.

ஒருமுறை அகிலாகூடத் தன் அம்மாவிடம் இதுபற்றிப் பேச முயன்றிருக்கிறாள். ஊரிலிருந்து வரும்போதெல்லாம்  மாமா காதைத் திருகுவார், கன்னத்தைக் கிள்ளுவார். அப்போது அகிலாவுக்குக் கோபம் கோபமாக வரும். அம்மாவிடம் சொன்னாள். “மகாராணிக்கு யாரும் கிட்டவரக் கூடாது, தொடக் கூடாது. மாமா ஆசையாகத்தான் இருக்கிறார். இதைப்போய்  புகார் சொல்ல வந்துட்டே” என்றார்.

இதுவும் அன்பின் வெளிப்பாடா?

இது நடந்து மூன்று வருஷம் இருக்கும். அப்போது அகிலா ஐந்தாவது வகுப்பில்  இருந்தாள். இப்போது எட்டாம் வகுப்பு.

இரண்டு மாதத்துக்கு முன் வந்திருந்தபோது மாமா கிள்ளவில்லை. ஆனால், அவள் கன்னத்தைத் தடவினார். அகிலாவுக்கு மாமா தொட்டது  சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால், அம்மாவிடம் சொல்லவும் பயமாக இருந்தது.

சித்ராவின் அம்மாவும் அகிலாவின் அம்மாவும் குழந்தைகளை வெவ்வேறு விதமாகக் கையாள்கிறார்கள்.  சித்ராவுக்கு அம்மாவிடமிருந்து கிடைக்கும் அன்பும் வழிகாட்டுதலும் அவளை எப்போதும் கலகலப்பாக இருக்கவைக்கிறது.  சித்ராவைப் போல் கலகலப்பாக இருந்த அகிலா ஏன்  மௌனமானாள்?

பாலியல்ரீதியான சீண்டல்களுக்கும் வன்முறைக்கும் ஆளாகும் குழந்தைகள் பலரும் இப்படித்தான் யாருடன் பகிர்ந்துகொள்வது என்பது  புரியாமல் மௌனத்தில் குமைந்து போகிறார்கள். மௌனத்தை  உடைத்து அவர்களைப்  பேசவைப்பது பெரியவர்களின் கையில்தான் உள்ளது. வீடு தொடங்கிப்  பள்ளி, வேலைத்தளம், பொது இடம்வரை பாலியல் சீண்டல்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

சின்னஞ்சிறு குழந்தைகளை விடுங்கள். 30, 40 வயதில் இருக்கும் பெண்கள் இரவு நேரப் பேருந்துப் பயணத்தில் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களிடம் இருந்து வரும் பாலியல் சீண்டல்களை எப்படி எதிர்கொள்கிறார்கள்? தன் இருக்கையில் தன்னை மேலும் குறுக்கிக்கொள்கிறார்கள்.

பெரும் அவஸ்தையுடனேயே  பயணம் செய்கிறார்கள். காரணம் சீண்டுபவரைப் பார்த்து ஒரு பெண் கூச்சலிட்டால்  அவளது துணிச்சலைப் பாராட்டி, ஆதரவாகக் குரல் கொடுப்பதைவிட ஏதோ அவள்தான் தவறு செய்துவிட்டாள் என்ற தொனியில் பார்ப்பவர்களே அதிகம். யாரோ ஒருவரால் இப்படிச் சீண்டப்படுவதைப் பற்றி  உரத்துச் சொல்வதைப் பெண்களும் அவமானமாக நினைக்கிறார்கள்.

திணிக்கப்படும் அவமான உணர்வு

ஏனென்றால் நாம் சிறு வயது தொடங்கிப் பெண்களுக்கு அவர்கள் உடம்பு பற்றிய புரிதலை ஏற்படுத்துவதைவிட அவமான உணர்வையே தோற்றுவிக்கிறோம். தனக்கு நேரும் சீண்டலைத் தனக்கு இழைக்கப்பட்ட  அநீதியாகப் பார்ப்பதைவிட அவமானமாகப்  பார்க்கவே நாம் பெண்களைப்  பழக்கி யிருக்கிறோம். அவமானமாக உணரும்  விஷயத்தை வெளியே பேசப் பெண்கள்  தயங்குகிறார்கள்.

அப்படியே யாராவது பேசினாலும்  ஆதரவாகப் பேசுவதைவிட,  நீ இடம் கொடுக்காம இப்படி நடந்திருக்காது என்ற அவப்பெயர் பெண்கள் மேலேயே  திரும்பும்.  உறவினர், தெரிந்தவர் பற்றிய புகார் என்றால் கேட்கவே வேண்டாம். அவங்க பாசமாக இருக்கிறதை  நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட என்று அறிவுரை வேறு.

உரையாடத் தொடங்குவோம்

அப்படியென்றால் என்ன செய்யலாம்? பேசுங்கள். தொடர்ந்து பேசுங்கள். வீட்டில் பெற்றோரும் பள்ளியில் ஆசிரியரும்  பொறுப்பான உறவினரும் அக்கம்பக்கத்தவரும் குழந்தைகளிடம் பேச வேண்டும். பள்ளியில், வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்துப்  பேசுங்கள்.  பெரியவர்களிடமும் பெற்றோரிடமும்   தயங்காமல் எதையும் பேசலாம் என்ற உணர்வை, நெருக்கத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுங்கள். 

ஏனென்றால், வன்முறையைவிட மிகக் கொடுமையானது அதைப் பற்றிப் பேச முடியாமல் மனதுக்குள் புதைப்பது.

பேச முடியாத அனுபவங்கள் நாளடைவில் மனதுக்குள் பாரமாய்ப் பொதிந்து, தீர்க்க முடியாத மன அழுத்தத்துக்கு இட்டுச் செல்லும்.

பின்னாளில் இது ஆண் - பெண் உறவில்,  குறிப்பாக இல்லற உறவில் சிக்கல்களைக் கொண்டு வரலாம். சிறுவயதில் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளான பெண்களால் கணவன் - மனைவி உறவில் வரக்கூடிய நெருக்கத்தைக் கேள்விகள் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

குழந்தைகளிடம் பாலியல் சீண்டல் நடந்ததா என்று நேரடியாகப் பேச முடியாது. அப்படிக் கேட்பது ஆரோக்கியமானதும் அல்ல. குழந்தைகள் யாரோடு பேசினார்கள், என்ன பேசினார்கள், எங்கே இருந்து கொண்டு பேசினார்கள்,  விளையாடினார்களா, விழுந்து அடிபட்டுக் கொண்டார்களா, வீட்டுக்கு யார் வந்தார்கள், என்ன பேசினார்கள், அவர்களுடைய  பேச்சு குழந்தைகளைப் பயப்படுத்தியதா என்றெல்லாம் கேளுங்கள். குறுக்குக் கேள்வி கேட்கும்  பாணியிலோ அல்லது குறைசொல்லும் பாணியிலோ கேட்காமல் இயல்பாக அணுகிப் பேசுங்கள்.

பேசுவதுதான் முக்கியம். பேசக்கூடிய தளத்தில் இருப்பதுதான் முக்கியம். இந்த ஆதரவைக்  குழந்தைகள் புரிந்துகொண்டால், மௌனமாக, துயரத்தைத் தன்னந்தனியே  சுமப்பவர்களாக  இருக்க மாட்டார்கள். துயரத்தை வெளியே பகிர்ந்துகொண்டாலே மன அழுத்தம் பாதி குறையும்.

ஆதரவாகக் கரம் நீட்டும்போது அடுத்த முறை சீண்டலை எதிர்கொள்ளும்போது தைரியமாக இயங்க வைக்கும். காரணம் பொதுவாகச் சீண்டலும்  வன்முறையும் நம்மைவிட, அதிகாரம் (பணம், பதவி, இனம், வயது) நிரம்பியவர்களாலேயே நம் மேல் செலுத்தப்படுகிறது. நம்மோடு நம் வன்முறையைப் பகிர யாரோ இருக்கிறார்கள் என்பது நம்மைப்  பலமுள்ளவர்களாக உணரச்செய்யும். பேசுங்கள், குழந்தைகளோடு  தொடர்ந்து பேசுங்கள்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ராணுவ வீரர்கள் கொரியா, சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற ஜப்பானின் ஆட்சிக்கு  உட்பட்ட நாடுகளிலிருந்து சின்னஞ்சிறு பெண்களைப் பாலியல் வேட்கைக்கான comfort women ஆகப் பயன்படுத்தினார்கள். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பெண்கள் அப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

1994-ல் ஜப்பான்  அரசாங்கம் இந்தப் பெண்களிடம் பொது மன்னிப்பு கோரியது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் தாங்கள் அனுபவித்த துயரத்தை வெளியே பகிர முடியாதவர்களாக இருந்தார்கள் இந்தப் பெண்கள்.

விஷயம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு பேசிய  ஒரு முதிய பெண், “18 வயதிலிருந்து நான் அனுபவித்த கொடுமையை மனத்தில் புதைத்து வைத்திருந்தேன். நான் இவ்வளவு காலம் மௌனமாகத் துயருற்று இருந்தேன். இதைப் பற்றிப் பேசிய பிறகு  மன பாரம் குறைந்து லேசானதுபோல் இருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார்.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com
| ஓவியம்: அ. செல்வம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x