Published : 23 Sep 2018 04:08 PM
Last Updated : 23 Sep 2018 04:08 PM

கற்பிதமல்ல பெருமிதம் 24: தேவையில்லை குற்றவுணர்வு!

மழை, கடுமையான போக்குவரத்து நெரிசல் எல்லாம் சேர்ந்து வீடு வந்து சேரவே மணி எட்டரை ஆகிவிட்டது. வேறு வழியில்லாமல் சுமதி உப்புமா செய்தாள். கணவன், குழந்தைகள் எல்லோருமே சலித்துக்கொண்டு சாப்பிட்டார்கள்.

மற்ற வீட்டு  வேலைகளை முடித்துவிட்டு படுக்கப்போகவே பத்தரை ஆகிவிட்டது. படுக்கப்போகும் முன்பே ராகுல் சொல்லிவிட்டான், அவனுக்கு நாளை மதியத்துக்குப் பூரி, உருளைக் கிழங்கு வேண்டுமாம். அடிக்கடி எலுமிச்சை சாதம், தயிர் சாதம், பொடி சாதம், சாம்பார் சாதம் என்று கொண்டு போனால் உடன் படிக்கும் நண்பர்கள் கிண்டல் அடிக்கிறார்களாம். டிபன்தான் சாப்பிடச் சுலபமாம். கணவருக்கு சாம்பார், பொரியல் என முழுச் சாப்பாடு வேண்டும்.

காலை நேரக் கலவரம்

ஐந்து மணிக்கு அலாரம் வைத்துவிட்டுப் படுத்தாள். அலாரம் அடித்தபோது இன்னும் சிறிது நேரம் தூங்க மாட்டோமா என்றிருந்தது. ஆனால், இப்போது எழுந்திருக்காவிட்டால் பூரி, மசாலா, சாப்பாடு எல்லாம் செய்ய முடியாது.

ஆறரைக்கு ஒவ்வொருவராக எழுந்து வருவதற்குள் சுமதி, முக்கால் சமையலை முடித்திருந்தாள். பத்து நிமிடமாவது ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால், எல்லா வேலைகளையும் முடித்து நிமிரவே எட்டே முக்கால் ஆகிவிட்டது. குளித்து, தயாராகி ஒன்பது மணி பஸ்ஸைப் பிடிக்க ஓடினாள்.

நேற்றிரவு உப்புமா செய்து கொடுத்துப் படுக்கப்போனபோது இருந்த குற்றவுணர்வு குறைந்த மாதிரி இருந்தது.

சுமதி போன்ற எண்ணற்ற பெண்கள்,  ‘குற்றவுணர்வுக்கும்’ ‘கடமைக்கும்’ நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். வேலை பார்க்கும் பெண்கள் இப்படி ‘சூப்பர் வுமனா’க அவதாரம் எடுப்பது பாராட்டுக்காக என்பதை விடக் குற்றவுணர்வின் அடிப்படையில்தானோ என்று தோன்றுகிறது.

பெருமிதமல்ல கற்பிதம்

இந்தக் குற்றவுணர்வு பெண்களுக்கும் நல்லதல்ல; மற்றவர்களுக்கும் நல்லதல்ல. மனைவிமேல் கோபம் வரும்போது, சில ஆண்கள் சாப்பிடாமல் இருப்பதுண்டு. சிலர் உண்மையிலேயே சாப்பிடாமல் இருப்பார்கள். சிலர் வெளியில் போய் சாப்பிடக்கூடும். மனைவி கெஞ்சி, கொஞ்சி, மன்னிப்பு கேட்டபிறகே பிகு பண்ணிக்கொண்டு சாப்பிடுவார்கள்.

உண்மையிலேயே மனைவி பக்கம் தவறு இருந்தாலும், கோபத்தைச் சாப்பாட்டில் காட்ட வேண்டியதன் அவசியம் என்ன? பொதுவாக, வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடாவிட்டாலோ சரியாகச் சாப்பிடாவிட்டாலோ பெண்கள் குற்றவுணர்வில் குமைந்துபோவார்கள்.

இது அவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்குத் தெரியும். வீட்டில் உள்ள அனைவரும் நன்றாகச் சாப்பிட்டால்தான் பெரும்பாலான பெண்கள் திருப்தி அடைகிறார்கள். ஆனால், இது பெருமிதமல்ல; கற்பிதம்தான்.

அனைவருக்கும் பங்கு உண்டு

கோபித்துக்கொண்டு போகும் ஆணோ குழந்தைகளோ சாப்பிடாவிட்டால் அது அவர்கள் பிரச்சினை என்று பெண்கள் நினைக்கத் தொடங்கினால் என்ன ஆகும்? தனக்குப் பசிக்கிறது என்று அவர்கள் தனக்கு வேண்டியதைச் செய்து சாப்பிட்டால் என்ன ஆகும்?

அப்போது பாராமுகமாகப் போகும் கணவனும் சலிப்பு காட்டும் குழந்தைகளும் கோபத்தையும் சலிப்பையும் எப்படி வெளிப்படுத்துவார்கள்?

சாப்பாடு விஷயம் மட்டுமல்ல. என் இளவயது தோழி ஒருத்தி, “குழந்தைக் காப்பகத்தில் ஆறு மணிக்குள் போய் குழந்தையை அழைக்க முடியவில்லை என்றால் எனக்கு வரும் பதைப்பு என் கணவருக்கு ஏன் வருவதில்லை” என்று கேட்டாள்.

அவள் பலமுறை இதற்காகத் தன் கணவரோடு சண்டை போட்டிருக்கிறாள். அவர் வரவில்லை என்றாள் இவள் போய்க் குழந்தையைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவாள்.

“சண்டைக்குப் பிறகு நீதானே போய்க் குழந்தையை அழைத்து வருகிறாய். அதற்குச் சண்டை போடாமலேயே அழைத்து வரலாமே” என்று என்னுடைய மற்றொரு  தோழி அவளிடம் கேட்டாள்.

குழந்தை மீதான  அக்கறை என்பது வேறு. குழந்தையின் அப்பாவாகிய கணவரிடம், அவரது பொறுப்புணர்ச்சி பற்றிச் சண்டை போடுவது வேறு என்று தோழி சொன்னாள். குற்றவுணர்வு, பொறுப்புணர்வு இவையெல்லாம் மிகத் தொடர்புடையவை.

எப்போது கிடைக்கும் ஓய்வு?

இன்றைக்குப் பெண்கள் வெளி வேலை பார்க்கும் சூழல் பெருகிவிட்டது. வீட்டில் உள்ள பெண் அம்மாவாக, மனைவியாக மட்டுமே இருந்தால்கூட, அவர்களும் வாரம் முழுவதும் உழைக்க முடியுமா என்ன? அவர்களுக்கு ஓய்வு நாள் என்று ஒன்றுண்டா? தீர்வுதான் என்ன?

பெரும்பாலான வீடுகளில் காலை வேளைகளிலும், இரவு நேரங்களிலும் என்ன நடக்கிறது? குழந்தைகள் படிப்பார்கள். ஆண்கள் லேட்டாக வருவார்கள். அல்லது பேப்பர் படிப்பார்கள், டி.வி. பார்ப்பார்கள். சில வீடுகளில் குழந்தைகளும் கணவரும் வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகள் செய்வார்கள்.

பெண்கள் தங்கள் குற்றவுணர்வால் பெரும் வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்கின்றர். இதனால் பெண்களின் சுமை வீட்டில் உள்ள மற்றவர்களுக்குப் புரிவதில்லை. ஆண் மட்டும் சம்பாதிக்கவில்லை. பெண்களும் சம்பாதிக்கிறார்கள். குழந்தைகள்  எந்நேரமும் படிக்க மட்டும் செய்வதில்லை. மொபைல், டி.வி. போன்றவற்றிலும் தங்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

இப்படி ஒரு குடும்பத்தை யோசித்துப் பாருங்கள். வெங்காயம், பூண்டு உரிப்பது, காய்கறிகள் வெட்டுவது, தட்டுகளை வைப்பது, சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவி வைப்பது, படுக்கையை விரிப்பது, துவைத்த துணிகளை மடிப்பது, அயர்ன் செய்வது, வீட்டுக்குத் தேவையான காய்கறி, பழம், மளிகைப் பொருட்கள் வாங்குவது என அனைத்து வேலைகளிலும் அனைவரும் பங்கேற்றால் எப்படி இருக்கும்? வீடு என்பதன் சுமை புரியும். பொறுப்புணர்வு வரும். வேலைப் பகிர்வால், தன் வேலைகளையும் வீட்டு வேலைகளையும் செய்யப் பழகுவார்கள். பெண்களின் வேலைப் பளு குறையும்போது, சிடுசிடுப்பும் எரிச்சலும் போகும்.

ஒருவர் ஒரு வேலையை இரண்டு மணி நேரம் செய்வதற்குப் பதிலாக, நால்வரும் சேர்ந்து அரை மணி நேரத்தில் செய்துவிட முடியும். சமைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆனாலும், இடையிடையே பெண்கள் ஆசுவாசமாகவும் உணர முடியும்.

பெருகும் அன்பு

விடுமுறை நாட்களில் ஒட்டடை அடிப்பது, துணி துவைப்பது, படுக்கை விரிப்புகளை மாற்றுவது, ஃபேன் துடைப்பது என வேலைகளைத் திட்டமிடலாம்; பகிரலாம். காலை வேளைகளில் முடியாவிட்டாலும்,  அனைவரும் மாலை வேளைகளில் சேர்ந்து அரட்டை அடித்தபடி சாப்பிட முடியும். வீட்டின் எல்லா வேலைகளிலும் குழந்தைகளும் ஆண்களும் பங்கெடுக்கும்போது அந்தக் குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் சாத்தியப்படும்.

ஆணும் பெண்ணும் சமம் என்பது அனைத்துவகையிலும்தான். உணவு, உடை, வேலை வாய்ப்பு, பாலியல் தேர்வு, குழந்தைகள் வளர்ப்பு, குடும்பப் பொறுப்பு எல்லாமே இருவருக்கும் பொதுவானது என்ற பார்வை ஆண், பெண் இருவருக்குள்ளும் படிய வேண்டும்.

இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் என்று எதுவும் இல்லை (குழந்தை பெறுவதும், தாய்ப்பால் தருவதும் தவிர). அதேபோல் இவையெல்லாம் பெண்களின் கடமை என்ற குற்றவுணர்வைச் சுமப்பதும் தேவையில்லை. ஆணும் பெண்ணும் இணைந்து, ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுப்பதுதான் வாழ்க்கை.

பெண்கள் குற்றவுணர்வில் இருந்து விடுபட ஒரே தீர்வு, வேலைப் பகிர்வே. இது மரியாதையையும் பரஸ்பர அன்பையும் அதிகரிக்கும்.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com
| ஓவியம்: அ. செல்வம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x