Last Updated : 16 Sep, 2018 11:03 AM

 

Published : 16 Sep 2018 11:03 AM
Last Updated : 16 Sep 2018 11:03 AM

பாசிசத்துக்கு எதிரான குரல்

செப்டம்பர் 21: ரஜனி திரணகம நினைவு நாள்

மனிதனுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய குற்றம் எது? உரிமைகள் மறுக்கப்படுவதுதான். உயிர்வாழ, பிடித்த தெய்வங்களை வணங்க, பிடித்த உணவைச் சாப்பிட, மனத்தில் நினைப்பதைப் பேச, எண்ணங்களை எழுத்தாக்க என மனித உரிமைகள் பல. இவற்றில் எவையெல்லாம் அடிப்படையானவை, எவை அவசியமில்லாதவை என்ற ஆய்வு தேவையற்றது. மனிதர்கள் சுதந்திரமாக வாழ எவையெல்லாம் அவசியமோ, அவை அனைத்துமே அடிப்படை உரிமைகள்தாம்!

இந்த உரிமைகள் மறுக்கப்படும்போது, அதற்கான எதிர்ப்புகளும் எழும். பெரும்பாலும் அதிகாரப் பீடங்களால்தான் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஒரு ஜனநாயக அமைப்பில் மாற்றுக் கருத்துகளுக்கு எப்போதும் இடம் கொடுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், அங்கு எதிர்ப்பு இருந்தே தீரும். மாற்றுக் கருத்துகளைச் சொல்ல அனுமதிக்கப்படாத நிலையே ‘பாசிச’ நிலை.

இலங்கையில், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கும் போராளிக் குழுக்களுக்கும் இடையே நடைபெற்றுவந்த போரில், மனித உரிமைகள் கிஞ்சித்தும் பின்பற்றப்படவில்லை. போராளிக் குழுக்களில் மாற்றுக் கருத்துகளை முன்வைத்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். அப்படிக் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும் மிகச் சிலரே, தொடர்ந்து  ‘பாசிச’ தலைமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துவந்தார்கள். அவர்களில் ஒருவர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் ரஜனி திரணகம.

சிங்கள ராணுவம், இந்திய அமைதிப் படை, விடுதலைப் புலிகள் உள்ளிட்டவற்றின் மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து உலகத்துக்குச் சொல்லிவந்தவர், 1989-ல் கொல்லப்பட்டார்.  செப்டம்பர் 21 அவரது 29-வது நினைவு நாள்!

மருத்துவம் கற்ற போராளி

1954 பிப்ரவரி 23 அன்று, இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார் ரஜனி ராஜசிங்கம். இவர்களுடையது தமிழ்க் கிறித்துவக் குடும்பம். அதனால் ‘சக உயிர்கள் மீது அன்புகொள்ள வேண்டும்’ என்ற எண்ணம் இவருக்கும் இவருடன் பிறந்த சகோதரிகளுக்கும் இளமையிலிருந்தே இருந்தது. ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்தவர், மருத்துவக் கல்வியைக் கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்தார். மாணவப் பருவத்திலேயே அவருக்கு அரசியல் ஈடுபாடு இருந்தது. நிறையக் கூட்டங்களில் பங்கேற்றார்.

அப்படியொரு மாணவர் அரசியல் கூட்டத்தில்தான் களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் தயாபாலா திராணகமவைச் சந்தித்தார் ரஜனி. அவர், சிங்கள பவுத்தர். அவரது அரசியல் ஈடுபாடுகளால் ஈர்க்கப்பட்ட ரஜனி, இனம், மதம், மொழி கடந்து 1977-ல் தயாபாலாவை மணம்முடித்து ரஜனி திரணகம ஆனார். அவர்களுக்கு நர்மதா, சரிகா என இரண்டு மகள்கள் உண்டு.

ரஜனியின் அக்கா நிர்மலா, அமெரிக்காவுக்குப் படிக்கப் போனார். அவர் போன நேரம், வியட்நாம் போர் உச்சத்தில் இருந்தது. வியட்நாம் மீதான அமெரிக்காவின் போரை எதிர்த்து மாணவர்கள் போராடினர். அது நிர்மலாவுக்கு அரசியல்ரீதியான விழிப்புணர்வைத் தந்தது. இடதுசாரி அரசியலை அவர் தேர்வுசெய்தார். படிப்பு முடிந்து தாயகம் திரும்பிய அவர், விடுதலைப் புலிகளுடன் இணைந்தார்.

ஒருமுறை இயக்கத்தைச் சேர்ந்த காயமடைந்த  ஒருவருக்கு உதவ ரஜனியை நாடினார் நிர்மலா.  ரஜனி பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவிகள் செய்தார். அப்படித்தான் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் வந்தார்.

ஆவணப்படமான போராட்ட வாழ்க்கை

மருத்துவப் படிப்பை முடித்தவுடன், சில காலம் யாழ்ப்பாண மருத்துவமனை ஒன்றில் பணியாற்றினார் ரஜனி. பின்னர் 1983-ல் காமன்வெல்த் கல்வி உதவித்தொகை பெற்று, உடற்கூறியல் துறையில் பட்ட மேற்படிப்பு படிக்க இங்கிலாந்தில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். பிறகு லிவர்பூல் மருத்துவக் கல்லூரியில் மனிதக் குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான கை நரம்புகள் குறித்து ஆய்வுசெய்து வந்தார்.

இந்த நேரத்தில்தான், நிர்மலா கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இங்கிலாந்தில் இருந்துகொண்டு, தன் சகோதரியின் விடுதலைக்காகக் குரல் எழுப்பிவந்த ரஜனி, லண்டனில் இருந்த விடுதலைப் புலிகள் சிலருடன் இணைந்து, இலங்கையில் சிங்கள ராணுவம் மேற்கொண்டுவந்த மனித உரிமை மீறல்கள் குறித்து உலகின் பல்வேறு மனித உரிமை அமைப்புகளிடம் எடுத்துரைத்துவந்தார். பிறகு, நிர்மலா விடுதலையானார்.

80-களின் மத்தியில் தாயகம் திரும்பிய ரஜனி, யாழ் பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அந்த நேரத்தில்தான் இந்திய அமைதிப் படை வந்தது. சிங்கள ராணுவம், அமைதிப் படை ஆகியவை அப்பாவிப் பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்தன.

அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்து, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்தார். பின்னர் அவற்றை ‘நோ மோர் டியர்ஸ் சிஸ்டர்’ என்ற தலைப்பில் சிறு புத்தகமாகத் தொகுத்துக்கொண்டிருந்தார். அவர்களது மறுவாழ்வுக்காக ‘பூரணி மகளிர் மையம்’ என்ற அமைப்பையும் ஏற்படுத்தினார்.

அதேநேரம், அவரும் அவரது சக ஆசிரியர்களும் இணைந்து ‘மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்’ என்ற அமைப்பைத் தொடங்கினர். சிங்கள ராணுவம், அமைதிப் படை, விடுதலைப் புலிகள் ஆகியோரின் மனித உரிமை மீறல்களை ‘தி புரோக்கன் பல்மைரா’ (தமிழில், ‘முறிந்த பனை’ என்ற தலைப்பில் வெளியானது) என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்தனர். புத்தகம் வெளியான சில மாதங்களில் ரஜனி கொல்லப்பட்டார்.

ரஜனி தனியாகத் தொகுத்த ‘நோ மோர் டியர்ஸ் சிஸ்டர்’ எனும் ஆவணமும் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றது. 2005-ல் அந்த ஆவணத்தின் பெயரிலேயே ரஜனி திரணகம குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியானது.

நாவலில் நிலைபெற்ற ரஜனி

ரஜனியை மையமாகக்கொண்டு, மலையாளத்தில் 2014-ல் ‘சுகந்தி என்ன ஆண்டாள் தேவநாயகி’ எனும் நாவலை டீ.டி.ராமகிருஷ்ணன் எழுதியிருந்தார். அதைத் தற்போது,  ‘சுகந்தி அலைஸ் ஆண்டாள் தேவநாயகி’ எனும் தலைப்பில்,  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் பிரியா நாயர்.

போருக்குப் பிந்தைய இலங்கையில் நடைபெறுவதாக அமைந்திருக்கும் இந்த நாவலில், ரஜனியை ஆண்டாள் தேவநாயகி எனும் கற்பனையான பெண் கடவுளின் வழித்தோன்றலாகச் சித்தரித்து, அந்தக் கடவுளைப் பற்றிய கதையைச் சொல்வதன் மூலமாக, இலங்கையில் முப்பதாண்டுகளாக நடைபெற்ற போரின் பாதிப்பு சொல்லப்பட்டிருக்கிறது.

‘என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால், அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்பட்டிருக்காது. மாறாக எனது வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே  இருக்கும்’ என்று சொன்ன ரஜனியின் வார்த்தைகள் பலித்தன. விடுதலைப் புலிகளால் அவர் கொல்லப்பட்டார். அதை மறுப்பவர்களும் இருக்கிறார்கள்.

‘முறிந்த பனை’ புத்தகத்தின் ஆரம்பத்தில் ‘ரஜனியை யார் கொன்றார்கள் என்பது முக்கியமல்ல. அவர் எதற்காகக் கொல்லப்பட்டார் என்ற கேள்வியே முக்கியம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ‘பாசிசம்’தான் அந்தக் கேள்விக்கான பதில் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x