Published : 23 Sep 2018 03:25 PM
Last Updated : 23 Sep 2018 03:25 PM

கற்பிதமல்ல பெருமிதம் 23: ஆண்களின் கருத்தடை அன்பின் வெளிப்பாடு

விமலாவுக்கு இரண்டு குழந்தைகளே போதும் என்று தோன்றியது. பிறந்த இரண்டுமே பெண் குழந்தைகளாகப் போனதால், கருத்தடை ஆபரேஷன் செய்யவும் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

யாருக்கும் தெரியாமல்போய் காப்பர்–டி போட்டுக்கொண்டுவந்தாள். ஆனால், மாத விடாயின்போது உதிரப்போக்கு அதிகமாக இருந்தது. டாக்டரிடம் போனாள். அவர் தற்காலிகமாக காப்பர்–டியை எடுத்துவிடச் சொன்னார்.

தயங்கும் ஆண்கள்

காப்பர்–டியை எடுத்ததிலிருந்து உறவு கொள்ளவே பயமாக இருந்தது. கரு உண்டாகிவிடுமோ என்று பயந்தபடியே இருக்க வேண்டியிருந்தது. கணவருடன் பேசிப் பார்த்தாள். அவனுக்கும் இரண்டு குழந்தைகளே போதும் என்றுதான் தோன்றியது. இந்த நான்கு வருடங்களில் குழந்தைகள் தொடர்பாகத் தொடர்ந்தும் அவ்வப்போது திடீரென்று வரக்கூடிய செலவும் கையை அடிக்கடி கடித்தது. ஆனால், பெரியவர்களை மீறி என்ன செய்வதெனத் தெரியவில்லை.

விமலாவின் அலுவலகத்தில் வேலை செய்யும் சுரேஷ் சென்ற வாரம் அரை நாள் லீவு எடுத்திருந்தான். அவன் முடிக்க வேண்டிய வேலை ஒன்றை விமலாதான் முடித்தாள். மதியம் வந்த சுரேஷிடம் ஏன் காலையில் லீவு எனக் கேட்டாள். கருத்தடை ஆபரேஷன் செய்ய மருத்துவமனை சென்றதாக சுரேஷ் இயல்பாகச் சொன்னான். கருத்தடை ஆபரேஷன், சுரேஷின் மனைவிக்கு என நினைத்து, ஆபரேஷனுக்குப் பிறகு உங்க மனைவி எப்படி இருக்கிறார்கள் என்று விமலா கேட்டாள்.

ஆபரேஷன் செய்துகொண்டது மனைவியல்ல, தான்தான் என சுரேஷ் சிரித்தபடி சொன்னான். விமலாவுக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் தன் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்ததாகவும் தோன்றியது. விமலா, கணவனுடன் பேசினாள். ஆனால், விமலாவின் கணவன் மறுத்துவிட்டான்.

விமலாவின் கணவன் மட்டுமல்ல; பெரும்பாலான ஆண்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்குத் தயங்குகிறார்கள்.

ஆணுக்கும் உண்டு பொறுப்பு

முதல் குழந்தை பிறப்புக்குப் பிறகு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய பெரும்பாலான டாக்டர்கள் ஒப்புக்கொள்வதில்லை. இரண்டாவது குழந்தைக்குப் பிறகு டெலிவரியுடன் கருத்தடை சிகிச்சைக்கு டாக்டர்களே பரிந்துரைக்கிறார்கள். டெலிவரியின்போதே கருத்தடை சிகிச்சையும் முடிந்துவிடுவதால் பெண்களுக்கும் இது பற்றிப் பெரிய புகார் இல்லை.

ஆனால், யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் நெருடலாகவே இருக்கிறது. உண்மையில் தாம்பத்யம் என்பது என்ன? ஆண், பெண் இருவரும் கருத்தொருமித்து இணைந்து வாழ்வது. ஆனால், நடைமுறையில் என்ன நடக்கிறது? கலாச்சாரம், பண்பாடு, உடற்கூறு போன்றவற்றின் பெயரால் ஆண்களின் செயல்பாடுகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

ஆண்களால் உடல் விழைவின் இச்சையைக் கட்டுப்படுத்த முடியாது. ஆண் கூப்பிடும் போதெல்லாம் பெண் சரியெனச் சொல்ல வேண்டும். இப்படி ஆண்களின் பாலியல் வேட்கைக்குத் தூபம் போடுபவர்கள், அவனுடைய பொறுப்புணர்வு பற்றி ஏன் பேசுவதில்லை?

வீரத்தின் அடையாளமும்கூட

பெண்களுக்குத்தான் கருப்பை உள்ளது. அதனால், குழந்தையை அவர்களால்தான் பெற்றெடுக்க முடியும். ஆனால், குழந்தை பெறாமல் இருக்கும்  விஷயத்தில் ஆண்களால் பொறுப்பேற்க முடியாதா?

ஆணுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மிகச் சாதாரணமான, சிறிய சிகிச்சைதான். விதைப்பையில் சிறு துளையிட்டு, உயிரணுக்கள் செல்லும் குழாயை வெட்டி, இருபக்கமும் மூடிவிடுவார்கள். தையல்கூடப் போட வேண்டிய அவசியம் கிடையாது. இயல்பு வாழ்க்கைக்குச் சில மணி நேரத்திலேயே திரும்பிவிடலாம்.

பொதுவாக, உறவின்போது ஆணின் உடலில் இருந்து வெளிப்படும் திரவத்தில் உயிரணுக்களும் மற்ற திரவமும் இணைந்து வரும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரணு வராதே தவிர மற்றபடி எல்லா நிகழ்வும் நடக்கும்.

ஆண்கள், கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளத் தடையாக இருப்பது அவர்களுடைய மனதுதான். ஆண்களின் வீரம், அவர்களின் உடல் உறுதியில் அல்ல. அவர்களைச் சார்ந்தவர்களைக் காப்பதுதான். குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துகொள்வதும் குடும்பப் பொறுப்பை ஏற்பதில் ஒன்றுதான்.

மனைவியின் பிரசவ வலியை ஆண்களால் சுமக்க முடியாமல் போகலாம். ஆனால், குழந்தை பிறக்காமல் இருப்பதற்கான அறுவை சிகிச்சையைச் செய்துகொள்வதன் மூலம், மனைவி மேல், குடும்பத்தின் மேல் அவர்களுக்குள்ள அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்த முடியாதா? கூடாதா? அதை விட்டுவிட்டு அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல் இருக்க என்னவெல்லாம் சொல்கிறார்கள் தெரியுமா?

தப்பித்துக்கொள்ளும் சாக்குப்போக்கு

பளுதூக்க முடியாது, ஆண்மை குறைந்துவிடும், பாலியல் ரீதியான செயல்பாட்டில் பிரச்சினை வரும் என்றெல்லாம் பயப்படுகிறார்கள் அல்லது சாக்கு சொல்கிறார்கள். பயத்தை எல்லாம் போக்க வேண்டிய மருத்துவத் துறையும் ஆண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்வதில்லை

என் மனைவியே இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டாள்; என் பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்றும் சொல் கிறார்கள்.

பெற்றோருக்கும் மனைவிக்கும் பிடிக்காத எந்தவொரு செயலையும் ஆண்கள் செய்யாமலா இருக்கிறார்கள்? தன் பொறுப்பில் இருந்து தப்பிப்பதற்கான சாக்குப்பேச்சு இது.

பெண்ணுக்கு மாதவிடாய் தொடங்கும் போது, பெண்களின் இனப்பெருக்கக் காலம் தொடங்குகிறது. மாதவிடாய் நிற்கும்போது இந்தக் காலம் முடிகிறது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் மாதா மாதம் உதிரப்போக்கு, கர்ப்பம் தரிப்பது, குழந்தை பெறுவது, விரும்பாத கர்ப்பத்தைக் கலைத்தல் அல்லது தற்காலிகக் கருத்தடை முறைகள், காப்பர் – டி போடுவதால் அதிகமாகும் உதிரப்போக்கும் முதுகுவலியும் இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு நிரந்தரக் கருத்தடை அறுவை சிகிச்சை என அத்தனையும் நடக்கிறது.

ஆண்களின் பங்கு என்ன?

ஏன் இத்தனையையும் ஒரு பெண் மட்டும் சுமக்க வேண்டும்? ஆணுடைய பங்களிப்பு உறவுகொள்வது மட்டும்தானா? விந்தணுவைக் கொடுப்பது மட்டும்தானா? இப்படியான கேள்விகளைப் பெண்கள் கேட்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?

உடனே யாரும் குழந்தைகளைக் கொன்ற, விட்டுவிட்டுப் போன பெண்களை உதாரணம் காட்ட வேண்டாம். அந்தப் பெண்கள் மோசமானவர்கள், அன்பில்லாதவர்கள், பொறுப்பில்லாதவர்கள் என்றால் உறவுகொள்வதில் மட்டுமே பங்கேற்கும், ஆர்வம்காட்டும் ஆண்களை என்னவென்று அழைப்பது? அவர்கள்தாம் பொருளாதார ரீதியாகக் குடும்பப் பொறுப்பைச் சுமக்கிறார்கள் என்ற பேச்சும் வேண்டாம். கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பெண்களும் குடும்பப் பொருளாதாரச் சுமையை ஏற்கிறார்கள்.

குழந்தையைப் பெற்றெடுக்கும் வகையில் உடற்கூறு இல்லாததால் ஆண்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால், கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பொறுப்பையாவது அவர்கள் ஏற்க வேண்டாமா?

ஆண்கள், கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வது குடும்பத்தின் மேல் அவர்கள் காட்டும் அக்கறை. தங்களுடைய பொறுப்பை விரும்பி ஏற்கும் பாங்கு. இதுதான் உண்மையான ஆண்மையின் அடையாளம்.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com
| ஓவியம்: அ. செல்வம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x