Last Updated : 16 Sep, 2018 11:28 AM

 

Published : 16 Sep 2018 11:28 AM
Last Updated : 16 Sep 2018 11:28 AM

பெண்கள் 360: விரக்தியிலுமா பால்பேதம்?

விரக்தியிலுமா பால்பேதம்?

மகளிருக்கான அமெரிக்கன் ஓபன் இறுதிப் போட்டியில் உருவான சர்ச்சைகள் டென்னிஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. அதில் செரினா வில்லியம்ஸ் உடன் ஜப்பானின் நவோமி ஒசாகா மோதினார். செரினாவே வெல்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2-6, 4-6 என்ற கணக்கில் ஒசாகா வென்றார். ஆட்டத்தின் நடுவே, சைகைகளின் மூலம் செரினா பயிற்சி பெற்றார் எனக் கூறி அவருக்கு ஒரு புள்ளியை நடுவர் குறைத்தார்.

தோல்வியை நோக்கிச் சென்ற விரக்தியில், டென்னிஸ் ராக்கெட்டை வீசியெறிந்து செரினா உடைத்தார். அந்தச் செயல் நடுவரால் கண்டிக்கப்பட்டது. கோபம்கொண்ட செரினா, “நான் நேர்மையை நம்புபவள். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். ஆடும்போது நான் பயிற்சி பெற்றதே இல்லை. நீங்கள் ஒரு திருடர். என்னுடைய புள்ளிகளைப் பறித்துக்கொண்ட திருடர்” என நடுவரிடம் கத்தினார். தான் பயிற்சி அளித்ததை செரினாவின் பயிற்சியாளர் பின்னர் ஒப்புக்கொண்டார். விதிமீறல்கள் காரணமாகவே செரினாவின் புள்ளிகள் குறைக்கப்பட்டன.

செரினா செய்தது தவறுதான். இருப்பினும், போரிஸ் பெக்கர் உடைக்காத ராக்கெட்டா? ஜான் மெக்கன்ரோ போடாத சண்டையா? அப்போது இத்தகைய இழிவான கார்ட்டூனை ‘ஹெரால்டு சன்’ நாளிதழ் வெளியிடவில்லை. ஒரு பெண்ணை, அதுவும் பிரசவத்துக்குப்பின் விளையாடும் ஒரு பெண்ணை, இந்த அளவு வன்மத்துடன் தூற்றும் சமூகம், பெடரர், நடால் போன்ற வீரர்கள் தவறு செய்திருந்தால், இதே அளவு தூற்றியிருக்குமா?

 

எழுத்தைத் தானமாக்கியவர்

உலகின் தலைசிறந்த கவிஞர் என்று கருதப்படும் ஜோனா பெய்லி ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். மென்மையாகப் பேசும் அவருடைய எழுத்துக்களோ மிகவும் வலுவானவை, அழுத்தமானவை. ஷேக்ஸ்பியருக்கு இணையாகக் கருதப்படும் இலக்கியவாதி. அவரது முதல் கவிதையான ‘வின்டர் டே’ ஸ்காட்லாந்தின் இயற்கை அழகை முழுமையாக கவித்துவம் மிகுந்த சொற்களுக்குள் அடக்கியது.

அவரது இருப்பிடம் எழுத்துலக ஆளுமைகள் கூடும் இடமாக இருந்தது. 1798-ல் அவர் எழுதிய Plays on the Passions, ஆங்கிலக் காதல் கதைகளின் / நாடகங்களின் / திரைப்படங்களின் இயல்பையும் வடிவையும் இன்றும் தீர்மானிக்கிறது. மூன்று பாகங்களைக் கொண்ட அந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு அவர் 14 வருடங்கள் எடுத்துக்கொண்டார்.

எழுத்துலக தவ வாழ்க்கை அது. நகைச்சுவை, சோகம், காதல், வெறுப்பு, பொறாமை ஆகிய உணர்ச்சிகளின் உந்துதலில் சுழலும் மனித மனத்தின் வீரியத்தையும் அதன் பரப்பையும் தனது எழுத்தினுள் அடக்கி அவர் விவரித்த விதம் வாசகர்களை மலைக்கச் செய்தது.

google 2jpg

தன்னுடைய படைப்புகள் படிப்பதற்கானதல்ல; நாடகமாகப் பார்க்கப்படுவதற்கு என்பதே அவருடைய எண்ணம். குழந்தைப் பருவத்தில் வறுமையின் பிடியில் வாடியதாலோ என்னவோ, தன் வருமானத்தில் பாதியைத் தானமாகக் கொடுத்துள்ளார். அவரது 256-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகக் கடந்த செவ்வாய் அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

 

மன்னிக்க முடியாத பாவம்

திருவனந்தபுரத்தில், பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை ஐந்து பாதிரியார்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு கன்னியாஸ்திரி, பேராயர் பிராங்கோ முள்ளக்கல் மீது வல்லுறவு குற்றச்சாட்டு எழுப்பினார். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக, சக கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் இறங்கினர்.

பிராங்கோ முள்ளக்கல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வாடிகன் தூதரகத்தின் இந்தியப் பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ராவிடம் புகார் அளித்தனர். தேவாலயத்தையும் சபையையும் அழிக்கும் திட்டத்துடன் கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்திவருவதாக யேசு சபை உள்ளிட்ட சில கிறிஸ்தவ அமைப்புகள் குற்றம்சாட்டின. சம்பந்தப்பட்டவர்கள் மீது கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் இ.பி. ஜெயராஜன் தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாகத் தற்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பேராயர் பிராங்கோ முள்ளக்கல் செப்டம்பர் 19 அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கேரள காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அந்தக் கன்னியாஸ்திரியின் நடத்தையைத் தவறாகச் சித்திரிக்கும் முயற்சியில் பேராயர் ஈடுபட்டுவருகிறார். மனத்தின் வக்கிரத்துக்கு மதத்தைத் துணைக்கு அழைக்கலாமா?

வன்மத்துடன் உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள்

பெரும்பாக்கத்தில் வசிக்கும் 32 வயது சுரேஷ், ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர். 26 வயது ரோகிணியை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் திருமணம் செய்தார். இருவரும் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இரண்டு வயதில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்களின் திருமணத்துக்குச் சீதனமாக 50 பவுன் தங்க நகை, வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், இரு சக்கர வாகனம், ஒரு கார், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவை வரதட்சிணையாகக் கொடுக்கப்பட்டன. பெண் குழந்தை பிறந்ததால், ஆண் குழந்தை ஏன் பிறக்கவில்லை என்று ரோகிணியைக் கணவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரோகிணியின் கணவர் சுரேஷ், 20 லட்ச ரூபாயில் காரும் 50 லட்சம் ரூபாய் ரொக்கமும் வேண்டும் என்று ரோகிணியை அடித்துச் சித்ரவதை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தன்னுடைய பெற்றோருக்குத் தொந்தரவு தர மனமில்லாத ரோகிணி மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார்.

அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.  தலைமறைவாகியுள்ள ரோகிணியின் கணவரைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர். ஆண் குழந்தையை உயர்வாக நினைக்கும் படித்த சமூகத்தின் மனநோய் இன்னும் தீரவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x