Published : 09 Sep 2018 09:43 AM
Last Updated : 09 Sep 2018 09:43 AM

கற்பிதமல்ல பெருமிதம் 22: உணர்வு இருவருக்கும் பொதுதானே?

ஒரு ஆண் யோகா டீச்சர்/துறவி மேடையில் அமர்ந்து யோகாவைப் பற்றிப் பேசுகிறார். செயல் விளக்கம் தருகிறார். நூற்றுக்கணக்கானோர் அவரைப் பார்த்து ஆசனங்களைச் செய்ய முயல்கிறார்கள்.

அவரது இடையில் மட்டும் ஒரு சிறு துணி. காலைத் தூக்கி யோகாபியாசம் செய்கிறார். பக்தர்கள்/யோகா கற்றுக்கொள்பவர்கள் ஆண், பெண் இருவரும் முழு உடலையும் மறைக்கும் ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். பெண்களில் பலரும் துப்பட்டாவையும் சேர்த்தே அணிந்திருக்கிறார்கள்.

மாறுபடும் கலாச்சாரம்

நானறிந்தவரை யோகா என்பது ஒருவருக்கு ஒருவர் என்ற விதத்தில் கற்றுக்கொடுக்கப்படும்போதுதான், சரிவரப் புரிந்துகொள்ளப்படும். இப்படிப் பெரும் கும்பலாகச் செய்வது காட்சிப் பொருளாக்கும் நிகழ்வா,  உண்மையான பயிற்சியா?

இது ஒருபுறமிருக்க வேறு சில கேள்விகள் எழுகின்றன. ஏன் அவ்வளவு குறைந்த ஆடைகளோடு அவர் யோகா பயிற்றுவிக்க வேண்டும்? வயிறு உள்ளே குழிவதைச் செயல்முறைப் பயிற்சியாகச் செய்துகாட்டும்போது அவர் முகத்தில் பெருமிதம் தெரிகிறது. இப்படி, ஒரு பெண்ணால்கூட செய்ய முடியலாம். ஆனால், ஆடைகள் மறைத்த வயிற்றுப் பகுதியால் அந்தப் பெண்ணுடைய  செயல் திறன் வெளித்தெரியாமல் போகலாம்.

இடுப்பில் சிறு துணியோடு பொது மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் தோற்றமளிப்பது எத்தகைய கலாச்சாரம்? கலாச்சாரம் ஆண், பெண் இருவருக்குமானது.

ஆண் எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம் என்பது அவனுக்குச் சுதந்திரத்தை மட்டும் கொடுக்கவில்லை. அதிகாரத்தையும் கொடுக்கிறது.

வேறுபடும் நீதி

ஒரு பெண், அரைகுறையான ஆடை அணிந்த ஆணைப் பார்த்து நான் கவரப்பட்டேன் என்று சொன்னால், நாம் அந்தப் பெண்ணை ஒழுக்கம் கெட்டவள், இச்சையை அடக்கத் தெரியாதவள் என்போம். அதுவே கவர்ச்சியாக உடையணிந்த ஒரு பெண்ணைப் பார்த்து ஆண் கவரப்பட்டால், ஆண் அப்படித்தான் இருப்பான், அப்படி ஆடை அணிவது பெண்ணின் ஒழுக்கக் கேடான செயல் என்கிறோம். இப்படி ஆணுக்கும்  பெண்ணுக்குமான வேறுபட்ட நீதி, உடையில் மட்டுமல்ல,  பாலியல் விஷயங்களிலும் நீள்கிறது.

ஆணின் பாலியல் இச்சைக்காக, காலம் காலமாக நமது சமூகத்தில் பரத்தையர்கள் இருந்துவந்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு சிலரின் தேவைக்காக, தேவதாசி முறையும் இருந்துவந்துள்ளது.ஆவணப்படத்துக்காகச் சமீபத்தில் பாலியல் தொழிலாளர்களைச் சந்தித்தபோது அந்தப் பெண்கள் சில கேள்விகளைக் கேட்டார்கள். சில பகிர்தல்கள் நடந்தன. “டிமாண்ட் இருப்பதால்தானே சப்ளை உள்ளது. இதில் எங்களை மட்டும்தான் சமூகம் தூற்றுகிறது. போலீஸ் சித்ரவதை செய்கிறது” என்றார் ஒரு பெண்.

“நாங்கள் ஒன்றுகூடி எங்களுக்கான சங்கத்தை அமைத்துக்கொண்டு போராடுகிறோம். வெளிப்படையாக நாங்கள் யார் என்று சொல்லிக்கொண்டு போராடுகிறோம். எங்களிடம் வந்த ஆண்கள் யாராவது நான் பாலியல் தொழிலாளியிடம் சென்றேன் என்று ஒப்புக்கொள்வார்களா? நண்பர்களிடம் தற்பெருமையாகச் சொல்லலாம். வெளிப்படையாக எல்லோரிடமும் சொல்வார்களா?” என்றார் ஒரு பெண்.

இன்னொரு பெண் இப்படிச் சொன்னார்: “மனைவியோடு செய்துபார்க்க முடியாத பாலியல் விழைவுகளை எங்களிடம் நிறைவேற்றிக்கொள்வதாகச் சில ஆண்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

மறுக்கப்படும் சுதந்திரம்

திருமணம் என்ற பந்தத்தில் ஆணும் பெண்ணும் நுழைகிறார்கள். அதில் பாலியல் உறவில் ஈடுபடும் ஒருவருக்கு (ஆண்) பாலியல் இச்சைகளைப் பேச, வெளிப்படுத்த சமூகம் சுதந்திரத்தை வாரி வழங்குகிறது. பெண்கள் செக்ஸ் என்ற வார்த்தையையே யோசிக்கக் கூடாது, பேசக் கூடாது என்கிறது.

இந்தச் சமூகத்தின் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள். பெண்கள் மட்டுமே அடங்கி, ஒடுங்கி இருக்க வேண்டும் என்றால் சமீபத்திய சம்பவம் மாதிரியான கொடூரங்கள் நிகழும்.

ஒரு பெண் தன் இரு குழந்தைகளைக் கொன்றுவிட்டுக் காதலனுடன் போனாள். அவளுடைய செய்கையை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. மிக மிகத் தவறுதான். மன்னிக்க முடியாத குற்றம்தான். ஆனால், ஒரு ஆண் இப்படிப்பட்ட ஆசை வரும்போது என்ன செய்கிறான்? மனைவியையும் குழந்தைகளையும் விட்டுவிட்டுப் போய்விடுகிறான். மனைவியையும் குழந்தைகளையும் சமூகம் பரிதாபத்துக்கு உரியவர்களாகப் பார்க்குமே தவிர ஆணைப் பெரிதாகக் குற்றம் சாட்டாது.

காதல் ஆசை அந்தப் பெண்ணை இப்படிச் செய்யத் தூண்டியது என்றால், அந்த உணர்வு பற்றிய புரிதலும் கையாள்வதற்கான திறனும் நிதானமும் இருந்திருந்தால், குழந்தைகளைக் கொல்லாமல் விட்டிருக்க மாட்டாளா? விவாகரத்துக்காவது விண்ணப்பித்திருப்பாள்.

வெவ்வேறு அளவுகோல்கள்

உடை தொடங்கி பாலியல் உறவுவரை ஆண், பெண் இருவருக்கும் வெவ்வேறு அளவுகோல்களை வைத்தால் இப்படிக் கோளாறில்தான் போய் முடியும். பெண் செய்யக் கூடாது என்று சமூகமும் அவர்கள் சார்ந்த கலாச்சாரமும் நிர்ணயிப்பதை, அந்தச் சமூகத்து ஆண்களும் செய்யக் கூடாது.

பாலியல் (sexuality) என்பது கலவி என்பது மட்டுமல்ல. நடை, உடை, பாவனை, பேச்சு, பாலுறவு என எல்லாத் தளங்களிலும் நீள்வது. ஒரு பெண் கவர்ச்சியான ஆடை அணிவது தவறென்றால், ஆண்களும் உடலை மறைக்கும்படியான முழு ஆடையை அணிய வேண்டும்.  எந்த நடமாட்டமும் இல்லாத மலை உச்சியில் தவம் செய்யும் துறவியின் ஆடை, தனி மனித சுதந்திரத்துக்கு உட்பட்டதாக இருக்கலாம். அனைவரும் பார்க்கக் கூடிய பொதுமேடைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றக்கூடிய ஆண், முழு உடலையும் மறைக்கும்படியான ஆடையை அணியத்தானே வேண்டும்?

பொதுவில் வைப்போம்

கற்பு என்பது இருவருக்கும் பொது என்றால் கலாச்சாரமும் பொதுதானே. பெண்கள் படிக்கலாம், வீட்டின் தேவைகளுக்காக வேலைக்குப் போகலாம். ஆனால், அவர்களின் செயல், சிந்தனை எல்லாம் அவர்கள் வாழக்கூடிய சமூகத்தில் அதிகாரம் நிரம்பியவர்கள் எதிர்பார்க்கிறபடி மட்டுமே இருக்க வேண்டும் என்பது எப்படிச் சாத்தியப்பட முடியும்? அந்தச் சமூகம் அதில் வாழும் ஆண்களுக்கு வேறு அளவுகோல்களை வைக்கும் என்பதை, தான் ஏன்-அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சுயசிந்தனை உள்ள பெண் சிந்திக்க மாட்டாளா?

நிறைய வீடுகளில் ஆண்கள் மேல் சட்டை அணிவதில்லை. வீட்டுக்கு யாராவது பெண்கள் வந்தால்கூட,  போய் சட்டை மாட்டி வருவதில்லை. ஆனால், நைட்டியை அணிந்திருக்கும் பெண்கள், யாராவது வந்துவிட்டால் துப்பட்டாவையோ துண்டையோ போர்த்திக்கொள்ள வேண்டும்.

பெண்கள் எல்லாம் கண்கள் இல்லாதவர்களா? அவர்களுக்கும் சலனங்கள் வராதா? ரொம்பவும் கூச்சமாக வளர்க்கப்பட்டவர்களாக இருந்தால் நிமிர்ந்து பார்க்க முடியாமல் தர்மசங்கடமாக இருக்காதா?

பாலியல் உணர்வுகளைப் பெண்கள் அடக்கிக்கொள்ள வேண்டும் என்று வளர்த்துவிட்டு, பிறகு என் மனைவிக்கு என்னுடன் ஒத்துழைக்கத் தெரியவில்லை என்று காதல், காம உறவுகளில் சில ஆண்கள் தங்களுடைய செயல்களை நியாயப்படுத்திக்கொள்கிறார்கள்.

இப்படிச் சொன்னால் பெண்ணுக்கு இதெல்லாம் தெரிந்தால், சமூகம் சீர்கெட்டுவிடும் என்றால், என்ன மாதிரி பெண்களையும் ஆண்களையும் வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.உணர்வைக் கையாள்வதை இருவருக்கும் கற்றுக்கொடுங்கள். நாகரிகத்தையும் இருவருக்கும் கற்றுக்கொடுங்கள்.

உடையிலும் பேச்சிலும் செய்கையிலும் பாலுறவு பற்றி இருவருக்கும் ஒரே விதமான அளவுகோல்களை வையுங்கள். ஆசை இருவருக்குமானது என்றால், அதைச் சரிவர கையாளக் கற்றுக்கொள்ள வேண்டியதும்   இருவருக்குமானது.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com
| ஓவியம்: அ. செல்வம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x