Published : 02 Sep 2018 11:43 AM
Last Updated : 02 Sep 2018 11:43 AM

என் பாதையில்: குறிஞ்சியைப் பாருங்கள் குளுமை!

நீலக்குறிஞ்சி, மேற்குத் தொடர்ச்சிமலையில் உள்ள சோலைக் காடுகளில் பூக்கும்.

அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை. அதனால் இதை ஆங்கிலத்தில் ‘லாங் இண்டர்வல் ப்ளூமர்’ என்று சொல்வார்கள். 1838-ல் இந்தப் பூ முதன்முறையாக ஆவணப்படுத்தப்பட்டது. இந்த மலரால்தான் உதகமண்டலப் பகுதி மலைத்தொடருக்கு, ‘நீலகிரி’ என்ற பெயர் வந்தது.

‘காணும் இடமெல்லாம் குறிஞ்சி… கண்கொள்ளா அளவுக்குக் குறிஞ்சி…’ என நாள் முழுக்கக் குறிஞ்சியைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது என் பல வருடக் கனவு. ஆனால், இந்த ஆண்டுதான் அந்தக் கனவு பலித்தது. கடந்த வாரம் அந்தப் பூவைத் தேடிச் சென்றேன்.

கோத்தகிரியில் இருந்த சில நண்பர்களிடம் விசாரித்ததில், இந்தப் பூவை கீழ் கோத்தகிரி பகுதியில் காணலாம் என்று குத்துமதிப்பாகச் சொன்னார்கள்.  நாங்கள் கிளம்பிய சற்று நேரத்தில் வானம்  இருட்டிக்கொண்டு வந்தது. லேசான மழைத் தூறல். என் பல ஆண்டுக் கனவை இந்தப் பிரபஞ்சமே ஆசிர்வதிப்பதாகத் தோன்றியது. மூன்று மணி நேரத்துக்குப் பிறகு கோத்தகிரியை அடைந்தோம். அங்கு டோன்னிங்டன் ரோட்டில் உள்ள கடை ஒன்றில், சூடான தேநீரை அருந்திவிட்டு, கீழ் கோத்தகிரி  நோக்கிச் சென்றோம்.

கீழ் கோத்தகிரி வழியாகப் பயணித்து சோலூர்மட்டம் கிராமத்துக்கு  வந்து சேர்ந்தோம். அங்கே மழை அதிகரித்தது.  போகும் பாதையில் எங்குமே குறிஞ்சி தென்படவில்லை. வழி மாறி வந்துவிட்டோமா என்று யோசித்தபடி, மழை சற்று ஓயட்டும் எனக் காத்திருந்தோம்.

வந்த பாதையிலேயே திரும்பிச் சென்றோம். போகும் வழியில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் வழி கேட்டோம். அவர், “அங்க வண்டியிலே போக முடியாது. நடந்துதான் போகணும். ரொம்ப தூரமாச்சே.  அங்கே யானைக் கூட்டம் வேற இருக்குமே” என்று பயம் காட்டினார்.

அடடா… இந்த வருடமும் குறிஞ்சியைப் பார்க்க முடியாதோ என்ற சந்தேகம் மனத்தில் மின்னி மறைந்தது. அப்போது அந்த வழியாகச் சில மாணவர்கள் பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர்.

என் நண்பர் அவர்களிடம் வழி கேட்டார். உடனே மிகச் சரியான பதில் வந்தது. அவர்களுக்கு எப்படி அந்த இடம் துல்லியமாகத் தெரிந்தது? அதை என் நண்பரிடம் கேட்டதற்கு, “அவர்கள்தானே பூக்களை வைத்து செல்ஃபி எடுப்பார்கள்?” என்றார்.

அந்த இடம் நோக்கி நடந்தோம். லேசான மழைச் சாரல் உடலின் மீது பட்டுத் தெறிக்க, பறவைகளின் பாடலைக் கேட்டுக்கொண்டே, புற்களும் கற்களும் மரங்களும் அடர்ந்த அந்தப் பாதையில் நடப்பது புதியதொரு அனுபவமாக இருந்தது.

சிறிது தொலைவில் ஒரு மலை தெரிந்தது. அந்த மலையில் நீலக்குறிஞ்சி கொத்துக்கொத்தாக எல்லாப் பக்கமும் பரவியிருந்தது. அதைப் பார்த்ததும் நான் சிலையாகிவிட்டேன். இயற்கையின் அழகைக் கண்டு என் கண்ணோரம் நீர் எட்டிப் பார்த்தது. இயற்கை ஒரு பேரதிசயம் என்பது புரிந்தது!

சிறிது நேரத்தில் மழை வேகமெடுப்பது போலத் தெரிந்தது. மலையிலிருந்து இறங்கினோம். ஆனால், என் மனத்திலிருந்து மலையும் மலர்களும் இறங்கவேயில்லை.

- சாரதா பாலசுப்பிரமணியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x