Last Updated : 02 Sep, 2018 11:43 AM

 

Published : 02 Sep 2018 11:43 AM
Last Updated : 02 Sep 2018 11:43 AM

பெண்கள் 360: பறிக்கப்படும் விருதுகள்

பறிக்கப்படும் விருதுகள்

மியான்மாரின் பிரதமராக 1990-ல் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராணுவத்தால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் ஆங் சான் சூ கி. அவரது விடுதலைக்காக உலகமே போராடியது. அமைதிக்கான நோபல் பரிசு 1991-ல் அவருக்கு வழங்கப்பட்டது. டைம்ஸ் நாளிதழ் அவரை ‘காந்தியின் வாரிசு’ என்றது. மியான்மாரின் மண்டேலா என்று அவரை ஐ.நா. பாராட்டியது. விடுதலையான பின், 2015-ல் நடந்த தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றுப் பிரதமரானார்.

இந்த ஆட்சியில்தான், உலகையே உலுக்கிய ரோஹிங்கியா இன அழிப்பு நடந்தது. ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக் கணக்கான பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். அமே சூ (அம்மா சூ) என்று தன்னை அழைத்த மக்களுக்காகச் சிறு கண்டனத்தையோ வருத்தத்தையோகூட இதுவரை அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் Freedom of Edinburg எனும் உயரிய விருது அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. அவரிடமிருந்து பறிக்கப்பட்ட ஏழாவது விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

கவிதைக்குக் கிடைத்த நீதி

17 வயது ஸ்ரேயா ஷர்மாவும் 19 வயது சர்தக் கபூரும் நண்பர்கள். அந்த உறவை அடுத்த நிலைக்கு வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்ல சர்தக் கபூர் முயன்றார். அதன் பிறகு ஸ்ரேயாவுடனான உறவைத் துண்டித்துக்கொண்டார். தன் மன உளைச்சலைக் கவிதையாக எழுதி முகநூலில் ஸ்ரேயா பதிவேற்றினார். பின், சர்தக் கபூரின் வீட்டுக்குச் சென்று அவரிடமே அந்தக் கவிதையைக் கொடுத்தார். அதன் பின் சர்தக்கின் வீட்டுக்கு அருகிலிருந்த தெருவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் ஸ்ரேயா.

அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டது  விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த திங்களன்று வழங்கப்பட்டது. அப்போது, ‘மரணித்திருக்கவே விரும்புகிறேன். இமை மூடும் பொழுதெல்லாம் இருளால் நிரம்பிய சொர்க்கம் அதனுள் விரிகிறது. அச்சங்கள் அழுத்துவதால் இருப்பே எனக்குக் களைத்துவிட்டது. பொம்மைகளுடன் விளையாடிய எங்களுக்கு நானே இன்று பொம்மையாகிவிட்டேன். ஆண்கள் எப்போதும் ஆண்களே. பெண்களாகிய நாங்கள் ஒருபோதும் அதை வெளிசொல்வதில்லை’ என்று ஸ்ரேயா எழுதிய கவிதையை வாசித்து சர்தக் கபூருக்கு ஆயுள் தண்டனையை நீதிபதி விதித்தார்.

இசையை மீட்டவர்

தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புற இசை வடிவம் Lam Tad. இது மத்திய தாய்லாந்தில் பிரசித்தி பெற்றது. நகைச்சுவை ததும்பும் வரிகள் நிறைந்த  பாடல்களைப் பாடியபடி ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் சீண்டி வம்பிழுப்பது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சுவாரசியமாக இருக்கும். 1933-ல் பிறந்த பிரயூன் 15 வயதிலேயே இந்த இசை வடிவின் தேர்ந்த பாடகியாக உருவாகிவிட்டார். இவருடைய பாடல் வரிகள் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

isaiyai 2jpg

அவரது பாடல்கள் ரசிகர்களை மகிழ்விக்க ஒருபோதும் தவறியதில்லை. தொலைக்காட்சி வரவுக்குப் பின் இந்தப் பாடல் வடிவம் மெல்ல அழிவை நோக்கிச் சென்றது. அழிவிலிருந்து அந்த இசை வடிவை மீட்டு அதற்கு மறுவாழ்வு கொடுத்தவர் பிரயூன் யோம்யாம். இன்று தாய்லாந்து மக்களால் அன்னை என்றழைக்கப்படும் அவரது 87-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகக் கடந்த வியாழன் அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

எண்ணமும் சொல்லும்:அச்ச உணர்வு நிலவுகிறது

சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா, வெர்னோன் கொன்சால்வேஸ் ஆகிய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் மக்களுக் காகக் குரல் கொடுப்பவர்கள். அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டால் அதற்கான காரணம் தெரிய வேண்டும். திடீரென காவல்துறை வந்து, ‘உன்னைக் கைது செய்கிறோம், புணே சிறைக்கு அழைத்துச் செல்கிறோம்’ என்று சொல்லிவிட முடியாது. சட்டம் இதுவரை இப்படிச் செயல்பட்டதில்லை.

ennamumjpgright

தற்போது நடைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சிறுபான்மையினர், கீழ் சாதியினர், முஸ்லிம்கள் என மக்கள், குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றனர். மக்களிடையே இன்று பயம் நிலவுகிறது. இன்று நிலவும் அச்ச உணர்வு, நெருக்கடி காலத்திலும் இருந்ததில்லை. அன்று நிலவிய சூழ்நிலை வேறு. இத்தகைய அச்ச உணர்வு நான்கு ஆண்டுகளாகத் தொடர்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரும் என்று தெரியவில்லை. 2019-க்கு பிறகு ஐந்து ஆண்டுகள் நீடித்தால் என்ன ஆகும் எனத் தெரியவில்லை.

- தனது குழுவின் பொதுநல மனு தொடர்பாக வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் கூறியது.

யு.எஸ் ஒபன் டென்னிஸில் பால்பேதம்

இந்த வருட யு.எஸ் ஒபன் டென்னிஸ் போட்டியில் விளையாட்டு வீரர்களுடன் கடும் வெயிலும் சேர்ந்து விளையாடுகிறது. முதல் சுற்றுப் போட்டி முடிவதற்குள்ளாகவே ஐந்துக்கும் மேற்பட்ட வீரர்கள் வெயில் காரணமான பாதிப்பால் போட்டியிலிருந்து வெளியேறினர். வெயிலின் காரணமாகப் பெண்களுக்கு மட்டும் பத்து நிமிடம் ஓய்வு  அளிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன் அன்று நடந்த மகளிர் போட்டியில் அலிஸ் கோர்னே பங்கேற்றார்.

வழக்கம்போல் பத்து நிமிட இடைவேளை விடப்பட்டது. மைதானத்துக்கு வீரர்கள் திரும்பினர். அப்போதுதான் டி-ஷர்ட்டைத் திருப்பிப் போட்டு வந்திருப்பது கோர்னேக்குத் தெரிந்தது. சட்டெனச் சுதாரித்த அவர், கண்ணிமைக்கும் நேரத்தில் டி-ஷர்ட்டைக் கழற்றி சரியாக அணிந்துகொண்டார். அலிஸ் கோர்னேயின் இந்தச் செயலை நடுவர் எச்சரித்ததோடு, அவருக்கு பெனால்டியும் விதித்தார். ஆட்ட இடைவேளையில் ஆண் வீரர்கள் டி-ஷர்ட்டைக் கழற்றி அணிவது வழக்கம்.

ஆண்களுக்கு விதிக்கப்படாத பெனால்டி, வீராங்கனைகளுக்கு மட்டும் ஏன் எனக் கேட்டுப் பல்வேறு பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். தற்போது யுஎஸ் ஒபன் அசோசியேஷன், நடுவரின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x