Published : 02 Sep 2018 11:43 AM
Last Updated : 02 Sep 2018 11:43 AM

கற்பிதமல்ல பெருமிதம் 21: பெற்றோரைப் பார்த்துக்கொள்வது யார் கடமை?

ஊருக்குப் போக எல்லோரும் பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். தான் வரவில்லை என்று எப்படிச் சொல்வது என மாலதிக்குத் தெரியவில்லை. அப்பாவுக்குக் கண் ஆபரேஷன் ஆகி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது.

எல்லோரும் ஊருக்குப் போய்விட்டால், பிறந்த வீட்டுக்குப் போய் அப்பாவோடு இருக்கலாம் என்று நினைத்திருந்தாள். கணவனிடம் சொன்னபோது, சரி என்று சொன்னவன் இப்போது மாலதியும் கண்டிப்பாக வரவேண்டும் என அவனுடைய அப்பாவும் அம்மாவும் சொன்னதும் அமைதியாகிவிட்டான்.

மாலதியின் நாத்தனாரின் சின்ன மாமியாருடைய மூன்றாவது பையனுக்குக் கல்யாணம். போகாவிட்டால் பராவாயில்லை என்று மாலதி நினைத்தாள். அம்மா வீட்டுக்குப் போனால் கொஞ்சம் அம்மாவுக்கு, அப்பாவுக்கும் உதவியாக இருக்கும் என யோசித்தாள்.

இருவேறு நியாயம்

மாலதி மாதிரி எண்ணற்ற பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. போன வாரம் ஒரு பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்களோடு உரையாடியபோதும் இந்தக் கேள்வி வந்தது.

ஏன் டீச்சர், கல்யாணம் ஆனதும் பெண்கள் கணவன் வீட்டில் போய் இருக்க வேண்டும் என்று கேட்டாள் ஒரு பெண். பையன்களில் ஒருவன், பையனை வளர்த்து ஆளாக்கறாங்க. அவங்க பேரண்ட்ஸை பார்க்கறது அவனோட கடமைதானே என்றான்.

பெற்றோரை அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் பராமரிக்க வேண்டும் என்பது நல்ல சிந்தனைதான். ஆனால், தன் பெற்றோரை ஒரு ஆண் பார்த்துக்கொள்வது நியாயம் என்றால் ஒரு பெண்ணும்தானே தன்னைப் பெற்றவர்களைப் பார்த்துக்கொள்ளத்தானே வேண்டும்? அது ஏன் மறுக்கப்படுகிறது?

ஸ்மிருதி எழுதிய ‘மனு’வில் ஆரம்பித்து என்னென்னவோ காரணம் சொல்லப்படுகிறது. ஒரு பெண் பிறந்தவுடன் தந்தையின் பாதுகாப்பிலும், திருமணத்துக்குப் பிறகு கணவனின் பாதுகாப்பிலும், வயதான காலத்தில் மகனின் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும்.

ஏன் பெண்களை யாராவது எப்போதும் பராமரிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும்? பராமரிப்பு என்றால் இன்றைக்கு அநேக பெண்கள் சொந்தக் காலில் நிற்கிறார்கள். அவர்களால் தனக்கான உணவைத் தயாரிப்பதிலிருந்து பொருளாதார தேவை களைப் பூர்த்தி செய்துகொள்வது வரை தன்னைத் தானே பார்த்துக்கொள்ள முடியும்.

இதேபோல் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால், யாரிடமிடமிருந்து? பாம்பு, பல்லி, சிங்கம் போன்றவற்றிடமிருந்தா அல்லது ஆண்களிடம் இருந்தா?  ஆண்களிடமிருந்து என்றால், நாம் எவ்வளவு  காலத்துக்கு ஒரு பக்கம் பொறுக்கித்தனம் செய்யும் ஆண்களையும் இன்னொருபுறம் பொறுப்பான ஆண்களையும் உருவாக்கிக் கொண்டே இருப்போம்?

பெண்ணுக்கும் கடமை உண்டு

பாதுகாப்பு, பராமரிப்பு என்று சொல்லப்படுவது எல்லாம் பம்மாத்து.  உண்மையில் ஒரு பெண் எப்பொழுதும் யாராவது ஒரு ஆணுக்கு (அப்பா, கணவர், மகன்) கீழ்ப்படிந்துதான் இருக்க வேண்டும் என்பதுதான் பொது விதியாக உள்ளது.

முன்பு பெண், ஆணுடைய அடிமை என்று நேரடியாகச் சொன்னார்கள். இப்போதும் பலர் சொல்கிறார்கள். ஆனால், சமத்துவத்தை நாங்கள் நம்புகிறோம் என்று காட்டிக்கொள்ள விரும்புபவர்கள் பராமரிப்பு, பாதுகாப்பு என்று சொல்கிறார்கள். இப்படிச் சொல்லி ஒரு பெண் திருமணமானவுடன் கணவர் வீட்டில் வசிப்பதுதான் முறை என்கிறார்கள்.

ஆணை வளர்ப்பது போலத்தானே பெண்ணையும் படிக்க வைத்து ஆளாக்குகிறார்கள்? ஒரு ஆணுக்கு, தன் பெற்றோரை வயதான காலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை உண்டு என்றால், ஒரு பெண்ணுக்கும் அந்தக் கடமை இல்லையா?

ஒருமுறை பயிலரங்கு ஒன்றில் ஒரு பள்ளி ஆசிரியர் (ஆண்) சொன்னார். மேடம், என் மனைவி அவங்க அப்பா, அம்மா வந்தால் பிரியாணி செய்யறாங்க எங்க அப்பா, அம்மா வந்தால் கஞ்சித்தண்ணிதான் ஊத்தாறாங்க என்றார்.

குடும்பங்களில் கணவன், மனைவி உறவுகளில் என்ன நடக்கிறது? ஆரம்பத்தில் பம்மி இருக்கும் பெண், திருமணமான சில வருடங்களில் குடும்ப உறவுகளில் மேலோங்கிய கையை எடுக்கிறாள். ரிடையராகி வயதான காலத்தில், வீட்டில் இருக்கும் கணவனை காபி கொடுப்பதிலிருந்து உணவு கொடுப்பதுவரை இரண்டாம்தர பிரஜையாக நடத்துகிறாள். காரணம் என்ன? முன்பு அவள் மேல் அதிகாரம் செலுத்தப்பட்டது. குடும்பத்தில் காலூன்றிய பிறகு அவள் வசம்  அதிகாரம் அதிகம் ஆகும்போது,  அதைப் பயன்படுத்த எண்ணுகிறாள்.

அதிகாரங்களால் உறவுகள் கட்டமைக் கப்பட்டால் இதுதான் நடக்கும். உறவுகள் பரஸ்பர மரியாதை, அன்பு, நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டால், யாரும் யாரையும் அலட்சியப்படுத்த மாட்டார்கள். அதிகாரம் செலுத்தவும் மாட்டார்கள்.

திருமணமாகி கணவனோடு வாழ வரும் பெண்ணிடம் அனைவரும் கூடி, இதுதான் எங்க வீட்டுப் பழக்கம், நாங்க இப்படித்தான் காலம் காலமாக வாழ்ந்து இருக்கிறோம் என்று சொன்னால், அவள் அடங்குவாள். ஆனால், காலப்போக்கில் வீடு அவள் அதிகாரத்துக்குள் வரும்பொழுது, தன் அதிகாரத்தைச் செலுத்துவாள்.

கணவனின் பங்கு என்ன?

தன் அம்மா, அப்பாவை, மனைவியும் அம்மா, அப்பா என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கும் ஆண், பெண்ணுடைய அப்பா, அம்மாவைத் தனக்குக் கிடைத்த பெற்றோராகப் பார்க்கிறானா?

மனைவியின் பெற்றோர் வந்தால், ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு நகர்ந்துவிடுகிறான். அவன் அவ்வளவு பிஸியாம். ஆனால், அவன் மனைவி மட்டும் அவனுடைய பெற்றோர் கூப்பிட்ட குரலுக்குத் தயாராக இருக்க வேண்டும்.

மனைவியின்  பெற்றோரிடம், கணவன் அன்பாக, மரியாதையாக, பாசமாக இருந்தால் மனைவியும் கணவனின் பெற்றோரிடம் பாசமாக இருப்பாள். இல்லாவிட்டாலும் சொல்லலாம். பார், நம் இரண்டு பெற்றோரும் மரியாதைக்கும் பாசத்துக்கும் உரியவர்கள். நான் அதை மதிக்கிறேன். நீயும் மதி எனலாம்.

திருமணமானவுடன், பெண் வேரோடு பிடுங்கப்பட்டு, பெற்றோர் வீட்டில் இருந்து கணவன் வீட்டுக்கு வருகிறாள். கணவனை மட்டுமல்லாமல், அவன் வீட்டில் உள்ள அனைவரையும் புரிந்துகொண்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்றாற்போல் நடந்துகொள்ள வேண்டும்.

ஒரு ஆணுக்கு இந்த நெருக்கடி இல்லையே.

தீர்வுதான் என்ன?

ஆண், பெண் இருவரும் பராமரிப்பு தேவைப்படும் பெற்றோர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்ணைப் பெற்றவர்களும் ஆணைப் பெற்றவர்கள்போல அவளை ஆளாக்கப் பாடுபடுகிறார்கள். அவர்களுக்கும் வயது முதிர்ந்த காலத்தில் பாசமும் அரவணைப்பும் தேவைப்படும். அவர்களுக்கு மகன் இருந்தாலும்  பெண்ணிடமிருந்தும் பாசம் தேவைப்படுகிறது. பெண்ணுக்கும் பெற்றோரைப் பார்த்துக்கொள்வது கடமைதானே.

ஒரே  வீட்டில் எல்லாப் பெற்றோரும் கூடி வாழ முடியாமல் போகலாம். தனித்தனி வீடுகளில் இருந்தாலும், கணவன், மனைவி இருவரும் இரண்டு பக்கப் பெற்றோரின் நல்வாழ்வுக்கும் பொறுப்பு  எடுத்துக்கொள்ள வேண்டும். அதை மனதில் கொண்டுதான் குடும்ப பட்ஜெட்டைத் திட்டமிட வேண்டும்.

மனைவியின் பெற்றோரைப் பார்த்துக்கொள்வதை, கணவன் ஒரு வேண்டாத செலவாக நினைத்தால், மனைவியும் கணவனின்  பெற்றோருக்குச் செலவழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பாள். நியாயம் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது.  ஆண், பெண் இருவரும் இணைந்து இரண்டு தரப்புப் பெற்றோரின் உளவியல், பொருளாதாரத் தேவைகளை  நிறைவேற்றுவோம்.

 

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x