Published : 02 Sep 2018 10:27 AM
Last Updated : 02 Sep 2018 10:27 AM

ஆசிய விளையாட்டுப் போட்டி 2018: பதக்கங்களை அள்ளிய பெண்கள்!

இந்தோனேசியாவின் ஜகார்தா, பலெம்பெங்கில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களோடு போட்டிபோட்டு பெண்களும் பதக்கங்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். இந்தத் தொடருக்காக 36 பிரிவுகளில் விளையாட 572 வீரர், வீராங்கனைகளை இந்தியா அனுப்பியிருந்தது. அதில் 258 பேர் பெண்கள்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி 21 விளையாட்டுப் பிரிவுகளில் பெண்கள் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார்கள். 4 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்கள் அவர்கள் வசமாயிருந்தன.

ஸ்வப்னா பர்மன்

பெண்கள் வென்ற நான்கு தங்கப் பதக்கங்களில் ஹெப்டத்லான் பிரிவில் ஸ்வப்னா பர்மன் வென்ற தங்கப் பதக்கம் சிறப்பானது. கடுமையான உடல் உபாதையைப் பொறுத்துக்கொண்டு இந்தத் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார். ஹெப்டத்லான் பிரிவில் இவர் தங்கம் வெல்வார் எனப் பெரிய எதிர்பார்ப்பு இல்லை.

சீன வீராங்கனை குயின்லிங்தான் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இந்தப் போட்டி கடுமையாகவே இருந்தது. ஆனால், தனது அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி போட்டியின் இறுதியில் 6,029 புள்ளிகள் குவித்து ஸ்வப்னா பர்மன் தங்கப் பதக்கத்தை வென்றார். ஸ்வப்னாவுக்கும் குயின்லிங்குக்கும் வெறும் 64 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம்.

இந்த வெற்றியின் மூலம் ஆசியப் போட்டியில் ஹெப்டத்லான் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஸ்வப்னா பெற்றார். இதற்கு முன்பு சோமா பிஸ்வாஸ் பூஸனில் நடந்த போட்டியில்  வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இந்தப் பதக்கம் ஸ்வப்னாவின் வாழ்க்கையில் நிச்சயம் சிறப்பானது. ஆசியப் போட்டியில் பங்கேற்க ஜகார்தா வந்ததிலிருந்தே  ஸ்வப்னாவுக்குப் பல் வலி இருந்தது.

நாளுக்கு நாள்  வலி கூடியது. பல் வலிக்காக ஊசியோ மாத்திரையோ அவர் எடுத்துக்கொள்ளவும் இல்லை. அந்த மருந்துகளில் தடை விதிக்கப்பட்ட ஊக்க மருந்துப் பொருட்கள் இருந்தால், அதனால் பிரச்சினை ஏற்படும் என்று மருந்துகளைத் தவிர்த்தார். பல் வலியோடு ஹெப்டத்லான் போட்டியில் களமிறங்கினார்.

வலியைத் தாங்கிக்கொள்வதற்காகத் தாடையில் இறுக பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டார். ஆனால், பதக்கம் வென்ற தருணத்தில் பல் வலி அவருக்குக் காணாமல் போயிருக்கும்.

பல் வலி மட்டுமல்ல; அவருக்கு இரண்டு கால்களிலும் ஆறு விரல்கள் இருப்பதாலும் காலில் எப்போதும் வலி இருந்துகொண்டே இருக்கும். சரியான ஷூ கிடைக்காமல் சிரமப்பட்டார். இவருடைய தந்தை பஞ்சணன் பர்மன், ரிக்‌ஷா தொழிலாளி.

கடந்த சில ஆண்டுகளாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். குடும்பமே கஷ்டப் பட்டுவந்த வேளையில், தனது குறைபாட்டையும் தாண்டி தளராத முயற்சியால் இன்று தேசத்தைத் தலை நிமிரச்செய்திருக்கிறார் ஸ்வப்னா பர்மன்.

asian 3jpgரஹி சர்னோபத்

இரு தங்க மங்கைகள்

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தொடக்கம் முதலே நட்சத்திர வீராங்கனையாக 16 வயதான மனு பாகரே இருந்தார். ஆனால், இந்த முறை அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை. இறுதிப் போட்டிவரை முன்னேறியும் மனு பாகர் பதக்கம் வெல்லவில்லை. அவரோடு சேர்ந்து களமிறங்கிய ரஹி சர்னோபத் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

ரஹி சர்னோபத்தைப் போல மல்யுத்தத்தில் வினேஷ் பெற்ற தங்கப் பதக்கம் விலை மதிப்பில்லாதது. ரியோ ஒலிம்பிக்கின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாகப் போட்டியில் பங்கேற்க முடியாமல், அவர் கண்ணீர் சிந்தினார்.

ஆனால், அந்தக் கண்ணீருக்குத் தற்போதைய ஆசியப் போட்டியில் பெற்ற தங்கத்தின் மூலம் பெருமை சேர்த்திருக்கிறார். அதுவும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெயரோடு அவர் சாதித்தது புதிய மைல் கல்.

தொடர் ஓட்டத் தங்கம்

4x400மீ தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய மங்கைகள் தங்கள் முழுத் திறமையையும் காட்டித் தங்கப் பதக்கம் வென்றார்கள். பூவம்மா, சரிதாபென் கெய்க்வாட், ஹிமா தாஸ், விஸ்மாயா ஆகியோர் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள். இந்த விளையாட்டில் சிறந்து விளங்கும் சீன, ஜப்பான் மங்கைகளும் தங்கம் வெல்லும் முனைப்போடு வந்திருந்தார்கள்.

ஆனால், போட்டி தொடங்கியதிலிருந்தே இந்தியப் பெண்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். நால்வருமே சீரான அலைவரிசையில் ஓடி இலக்கை 3:28:72 நிமிடங்களில் கடந்தனர். இதன் மூலம் தங்கப் பதக்கம் இந்தியா வசமானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீன, ஜப்பான் வீராங்கனைகள் முறையே நான்கு, ஐந்தாவது இடங்களையே பிடித்தார்கள்.

வெள்ளி நாயகிகள்

பெண்களில் நான்கு தங்கப் பதக்கம் வென்றிருந்த நிலையில், வெள்ளிப் பதக்கங்களை 11 பெண்கள் பெற்றிருப்பதும் கவனம் பெற்றது. ஹிமா தாஸ், டூட்டி சந்த் (2), சுதா சிங், நீனா வராஹில் (தடகளம்),  பி.வி. சிந்து (பாட்மிண்டன்), பிங்கி பல்ஹாரா (குராஷ்),

கபடிக் குழு,  வில்வித்தைக் குழு, மகளிர் ஹாக்கிக் குழு, படகுப் போட்டி ஆகியோரும் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள்.  இவர்களில் ஹிமா தாஸ் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது மட்டுமல்லாமல்,

இரண்டு வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினார். முதலில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹிமா, கலப்பு தொடர் ஓட்டப் போட்டிக் குழுவிலும் இடம்பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.    இதன்மூலம் இந்த ஆசியப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்று முடிசூடா ராணியாகியிருக்கிறார். 

வெண்கல ராணிகள்

இந்த ஆசியப் போட்டியில் ஆண்கள் 15 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்த நிலையில், பெண்கள் 11 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார்கள். திவ்யா கக்ரான், பிங்கி பல்ஹாரா (மல்யுத்தம்), ரோஸிபினா நரெம் (உஷூ தற்காப்புக் கலை), அங்கிதா ரெய்னா (டென்னிஸ்), ஹீனா சித்து (துப்பாக்கிச் சுடுதல்), தீபிகா பல்லிக்கல், ஜோஸ்னா சின்னப்பா (ஸ்குவாஷ்), சாய்னா நேவால் (பாட்மிண்டன்),  பி.யு.சித்ரா, சீமா புனியா (தடகளம்), ஹர்சிதா தோமர் (படகு) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள்.

இதுவரை இந்தியா பெற்றுள்ள பதக்கங்களில் 26 பதக்கங்கள், பெண்களின் பங்கு. ஆசியப் போட்டிகள் இன்று நிறைவடையும் நிலையில், பதக்கப் பட்டியலில் மேலும் பல பெண்கள் இடம்பெறும் வாய்ப்பு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x