Last Updated : 02 Sep, 2018 11:43 AM

 

Published : 02 Sep 2018 11:43 AM
Last Updated : 02 Sep 2018 11:43 AM

பாதையற்ற நிலம் 14: அவலங்களை எதிர்கொள்ளும் சொற்கள்

இலங்கைத் தமிழ்க் கவிதைகள், மரபின் நினைவைக் கொண்டவை. இலங்கையில் புதுக்கவிதை தோன்றிய காலத்திலிருந்தே ஒருவிதமான மூர்க்கத்தைத் தனதோர் அம்சமாகக் கொண்டிருந்தன அந்தக் கவிதைகள். தொண்ணூறுகளில் இந்தியத் தமிழ்க் கவிதையில் இந்த அம்சத்தைப் பார்க்க முடிகிறது. ஆனால், இது ஒரு பொதுப் போக்குதான். சில அபூர்வமான கவிஞர்கள் இதிலிருந்து விலகிக் கவிதைகள் படைக்க முயன்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கவிஞர் ஆழியாள்.

தொண்ணுறுகளில் எழுதத் தொடங்கியவர் ஆழியாள். அவருக்கு முன்பு இரு தலைமுறை இலங்கைத் தமிழ்க் கவிதையில் உருவாகிவிட்டன. இந்த இரு தலைமுறைகளின் கவிதைகளின் மையமாக இலங்கையின் இன விடுதலைப் போராட்டம்தான் இருந்தது. ஆழியாளும் இதைத் தன் கவிதைகளின் வழியே வெளிப்படுத்தியுள்ளார்.

மரபின் தொடர்ச்சி

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணாகவும் கவிதைகளை எழுதியிருக்கிறார். ஆனால், ஆழியாளின் கவிதை வெளிப்பாட்டு முறை புதுமையானது. மரபின் ஓர்மையிலிருந்து முற்றிலும் விடுபடும் யத்தனத்தை இவரது கவிதைகள் லட்சியமாகக் கொண்டுள்ளன எனலாம். ‘மரபு எனும் மாயை’ எனத் தன் கவிதையில் கூறுகிறார் ஆழியாள். ஆனால், சில கவிதைகள் புதுக்கவிதையின் தொடக்ககால மரபைப் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன.

சண்முகம் சிவலிங்கத்தின் ‘அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக’ என்ற கவிதையையொத்த சில கவிதைகள் காத்திரத்துடன் எழுகின்றன. அவற்றுள் சில இன விடுதலையை முன்னிறுத்தி எழுகின்றன. சில பெண் அடக்குமுறைக்கு எதிராக எழுகின்றன. சில கவிதைகள் ஞானக்கூத்தனின் அங்கதத்துடன் சமூக அவலங்களைச் சித்தரிக்கின்றன.

‘கலங்கரை விளக்கத்து

இரவுக் காவலாளியாகவும்

ஆறடிக் குழியுள்

மெளனம் புடைசூழ இறக்கப்பட்ட

பிணமொன்றைப் போலவும்

தனித்தே

மிகத் தனித்தே இருக்கின்றேன்’

-என ஒரு கவிதையில் சொல்கிறார்.

பரமபிதாவுக்கு அறிவுரை

இந்தியத் தமிழ்க் கவிதையில் 70-களில் உருவான நவீன கவிதை என்ற இயக்கச் செயல்பாட்டுடன் ஒப்பிடத்தகுந்தது இந்தக் கவிதை. உள்ளுக்குள் அடர்ந்து தனிமை இருட்டைச் சொல்லும் இந்தக் கவிதையையொத்த கவிதைகளையும் ஆழியாள் எழுதியிருக்கிறார்.

அபூர்வமான அவல நகைச்சுவையுடன் சமூக அவலங்களை எதிர்கொள்வது ஆழியாள் கவிதைகளில் வெளிப்படும் ஒரு தனி அம்சம். இந்தப் பண்பு அவரை மற்ற இலங்கைக் கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அவரது முதல் தொகுப்பில் பரமபிதாவுக்கான பதிவுத் தபாலாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

‘அன்புள்ள பரமபிதாவுக்கு...’ எனச் சிநேகமாகத் தொடங்கும் கவிதை, ஆணுக்கும் பெண்ணுக்கும் என உருவாக்கப்பட்ட பாகுபாடுகளைக் கேள்வி கேட்கிறது. இந்தக் கவிதை வடிவ அமைப்பிலும் புதுமைகள் செய்து பார்த்திருக்கிறார். ஆணுக்கான உறவு நிலைகள், பெணுக்கான உறவு நிலைகள் இந்த இரண்டுக்குமாக உருவாக்கப்பட்ட விழுமியங்கள் இவற்றை முன்வைக்கிறார். புலியை உருட்டித் திரட்டி உருவாக்கிய பரமபிதாவுக்குப் புத்தி சொல்லி முடிகிறது.

பொதுவிலிருந்து விலகி…

அதுபோல போரின் பாதிப்புகளைச் சொல்லும் பெரும்பாலான கவிதைகளின் பொதுத்தன்மையிலிருந்தும் ஆழியாளின் கவிதைகளை விலக்கிப் பார்க்கலாம். மனிதனின் எலும்புக்கூடுகள் ஓடுகளைப் போல் விரவிக் கிடப்பதுபோல் ஒரு ஊரைக் கவிதைகளின் வழியே காண்பிக்கிறார். சிறுவர்கள் அதையே விளையாட்டுப் பொருட்களாகப் பாவிக்கிறார்கள்.

‘இன்று களப்பு மேட்டருகே

தன் சின்னண்ணை எறிந்த

மண்டை ஓட்டை

காய்ந்து வழுவழுக்கும் கால் எலும்புத்

துண்டால்- திருப்பியடித்துக்

கிரிக்கெட் விளையாடுகிறாள்

சின்னஞ்சிறு மகள் ஒருத்தி.

வெற்றி நமக்கே’

என்கிறது அந்தக் கவிதை.

இந்தியத் தமிழ்க் கவிதைகளில் தொண்ணூறுகளுக்குப் பிறகு முன்னெடுக்கப் பட்ட உடல் அரசியல் சார்ந்த கவிதைகளையும் ஆழியாள் எழுதியிருக்கிறார். இந்தக் கவிதைகள் விசனமாக அல்லாமல், அவல நகைச்சுவையாக, சில இடங்களில் கோபமாக வெளிப்பட்டுள்ளன. ‘சுவருக்குச் செவிகள் உண்டு/இருளுக்குக் கூர் விழிகளும் உண்டு/ பீறிக் கசியும் ரத்தமாய் மேலும்/ உண்டு இன்னொன்று- அவளுக்கு’ என்கிறது அவரது ஒரு கவிதை.

உறவின் நித்தியம்

ஆண்/பெண் உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகளையும் சில கவிதைகள் பேசுகின்றன. ஆணும் பெண்ணுமான வாழ்க்கையில் பிறித்தெடுக்கப்பட  பொருட்களைப் பட்டியலிடும் கவிதை, ஒருவிதத்தில் அந்த உறவின் நித்தியத்தைச் சொல்கிறது. இன்னொரு பக்கம் அதில் ஆதிக்கம் குறுக்கிடும் இடங்களையும் கண்டுபிடிக்கிறது.

ஆழியாளின் கவிதைகள், வடிவத் திறன் மட்டுமல்லாமல், பொருளிலும் திடம் கொண்டவையாக உள்ளன. கவிதைகள் தானாக உருவாகிவிடவில்லை. எல்லாக் கவிதைகளுக்கும் தீர்க்கமான லட்சியம் இருப்பதை உணர முடிகிறது. இலக்கற்ற கவிதைகள் உருவாக்கப்படும் இந்தக் காலத்தில் இது அபூர்வமானது.

அதுபோல கவிதை வடிவத்துக்குள் சில மர்மங்களை ஈர்ப்புடன் உருவாக்கியிருக்கிறார். சிறுவர்களின் சலசலப்பில் உறைந்திருந்த ரத்தம் மீண்டும் ஒழுகியோடுவதாக அவரது ஒரு கவிதை வரி விவரிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள், ஆழியாளை தனித்துவம்மிக்க கவிஞராக அடையாளப்படுத்துகின்றன.

ஆழியாளின் இயற்பெயர் மதுபாஷினி.  1968-ல் இலங்கை திருகோணமலையில் பிறந்தவர். ஆங்கில விரிவுரையாளர். மதுரையிலும் ஆஸ்திரேலியாவிலும் உயர் கல்வி பயின்றவர்.  ‘உரத்துப் பேச’ (மறு வெளியீடு), ‘துவிதம்’ (மறு வெளியீடு), ‘கருநாவு’ (மாற்று வெளியீடு) ஆகிய மூன்று தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

paadhaiyatra 2jpg

‘பூவுலகைக் கற்றலும் கேட்டலும்’ (அணங்கு வெளியீடு) என்ற தலைப்பில் ஆஸ்திரேலிய ஆதிகுடிகளின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்துவருகிறார்.

அம்மா

அம்மா

தினமும்

புல்வெளியைக் கடந்து,

தார் வீதியைக் கடந்து,

மைதானத்தைக் கடந்து,

ஓடுகின்றாள்.

பள்ளிக்கூடத்தில்

தெருவில்,

விளையாட்டுத் திடலில்,

வயல்களில்,

தொடர்மாடி வேலைத்தளத்தில்,

வீட்டில் என

எங்கும்

அம்மா சில்லுக்கட்டினாற் போல் ஓடினபடியே இருக்கிறாள்.

நம் ஓய்வுநேரங்களிலும்,

விடுமுறை நாட்களிலும், பண்டிகைக் காலங்களிலும் கூட

அம்மா அவதியாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறாள்.

இலைகளைக் காணாது பாதையோரத்து மரங்கள்

வெலவெலத்து நிற்கின்ற நாட்களில்,

சருகுகளைச் சலசலக்க வைத்தபடி

அம்மா ஓடுகிறாள்.

காதோரச் சவ்வுகளில் வலிசுண்ட

கிளைகளாய் உறைந்து தொங்குகிற

கொடும் பனியின் வெண்மையூடு,

ஒரு சறுக்கு வித்தைக்காரியைப் போல்

அம்மா குளிரில் ஓடுகிறாள்.

அம்மா

எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறாள்.

நேரம், நேரம் என்று ஆலாய்ப் பறக்கிறாள்.

அமைதியின் நிழற் பொழுதுகளில்

ஏகோன் காய்கள் பொத் பொத்தெனெ உதிரும் போதும்

பறவைக்கூட்டங்கள் ஜிவ்வென நீருள் இறங்கும் போதும்

அம்மாவின் கால்கள் மாத்திரம் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

அம்மா ஓடிக்கொண்டே இருக்கிறாள்

வசந்தம் முளைகட்டி மலர்வதைப்போல்

தலைதிருப்பி

என்னையும், உன்னையும் பார்த்தபடி

புன்னகைத்துக் கையசைத்த வண்ணம்

அதோ அம்மா ஓடுகிறாள்.

(பாதைகள் நீளும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x