Published : 26 Aug 2018 09:45 AM
Last Updated : 26 Aug 2018 09:45 AM

கற்பிதமல்ல பெருமிதம் 20: சூப்பர்வுமனாக இருப்பது யாருக்கு நல்லது?

ஞாயிற்றுக்கிழமை லீவுதான். ஆனால், வீட்டுக்கு விருந்தாளிகள் வருவதாக இருந்தார்கள். கௌரி, தலையணை உறை, படுக்கை விரிப்புகளைத் துவைக்கப் போட்டாள். புது உறைகளை மாட்டினாள்.

மதிய சமையலுக்கு வேண்டிய காய்களை எடுத்துவைத்தாள். இட்லி, சட்னி செய்தாள். மாமியார், மாமனார் இருவரும் காலைக் கடன்களைக் கழிக்க உதவினாள். நடுவில் அம்மாவிடம், அப்பாவிடம், அக்காவிடம், பள்ளித்தோழியிடம் இருந்து வந்த போனுக்குப் பதில் சொன்னாள். பக்கத்து வீட்டு அம்மாவுக்கு வாடகை கார் புக் பண்ணிக் கொடுத்தாள். பரபரவென்று பத்துக் கைகளுடன் இயங்கினாள்.

கணவன் டீக்கடைக்குப் போன நேரத்தில் மாடுகளுக்குத் தீவனம் வைத்தாள் செல்வி. மாமனாருக்கு விறகு அடுப்பில் வெந்நீர் வைத்தாள். சுய உதவிக் குழுத் தலைவியாக மாலை கூட்டம் இருப்பதை போன் செய்து உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்தினாள்.

குழந்தைகளை எழுப்பி முகம் கழுவ வைத்து டீ போட்டாள். மெதுவாக ஆற அமர வந்த கணவன், வாசலில் உட்கார்ந்து பேப்பர் படிக்க ஆரம்பித்தான். டிபன் பாக்ஸில் குழந்தைகளுக்குச் சாப்பாடு கட்டி வைத்துவிட்டு, பால்வாடி வேலைக்குக் கிளம்பத் தயாரானாள்.

நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் வேலைக்குப் போய் பொருளீட்டாத பெண்களின் அந்தஸ்து கீழாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்காகக் குடும்பங்களும் சமூகமும் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பெண்களைக் கொண்டாடவில்லை. மாறாக, அவர்கள் வேலைக்குப் போனாலும் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறது.

அப்படி இல்லாத பெண்களை வேலைக்குப் போகிற பெண்கள் திமிர் பிடித்தவர்கள், சொந்தக் காலில் நிற்பதால் ஆண்களை மதிக்க மாட்டார்கள், வீட்டுப் பொறுப்புகளை ஒழுங்காகச் செய்ய மாட்டார்கள், குழந்தைகளைச் சரியாக வளர்க்க மாட்டார்கள், அவர்களுக்கு ஒழுங்காகச் சமைக்கத் தெரியாது, உறவினர்களை மதித்து அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு வரமாட்டார்கள், வீட்டில் வயதானவர்களைப் பராமரிக்க மாட்டார்கள் என்றெல்லாம் விமர்சிக்கிறார்கள்.

மனைவியாக, தாயாக, மகளாக, உறவுக்காரராக இப்படிப்பட்ட அவப்பெயர் என்றால், அலுவலகத் தரப்பில் எத்தனை எத்தனை விமர்சனங்கள்.

பெண்களை வேலைக்கு வைத்தால், குழந்தைக்கு உடம்பு சரியில்லை, வீட்டில் பெரியவர்களுக்கு உடம்பு சரியில்லை என்று அடிக்கடி லீவு எடுப்பார்கள், மகப்பேறு விடுப்பு வேறு தர வேண்டும், எத்தனை பெரிய பொறுப்பில் இருந்தாலும் வீட்டைத்தான் முதலாக நினைப்பார்கள், வேறு ஊருக்குப் போகச் சொன்னால் போக மாட்டார்கள் என்று பெரிய குற்றப் பட்டியலை வாசிப்பார்கள்.

வீட்டிலும் ஏச்சு, வெளியிலும் ஏச்சு. இதை எதிர்கொள்ளப் பெண்கள் என்ன செய்கிறார்கள்? விசுவரூபம் எடுக்கிறார்கள். சூப்பர்வுமன் ஆகிறார்கள். வீடு, அலுவலகம், குழந்தைகளின் பள்ளி, உறவினர்களின் வீடு என எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் சமர்த்து எனப் பெயர் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சமையல் வேலை, வீட்டை ஒழுங்குபடுத்துவது, குழந்தைகளின் பாடத் திட்டம், அலுவலக வேலை என எல்லா இடங்களிலும் ஏனோதானோவென்று இயங்காமல், விலாவாரியாக நுணுக்கமாகச் செயல்பட நினைக்கிறார்கள்.

காய்கறிகள் வாங்குவது, மளிகைப் பொருட்களை ஸ்டாக் செய்வது என எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிடுகிறார்கள். மண்டைக்குள் எந்நேரமும் பொறுப்புகளைப் பட்டியலிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

ஏனென்றால் இப்படிப்பட்ட பெண் களைத்தான் நாம் ஸ்மார்ட், சமர்த்து என்று பாராட்டுகிறோம். அப்படி இல்லாத பெண் களைத் திமிர்பிடித்தவள் என்கிறோம் அல்லது சாமர்த்தியம் போதாது, மக்கு என்கிறோம்.

ஆனால், இப்படி சூப்பர்வுமனாக இருப்பதால் வரக்கூடிய பிரச்சினைகள் என்னென்ன என்று நாம் யோசிப்பதில்லை.

எந்நேரமும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றுவது அவ்வளவு சுலபமில்லை. வித்தைக்காரன் கயிற்றில் பேலன்ஸ் செய்யும் கதைதான். பார்ப்பவர்களுக்கு பேலன்ஸ் செய்பவர், மனத்தையும் உடலையும் ஒருமுகப்படுத்தி கயிற்றில் நடப்பது சுவாரசியமாகப் படலாம். ஆனால், அது எவ்வளவு மன அழுத்தத்தை உருவாக்கும். கரணம் தப்பினால் மரணம் என வேறு சிந்தனை இல்லாமல் செயல்பட வேண்டும்.

பெண்கள் எப்போதும் எதிலும் கவனமாக விவரங்களோடு செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். பத்து நாள் சரியாக இருப்பது பெரிதாகப்படாது. ஒரு நாள் ஒரு வேளை தவறினாலும் ஏச்சுதான். சரியாக இருக்க முடியாது போகும்போது பெண்களும் குற்றவுணர்வுக்குள் உந்தப்படுகிறார்கள். அவளைவிட ஸ்மார்டாக இருக்கும் பெண்ணோடு மற்றவர்கள் ஒப்பிடும்போது, தான் இன்னமும் இன்னமும் சரியாகச் செயல்பட வேண்டும் என்ற நச்சு வட்டத்துக்குள் தானாகப் போய் மாட்டிக்கொள்கிறார்கள்.

“என் ஃபிரெண்டோட அம்மா பூரி, பஜ்ஜி, பாஸ்தா என விதம் விதமாக சமைக்கிறாங்க. நீ சுத்த மோசம்மா” என்று குழந்தைகள் சொன்னால்,  தன் வேலைப் பளுவைச் சொல்லி அவர்களுக்குப் புரியவைப்பதைவிட இன்னும் சீக்கிரம் எழுந்து விதம் விதமாகச் சமைக்க பெண்கள் நினைக்கிறார்கள்.

நகரவே முடியாமல் கீழே விழும்வரை பெண்கள் ஓய்வதில்லை. முதுகுவலியா? வலி நிவாரணி மாத்திரை சாப்பிடு. தைலம் தேய். எதற்கு? திரும்ப எழுந்து வேலை செய்ய.

சூப்பர்வுமன் வியாதி பெண்களை உடல்ரீதியாக மட்டுமல்ல; உணர்வு ரீதியாகவும் பாதிக்கிறது. தனக்கென ஒரு நாளில் அரை மணி நேரம்கூட ஒதுக்க முடியாதது சலிப்பைத் தருகிறது. பல பெண்கள் நாங்கள் இதை விரும்பித்தான் செய்கிறோம், எங்கள் குடும்பத்தின் மேல் உள்ள அக்கறையில், பாசத்தில்தான் செய்கிறோம் என்று சொல்லலாம். இதுதான் சூப்பர்வுமன் வியாதி என்பது.

யோசித்துப் பாருங்கள். பெண்களுக்கு உணர்வுகள் இல்லையா, சின்னச் சின்ன ஆசைகள் இல்லையா? இரவில் மென்மையான பாடல்களைக் கேட்க, ஆற அமரச் சாப்பிட, தலை சீவ, பிடித்தபடி நிதானமாக உடை அணிய, தன் தோழிகளைப் பார்க்க, தனக்குப் பிடித்த பொழுதுபோக்கைத் தொடர… இப்படிச் சின்னச் சின்ன, பெரிய பெரிய ஆசைகள் எவ்வளவோ.

பெண்கள்  இப்படித் தங்களுக்குள் உள்ள மெல்லிய உணர்வுகளை உணர்வதில்லை. உணர்பவர்களும் நசுக்கிக்கொள்கிறார்கள்.

இதையெல்லாம்விட வேறொரு பெரிய ஆபத்தும் இருக்கிறது. நீங்களே எல்லாவற்றையும் செய்யும் தாயாக, மனைவியாக, மருமகளாக இருக்கும்வரை உங்களைச் சுற்றி இருப்பவர்கள் குடும்பத்தில் தங்களுக்குமான பொறுப்பு உண்டு என்பதை உணர மாட்டார்கள். ஸ்மார்ட்டான அம்மாவைப் பெற்ற பையன், திருமணமாகிவரும் பெண்ணிடம் என் அம்மாவைப் போல் உண்டா என்று சொல்லி குற்றவுணர்வை, பொறாமை உணர்வைத் தூண்டப் பார்ப்பான்.

இன்றைக்குக் கணவனை இழந்த பெண்கள் வாழ்க்கையைச் சமாளிப்பதுபோல், மனைவியை இழந்த கணவன்மார்கள் சமாளிக்கத் திணறுகிறார்கள்.

உண்மையில் பெண்கள் இப்படி சூப்பர்வுமனாக இருப்பதால் அவர்களுக்கு மட்டும் பிரச்சினை இல்லை. அவர்கள் குழந்தைகளையும் கணவரையும் பொறுப்பில்லாதவர்கள் ஆக்குகிறார்கள். ஒரு பெண் காலையில் இரண்டு மணி நேரம் செய்யக்கூடிய வேலையை வீட்டில் உள்ள கணவர், குழந்தைகளோடு பகிர்வதன் மூலம்  அவர்களுக்கும் உளைச்சல் குறைகிறது. வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் குடும்ப பாரம் அல்லது பொறுப்பு என்ன என்பது தெரியவருகிறது. அனைவரும் பேசிச் சிரித்து சாப்பிட நேரம் கிடைக்கிறது. இப்படி வீட்டில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து வேலையைப் பகிரச் செய்வதுதான் உண்மையான சூப்பர்வுமன் செயலாற்றல்.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x