Published : 18 Aug 2018 06:10 PM
Last Updated : 18 Aug 2018 06:10 PM

எசப்பாட்டு 49: பெண்கள் கொடுமைப்படுத்துவதில்லையா?

கல்யாணமாகி ஒரு குழந்தையும் பெற்ற பின் அவனுடைய மனைவி, “உன்னை எனக்குப் பிடிக்கலே” என்று சொல்லிவிட்டதால் என் நீண்ட கால நண்பர் ஒருவரின் மகன்  பெங்களூருவில் தனித்து வாழ்கிறான். அவனுடைய சம்பளம், ஐ.டி. துறையில் பணியாற்றும் மனைவியின் சம்பளத்தைவிடக் குறைவு என்பதுதான் அடிப்படையான பிரச்சினை.

அதையொட்டி அவள் அவனைக் கேலி செய்வதில் ஆரம்பித்து, குத்திக்காட்டுவதும் திட்டுவதும் உளவியல்ரீதியாக அவனைக் காயப்படுத்துவதுமாக இருந்து, கடைசியில் அவனால் தாக்குப்பிடிக்க இப்போது முடியாமல் தனித்து வாழ்கிறான். ஆனாலும், தன் மகனோடும் மனைவியோடும் வாழும் கனவைச் சுமந்துகொண்டு அலைகிறான்.

 அந்தப் பெண் இப்போது அவளுடைய தாய் தந்தையுடன். பலர் மூலமாக அக்குடும்பத்தாரோடு பேசியும் இணைப்புக்கு வழி கிடைக்கவில்லை. அந்தப் பெண் தன் இறுக்கம் தளர்த்த மறுக்கிறாள். “ரொம்பப் பேசினால் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தில் குடும்பத்தையே உள்ளே தள்ளுவேன்” என்கிறாள்.

இப்படிப் பாதிக்கப்பட்ட ஆண்களும் நம் சமூகத்தில் இருக்கிறார்கள். எண்ணிக்கையில் குறைவென்றாலும் இதுவும் இன்றைய யதார்த்தங்களில் ஒன்றுதான். இது போன்ற சில பாதிப்புகளை மையமிட்டே நம் நாட்டின் பல நகரங்களில் ஆணுரிமைச் சங்கங்கள் இயங்குகின்றன.

தாமதமாக ஒலித்த உரிமைக் குரல்

‘இந்த நாட்டின் சட்டங்கள் எல்லாமே பெண்களுக்குச் சாதகமாகவே இயற்றப்பட்டுள்ளன. பாதிக்கப்படும் ஆண்களுக்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு ஏதும் இல்லை’ என்பது  ஆண்கள் பாதுகாப்பு அமைப்புகள்  தொடர்ந்து எழுப்பிவரும் குரல். அதிலும் குறிப்பாக  இந்தியக் குற்றவியல் சட்டத்தின்  498-வது பிரிவு  திருத்தப்பட வேண்டும் என்பது அவர்களின் முக்கியமான கோரிக்கை. அந்தச் சட்டப் பிரிவு, பெண்களுக்கு எதிரான  வன்முறையை நிகழ்த்தும் கணவன் அல்லது கணவனைச் சார்ந்த உறவினர்களைத் தண்டிக்க வகை செய்கிறது. அந்தச் சட்டத்தைப்  பல பெண்கள் தவறாகப் பயன்படுத்தி அப்பாவி ஆண்களையும்  நாத்தனார், மாமியார்களையும் ஜெயிலுக்கு அனுப்பி விடுகிறார்கள் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகப் பொய்யான ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி விவாகரத்து வாங்கிக்கொண்டு கணவன் வீட்டிலிருந்து கணிசமாகப் பணம் பறிப்பதற்கான உத்தியாக வரதட்சிணைக்கு எதிரான சட்டத்தைப் பெண்கள் பயன்படுத்துகிறார்கள்; திருமண பந்தத்தின் புனிதத்தையே கெடுக்கிறார்கள் என்பது பரவலாக இந்தச் சங்கத்தினர் முன்வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு.

பெண்களுக்கெதிரான வன்முறைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றன. அவர்களையும் அவர்களது உரிமைகளையும் பற்றிய பேச்சே 19-ம் நூற்றாண்டில்தான் தொடங்கியது. ஜனநாயக நாடுகளில் பெண்களின் வாக்குரிமை பற்றிய கோரிக்கைகளும் அப்போதுதான் எழுந்தன. பால்பேதம், பாலியல் வன்முறைக்கு எதிரான கருத்துகள் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் தெளிவான குரலில் மேலெழுந்து வந்தன.

யார் செய்தாலும் குற்றமே

வரதட்சிணைக் கொடுமைகளும் ஸ்டவ் வெடித்து மருமகள்கள் மட்டும் சாவதும் அதிகமானபோதுதான் இந்தியாவில் பெண்கள் இயக்கங்கள் வேகம் பெற்றுக் குரல் எழுப்பின. பெண்களின் வாழ்வுரிமையைக் காக்கச் சில சட்டங்கள் இந்த 50 ஆண்டுகளில்தான் இயற்றப்பட்டுள்ளன. அவையும் அமலாவதில்லை என்பது  யதார்த்தம். சட்டங்களைச் சில பெண்கள் (பல பெண்கள் அல்ல) ஆண்களைப் பழிவாங்குவதற்காகவோ பணம் பறிப்பதற்காகவோ தவறாகப் பயன் படுத்தினால், அது தவறுதான். அதை நாம் ஆதரிக்க முடியாது. ஆனால், அதற்காகச் சட்டங்களைத் திருத்துகிறோம் என்ற பேரில் ஆண்கள் (குற்றமிழைத்த) தப்பிப்பதற்கான ஓட்டைகளை, போராடிப்பெற்ற இந்தச் சட்டங்களில் நாமே உருவாக்கிவிடக் கூடாது.

பெண்கள் எல்லோருமே நல்லவர்கள், அப்பாவிகள், பாதிக்கப்பட்டவர்கள் என்ற  ‘வெள்ளையடிப்பை’ நாம் செய்யவில்லை. ஆண்களிடம் இருக்கும் எல்லாக் குற்ற மனக்கூறு களும் ஒரு குறிப்பிட்ட சதவீதமாவது பெண்களிடமும் இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆணாதிக்கச் சமூகத்தில் வாழும் பெண்களும் அதிலிருந்து பாடம் பெறுவார்கள்தானே? ஏமாற்றுதல், ஊழல் செய்தல், திட்டுதல், காயப்படுத்துதல், துரோகமிழைத்தல், வன்முறைச் செயல்பாடுகள் போன்றவையெல்லாம் குற்றங்கள்தாம்.

இவற்றைப் பெண்ணும் செய்வாள். இரக்கமற்ற பெண்களை இச்சமூகம் உருவாக்கவில்லை என்றா நாம் சொல்கிறோம்? ஆனால், அது பாலினப் பிரச்சினையா பாலியல் பிரச்சினையா என்பதுதான் நாம் வைக்கும் கேள்வி. பொதுவான குற்றங்களை ஆணும் செய்கிறான், பெண்ணும் செய்கிறாள். அதற்கான சட்டப்படி அவர்கள் தண்டிக்கப்படு கிறார்கள். ஆனால், பாலியல் குற்றங்களைப் பெண்கள் செய்கிறார்களா? ஆம் எனில் அது எத்தனை சதவீதம்?

ஒழுக்கப் பொறுப்பாளர்கள்?

பெண் என்ற உயிரியல் காரணத்தால், பாலினக் காரணத்தால் பெண்கள் வதைக்கப்படுவதுபோல, ஆண்கள் பெண்களால் வதைக்கப்படுகிறார்களா? என்பதுதான் கேள்வி.

‘கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண்கள்’ பற்றிப் பத்திரிகைகளில் செய்திகள் வருவதைச் சுட்டிக்காட்டுவார்கள். எப்போதாவது  எங்காவது நடக்கும் இதுபோன்ற  குற்றங்களைச் சொல்லிக்காட்டி  தினம்  தினம் சித்ரவதைக்குள்ளாகும்  ஒட்டுமொத்த பெண்கள் மீது கோபப்படுவதும் ஆணின் குற்றங்களுக்கு இணையாக அவற்றைப் பாவித்துப் பேசுவதும் என்ன நியாயம்?

தனிப்பட்ட முறையில் தன் மனைவியாலோ வேறு பெண்ணாலோ உண்மையிலேயே பாதிக்கப்பட்ட ஒரு ஆணிடம் நாம் என்ன சமத்துவத்துவக் கருத்தை எப்படிப்பட்ட நியாயங்களோடு  சொன்னாலும் அவர் காதில் ஏறாது  என்பது தெரிந்த ஒன்றுதான். அவர்களை வேறுவிதமாக நாம் அணுக வேண்டும்.

ஆனால், ‘பெண்ணுக்குச் சுதந்திரம் சுதந்திரம்னு  பேசி அவுங்களை முழுசா அவுத்துவிட்டுட்டா சமூகம் கெட்டு, குட்டிச் சுவராப் போகும்’ என்று கோபப்படுகிற  ‘ஒழுக்கப் பொறுப்பாளர்கள்’தாம்  எண்ணிக்கையில் அதிகம். அவர்களின் மனங்களில் சமத்துவ எண்ணத்தை விதைப்பதுதான்  நமக்கு  ஆயுட்காலச்  சவாலாக  இருக்கும்; இருக்கிறது.

பிம்பச் சுமைகள்

அப்படியானால், ஆணாகப் பிறந்த காரணத்தால் ஆணுக்கு அவதி ஏதுமே இல்லையா? இருக்கிறது. முக்கியமாக ஆணுக்கென்று நம் சமூகம் விதித்திருக்கும் கடமைகள். ஆண்மை என்று நம் பண்பாடுகள் கட்டமைத்திருக்கும் கற்பிதங்கள். இவையெல்லாம் பிரச்சினைகள்தாம். குடும்பத்தின் பொருளாதாரப் பாரத்தை ஆண்தான் சுமக்க வேண்டும். பெண் சம்பாதித்தாலும் அதை வைத்துக் குடும்பம் நடப்பதாக ஆகிவிடக் கூடாது.

ஆண் தன் மனத்துயரத்தை  வெளிக்காட்டக் கூடாது. எதுவானாலும் உள்ளுக்குளேயே வைத்துச் சமாளிக்கணும். ஆண்  பிறர் முன்னிலையில் கண்ணீர் விட்டு அழக் கூடாது. ஆண்தான் குடும்பத்தை வழி நடத்த வேண்டும். ஆண்தான் குடும்பத் தலைவன்… இப்படியான பிம்பச் சுமைகள் ஆணாகப் பிறந்ததால் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், இவற்றுக்கெல்லாம் காரணம் பெண்களா? நம் சமூகமும்  பண்பாடும் அல்லவா?

இப்படியெல்லாம் நாங்க கஷ்டப்படுகிறோமே என்று ஆண்கள் , பெண்கள் மீதும் பெண்ணிய இயக்கங்கள் மீதும் கோபப்படுவது அறிவுடைய செயலா?

மாதர் சங்கத் தோழர்களிடம் பெண்ணால் பாதிக்கப்பட்ட ஆண் முறையிட்டு, அவர்கள் பக்கம் நியாயம் இருக்கும்போது அந்த ஆண்களுக்காகப் பேச்சு வார்த்தை மூலமும் சட்டபூர்வமாகவும் எடுத்து நடத்திச் சங்கம் தீர்வு கண்டதை நானே பலமுறை பார்த்திருக்கிறேன்.

ஆண்கள் இந்தச் சமூகம் கட்டமைத்திருக்கும் ஆண்மை குறித்த கற்பிதங்களிலிருந்து உடைத்துக் கொண்டு வெளிவர வேண்டும். உள்ளுக்குள்ளேயே வைத்துக் குமைந்துகொண்டிராமல் யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும். கண்ணீர் விட்டுக் கரைவது மிகப் பெரிய ஆறுதலைத் தரும் அரு மருந்து. அதை ஆண்கள் கைக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் பெண் மீது குற்றம் சுமத்துவதில் எவ்விதமான வரலாற்று நியாயமும் இல்லை.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x