Published : 18 Aug 2018 06:09 PM
Last Updated : 18 Aug 2018 06:09 PM

என் பாதையில்: உயிர்ப்புடன் வைத்திருக்கும் வாசிப்பு

ஒரு கிராமத்தில்தான் பிறந்து, வளர்ந்தேன். எங்கள் தெருவில் சுமார் பத்துப் பதினைந்து வீடுகளே இருக்கும். சுமார் 30 வருடங்களுக்கு முன் ஓய்வு நேரத்தில் பெண்கள் அனைவரும் ஒன்றுகூடிப் பேசுவார்கள். அந்தப் பேச்சு மெல்ல ஊர் வம்பாக மாறும். இல்லையெனில் தாயம், பரமபதம் விளையாடுவார்கள். எனக்கு ஏனோ அவற்றில் எல்லாம் ஆர்வம் இல்லை.

எப்போதும் கையில் ஏதாவது ஒரு புத்தகத்துடன்தான் இருப்பேன். இதற்குக் காரணம் என் அப்பா. அவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். நானும் அதே பள்ளியில்தான் படித்தேன்.

பள்ளியில் உள்ள நூலகத்தில்தான் பெரும்பாலும் என் பள்ளி நாட்கள் கழிந்தன. இதற்குக் காரணம் அப்போது வெளிவந்த  வார இதழ்கள்தாம். வார இதழ்களைப் படிப்பதில் தொடங்கியது என் வாசிப்புப் பழக்கம். அதில் வரும் தொடர்கள், துணுக்குகள் ஆகியவற்றை ஆர்வமாகப் படிப்பேன். பள்ளிப் புத்தகங்களைத் தவிர்த்து மற்ற புத்தகங்களைப் படிக்கும் என் ஆர்வத்தைப் பார்த்த என் அப்பா எனக்கு நிறைய நல்ல புத்தகங்களை நூலகத்தில் இருந்து கொண்டுவந்து கொடுப்பார். 

ஏழாம் வகுப்பு படித்தபோது எழுதிய கவிதை வார  இதழ் ஒன்றில் நான் வெளியானது. அதைப் பார்த்த எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் எழுதிய கவிதை வெளியானது குறித்துத் தன் நண்பர்களிடம் சொல்லி என்னைவிட மிகவும் சந்தோஷப்பட்டார் என் அப்பா.

அந்தச் சிறு கவிதைக்குக் கிடைத்த பாராட்டு என்னை மேலும் நிறைய விஷயங்களைத் தேடித் தேடி படிக்கத் தூண்டியது. சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன், லக்ஷ்மி, பரணிதரன் போன்ற எழுத்தாளர்கள் எழுதும் கட்டுரைகள், புத்தகங்களைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அப்படி ஒருநாள் என் பெரியம்மா வீட்டுக்குச் சென்றபோது கல்கியின், ‘பொன்னியின் செல்வன்’ புத்தகம் என் கண்ணில்பட்டது.

அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியதுதான் வாசிப்பின் மீதான காதலை எனக்கு அதிகப்படுத்தியது. ‘பொன்னியின் செல்வன்’ நாவலை ஒரே மூச்சில்  படித்து முடித்துவிட்டேன். அதன்பின்னர் சரித்திர நாவல்களான  ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’ எனத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு கட்டத்தில் என் வாசிப்புப் பழக்கம் என்னை எழுதத் தூண்டியது. என்னைப் பாதித்த, நான் ரசித்த புத்தகங்கள் குறித்த விமர்சனங்களை வார இதழ்களுக்கு எழுதத் தொடங்கினேன். அப்படி நான் எழுதி வெளியாகும் படைப்புகளைப்  பார்ப்பது தன்னம்பிக்கை தரும். எனக்கு ஏற்படும் மனச்சோர்வையும் கவலையையும் போக்குவது என் வாசிப்புப் பழக்கமே. அதுதான் எனக்கே தெரியாமல் எனக்குள் இருந்த ஒரு ரசிகையையும் விமர்சகியையும் வெளிக்கொண்டு வந்தது. அதுவே என்னை உற்சாகத்துடனும் உயிர்ப்புடனும் வைத்திருக்கிறது.

- ஏ.உமாராணி, தர்மபுரி.

உங்கள் அனுபவம் என்ன?

தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். தயங்காமல் எழுதுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x