Published : 18 Aug 2018 06:06 PM
Last Updated : 18 Aug 2018 06:06 PM

கற்பிதமல்ல பெருமிதம் 19: பெண்களை இழிவுபடுத்துவது நகைச்சுவையா?

தோழியின் பணி நிறைவு நாள் அன்று அனைவரும் மூன்று மணிக்குச் சந்திப்பதாக ஏற்பாடு. இரண்டேகால் மணிக்கு எங்கிருக்கிறார்கள் எனக் கேட்டு இரண்டு, மூன்று தோழிகளுக்கு போன் செய்தேன். எல்லோரும் ஒரே இடத்தில் பணி நிறைவு நாளையொட்டி சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

நீ ஏன் வரவில்லை என்றார்கள். நிகழ்ச்சி மூன்று மணிக்குத்தானே என்றேன். வாட்ஸ் அப்பில் உணவு பற்றிய குறுஞ்செய்தி அனுப்பியதைப் பார்க்கவில்லையா என்றார் கள். நேரில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு, ஒரு வழியாக இரண்டே முக்கால் மணிக்குப் போய்ச் சேர்ந்தேன். திட்டம்  மாறியதை போன் செய்து சொல்லக் கூடாதா என்றேன். உன்னை யார் நம் வாட்ஸ் அப் குழுவை விட்டு போகச் சொன்னது என்றாள் ஒரு தோழி.

நகைச்சுவை உணர்வு இல்லையா?

அவ ரொம்ப சீரியஸ் டைப். நகைச்சுவை உணர்வு கம்மி. எந்த மெசேஜ் போட்டாலும் அது பெண்களுக்கு எதிரானது, மதங்களுக்கு எதிரானதுன்னு கொடிபிடிக்க ஆரம்பிச்சிடுவா என்றாள் இன்னொரு தோழி.

ஏன்பா இப்படி இருக்கே? எதையும் ரசிக்கணும்; ஆராயக் கூடாது என்றாள் மூன்றாவது தோழி.

பெண்ணை மட்டம் தட்டிப் பகிரப்படும் ஒரு ஜோக்கை ரசிக்காவிட்டால் நகைச்சுவை உணர்வு இல்லை என்கிறார்கள்.

வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுபவரைப் பார்த்துக் குழந்தைகள் சிரித்தால், நாம் என்ன கற்றுத் தருகிறோம்? சிரி என்றா, சிரிக்காதே என்றா?

நகைச்சுவை என்பது பெரும்பாலும் இங்கே எப்படிப் பொருள் கொள்ளப்படுகிறது? யாரோ ஒருவரைக் கிண்டல் அடித்து  ரசிப்பது. ஏன் நம்மால் யாரையும் கிண்டல் செய்யாத ஜோக்குகளை யோசிக்க முடிவதில்லை?

டாக்டர்: உங்கள் கணவருக்கு ஒய்வு தேவை. தூக்க மாத்திரை எழுதித் தருகிறேன்.

மனைவி: நான் அவருக்கு அதை எப்பொழுது தர வேண்டும்.

டாக்டர்: மாத்திரை உங்களுக்கு.

மனைவி: பக்கத்து வீட்டுக்காரர் வேலைக்குப் போகும்போழுது அவர் மனைவியை முத்தமிட்டு விட்டுச் செல்கிறார். நீங்களும் ஏன் செய்யக் கூடாது?

கணவன்: நான் எப்படிச் செய்ய முடியும்? எனக்கு அவர் மனைவியைத் தெரியாதே.

முதல் ஆண்: என் மனைவியால் எந்தக் குறிப்பிட்ட தலைப்பிலும் மணிக் கணக்காகப் பேச முடியும்.

தோழன்: என் மனைவிக்குத் தலைப்புகூடத் தேவையில்லை.

ஆண் 1: எனக்கு வன்முறை, போர் இவை பற்றி பயம் இல்லை.

ஆண் 2: உண்மையாகவா! நீ பெரிய தைரியசாலியாக இருக்க வேண்டும்.

ஆண் 1: தைரியம் இல்லை. எனக்குக் கல்யாணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

பெண்கள் தொடர்பான இந்த ஜோக்குகளை நாம் கிண்டலாக மட்டுமே பார்க்கிறோம். அந்த ஜோக் ஒரு பெண்ணாக என்னைப் புண்படுத்தியது என்று சொன்னால், இதில் புண்பட என்ன இருக்கிறது, உனக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்று சொல்லும் பெண்களே இங்கு அதிகம்.

ஜோக் சொல்லும் பொருள் என்ன? பெண்கள் ஓயாமல் பேசுகிறவர்கள், ஆண்களை அடிப்பவர்கள், ஆண்கள் பாலியல் இச்சையுடனே திரிபவர்கள். பெண்கள், கணவனிடம் வன்முறையாக நடந்துகொள்கிறார்கள் என்று நாலாவது ஜோக் சொல்கிறது.

நடைமுறையில் யார் யார் மீது சொற்களாலும் உடல் ரீதியாகவும் வன் முறையைச் செலுத்துகிறார்கள்?

இதேபோல் பெண்களின் அழகைப் பற்றி எப்போதும் கவனமாக இருக்கிறவர்கள் என்றும் ஆண்கள் அதைக் கிண்டலடிப் பவர்களாக இருக்கிறார்கள் என்றும் கீழ்க்கண்ட இரண்டு ஜோக்குகளும் சொல் கின்றன.

மனைவி: எங்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது என்ன?

அழகான முகமா?

அன்பான மனமா?

பணிவான குணமா?

கணவன்: உன்னோட இந்த காமெடி தான்.

மனைவி: பின்னாடி ஃபிகர் இருந்தா கண்ணு தெரியாதான்னு லாரிக்காரன் திட்டிட்டுப் போறான். நீங்க சிரிக்கிறீங்க?

கணவன்: உன்னைப் போய்  ஃபிகர்னு சொல்றான், அவனுக்குத்தான் கண்ணு தெரியல. அத நெனச்சித்தான் சிரிக்கிறேன்.

ஆனால், உண்மையில் பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே, ஆண்களுடைய பார்வை தன் மேல் பட வேண்டும் என்பதற்காகத்தான். ஜோக்குகள், பெண்களை மட்டுமே மட்டம் தட்டுவதில்லை. ஆண்களையும் இழிவுபடுத்துகின்றன.

மட்டம் தட்டும் நகைச்சுவை

ஆண், பெண் இருவரின் ஆளுமைப் பண்புகளைச் சொல்வதைவிட அழகு பற்றியும் பாலியல் இச்சை பற்றியுமே திரும்பத் திரும்ப இது போன்ற ஜோக்குகள் பேசுகின்றன.

ஆணாகவோ பெண்ணாகவோ இந்த ஜோக்குகளில் உள்ள நுண்ணுணர்வற்ற தன்மை உரைக்காத அளவுக்கு நாம் சுரணையற்றவர்களாகி விட்டோம். ஆனால், நாம் சுரணையற்றவர்கள் ஆனதையும் உணராமல், ஏற்றுக்கொள்ளாமல் நுட்பமாக இருப்பவர்களைப் பார்த்து நகைச்சுவை உணர்வு அற்றவர்கள் என்கிறோம். ஏன் இத்தகைய ஜோக்குகள் நம்மைக் கூசச் செய்வதில்லை, அருவருப்பைத் தருவதில்லை?

எதிர்ப்பைப் பதிவுசெய்வோம்

இதுதான் இந்த ஜோக்குகளின் வெற்றி, நம் மூளையை மழுங்கடித்து, கேள்வி கேட்காமல், சரியென்று ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்கிவிட்டது.

நிஜ வாழ்க்கையில் பக்கத்து வீட்டுக் காரரின் மனைவிக்கு முத்தம் கொடுக்க நினைக்கும் கணவனைத் திட்டி அவமானப் படுத்தமாட்டோமா? அதற்குப் பலமில்லை என்றால், வருத்தப்படவாவது செய்ய மாட்டோமா?

பைக் பின்னால் உள்ள பெண்ணை ஃபிகர் என்று சொல்பவனைப் பார்த்து கோபம் வராமல், உன்னைப் போய் ஃபிகர் என்று சொல்கிறானே என்பது பெண்ணை மட்டும் மட்டம் தட்டுவதில்லை. ஆணையும் இழிவுபடுத்துகிறது.

நம்முடைய இந்தச் சுரணையற்ற தன்மையைத்தான் நாம் குழந்தைகளுக்கும் கடத்துகிறோம். பையன்களும் பெண்களும் ஆண், பெண் பற்றி இத்தகைய மதிப்பீடு களோடு வளர்வார்கள். ஆனால், நடைமுறையில் இருவரும் சமமாகப் படித்தவர்களாக, சமமாக வேலை செய்கிறவர் களாக இருப்பார்கள். இப்படி நடைமுறை மதிப்பீடுகளும் சிந்தனை மதிப்பீடுகளும் வெவ்வேறாக இருப்பது வாழ்க்கையில் சிக்கல்களைக் கொண்டுவரும்.

என்ன செய்யலாம்?

சுரணையுள்ளவர்கள் ஓயாமல் தங்கள் எதிர்ப்பை மெலிதாகவோ தீவிரமாகவோ பதிவுசெய்யத்தான் வேண்டும். நம்மைவிட அதிகாரத்தில் இருப்பவர்கள்/ இருப்பதாகக் கருதிக்கொண்டு சொல்பவர்களிடம் மையமான ஒரு முகத்தை வைத்துக்கொண்டு, இந்த ஜோக்கின் மூலம் நீங்கள் சொல்லவரும் கருத்தென்ன என்று கேட்கலாம். சும்மா ஜோக்குக்காகத்தான் என்றாவது, அவர்கள் வழியவேண்டிவரும்.

அந்த நேரத்தில் இத்தகைய ஜோக்குகள் தேவையற்றவை, உங்களுக்கு இவற்றைக் கேட்பதில் விருப்பமில்லை என ஆணித்தரமாகச் சொல்ல வேண்டும். கணவர்/நெருங்கிய உறவினர்/அலுவலகத்தில் மேலதிகாரி என யாராக இருந்தாலும் சரி. அழகைப் பற்றிய ஜோக் என்றால், ஏன் நீங்கள் ஆண்களைப் பற்றி இப்படி கமெண்ட் அடிப்பதில்லை எனக் கேட்கலாம்.

தொடர்ந்து கீழ்த்தரமான ஜோக்குகளைப் பகிர்பவர் பற்றி அலுவலகத்தில் புகார் சொல்லலாம். அலுவலகம் அல்லாத இடங்களில் ஜோக் அடிப்பவருக்கு ஷார்ப் ஆகப் பதில் சொல்லலாம்.

ஏன் டல்லா இருக்கே, அந்த மூன்று நாட்களா என்றால், ஆம் நான் டல்லாக இருப்பதற்குக் காரணம் அதுதான். ஆனால், நீ டல்லாக இருப்பதற்குக் காரணம் என்ன என்று கேட்கலாம்.

இங்கே என்ன செய்கிறாய், சமையலறைக்குப் போ என்றால், ஓகே… நான் முதலில் போய்ச் சாப்பிடப்போறேன். நான் சாப்பிட்ட மீதிதான் உங்களுக்கு எனலாம்.

சுரணையற்ற ஜோக் பரிமாறப்படும்போது, நீங்கள் உண்மையில் பாலினச் சமத்துவத்தை மதிப்பவராக இருந்தால்,  உங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்யுங்கள்.  சுரணையுள்ளவர்கள் வாய் திறந்தால்தான், சுரணையற்றவர்களுக்குத் தங்கள் செயல் புரியவரும்.  புரியாவிட்டால் புரிய வைப்போம்.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x