Published : 12 Aug 2018 10:09 AM
Last Updated : 12 Aug 2018 10:09 AM

கற்பிதமல்ல பெருமிதம் 18: தாய்ப்பால் குழந்தைகளின் பிறப்புரிமை

எட்டே முக்கால் மணியாகிவிட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் குளித்து, உடை மாற்றி, மதிய உணவை டப்பாவில் கட்டி, குழந்தைக்குத் தேவையான பொருட்களைச் சரிபார்த்துக் கூடையில் வைத்துத் தயாராக வேண்டும்.

குழந்தைக்குப் பால் கொடுத்தபடி இருந்த சுசீலாவின் மனத்தில் அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகள் பட்டியலாக நீண்டன. ஐந்து நிமிடங்களுக்கு மேல் சுசீலாவால் அமைதியாகப் பால் கொடுக்க முடியவில்லை. அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளே தலைக்குள் ஓடின. குழந்தையின் வாயிலிருந்து மார்பை எடுத்தால், குழந்தை அழுதது.

ஏன் குழந்தையை அழ விடறே?

இல்லை, பால் கொடுத்துட்டு, மத்த வேலைகளைக் கவனிக்கப் போகணும்.

இன்னும் சீக்கிரம் எழுந்திருக்கிறதுதானே.

சுசீலா பதில் பேசவில்லை. காலை ஐந்து மணிக்கு எழுந்ததில் இருந்து அவள் ஒரு நிமிடம் சும்மா உட்காரவில்லை. இரவிலும் ஒரு தடவை குழந்தை அழும்போது பால் கொடுக்க வேண்டியிருக்கிறது. தூக்கம் கலைந்துபோய்த் திரும்ப தூக்கம் வரவே நேரமாகிவிடுகிறது.

பதற்றம் நிறைந்த காலை

குழந்தைக்குக் கட்டாயமாகக் குறைந்தபட்சம் நான்கு மாதங்களாவது முழுமையாகத் தாய்ப்பால் தர வேண்டும் என்று நினைத்தாள். மூன்று மாதம்தான் லீவு கிடைத்தது. கடந்த 15 நாட்களாக வேலைக்குப் போக ஆரம்பித்ததில் இருந்து தினமும் டென்ஷன்தான்.

மாமியாரும் கணவரும் தாய்ப்பால் அல்லாமல்  வேறு பால் தருவதைத் தீர்வாக்கினார்கள். சுசீலாவுக்கு அதில் உடன்பாடில்லை. இரண்டு பாட்டில்களில் தாய்ப்பாலைப் பீய்ச்சி வைத்துவிட்டுப் போய்விடுவாள். மாமியார் அதைக் கொடுத்துவிடுவார். ஆறு மாதங்களாவது முழுமையாகத் தாய்ப்பால் தர வேண்டும் என டாக்டர் சொல்லியிருக்கிறார்.

இந்தக் காலை வேளையில் வேலை பரபரப்பில் தாய்ப்பால் தருவது சிக்கலாகிவிடுகிறது. டென்ஷனோடு இருந்தால் பால் சரியாக  வராது. பால் கொடுக்கும்போது அதை மட்டுமே கவனத்தில் கொண்டு கொடுக்க வேண்டும். மார்பகத்துக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பிருப்பதால், பதற்றமானால் வழக்கமான அளவில் பால் சுரக்காது என டாக்டர் சொல்லியிருந்தாலும் காலை வேளையில் அவளால் அதைச் சரிவரச் செய்ய முடிவதில்லை.

மதியம் சாப்பிடும்போது சுசீலாவுக்குக் குழந்தையின் நினைவாகவே இருந்தது. பால் குடித்திருக்குமா தூங்கியிருக்குமா என நினைத்தாள். மார்பகங்களில் சுரந்த பால் ஆடையை நனைத்தது. பாத்ரூம் சென்று, சரிசெய்துகொண்டு வந்தாள். அழுகையாக வந்தது.

தனியார் கம்பெனியில் மூன்று மாத லீவே அதிகம். இதைவிட என்ன சலுகையை எதிர்பார்க்க முடியும்? அவள் வேலையை விட்டுப்போனால், அந்த இடத்துக்கு வர பலர் தயாராக இருக்கிறார்கள்.

தவிக்கும் தாய்மார்கள்

சுசீலா மட்டுமல்ல; வெளிவேலை பார்க்கும் எண்ணற்ற தாய்மார்களின் பிரச்சினை தாய்ப்பால் கொடுப்பதுதான். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் (NFHS–4) தெரிய வந்துள்ள புள்ளிவிவரம், இந்தியாவில் தாய்ப்பாலூட்டும் நிலைமை பற்றிச் சொல்கிறது.

மருத்துவமனைகளில் நிகழும் பிரசவத்தின் சதவீதம் 79 ஆக உயர்ந்திருந்தாலும் குழந்தை பிறந்தவுடன் ஒரு மணி நேரத்துக்குள்ளாகத் தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகளின் சதவீதம் 42 மட்டுமே.

இதேபோல் யுனிசெஃப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்துள்ள Global Breast feeding Collective வெளியிட்டுள்ள அறிக்கையும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் ஆறு மாதங்கள் முழுமையாகத் தாய்ப்பால் மட்டும் கிடைக்கப்பெறும் குழந்தைகளின் சதவீதம் 55. இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளில் ஆண்டுதோறும் 2,36,000 குழந்தைகள் தாய்ப்பால் பற்றாக்குறையால் இறந்துபோகிறார்கள்.

இந்தியாவில் நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் ஆண்டுதோறும் இறக்கும் 99,499 குழந்தைகளின் மரணத்தைத் துரிதமாகத் தாய்ப்பால் தருவது, ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே தருவது போன்றவற்றின் மூலம் தடுத்துவிட முடியும்.

ஏன் இந்த நிலை?

தாய்ப்பால் தரும்படியான உடலமைப்பு பெண்களிடம்தான் இருக்கிறது என்றாலும், குழந்தைகளுக்குத் தங்கு தடையின்றி தாய்ப்பால் கிடைக்கக் குடும்பம், சமூகம், வேலைத்தளம், அரசின் சட்ட திட்டங்கள் எனப் பல தரப்பும் இணைந்து செயல்பட வேண்டியிருக்கிறது.

ஒருங்கிணைக்கப்பட்ட துறைகளில் மூன்று மாதமாவது மகப்பேறு விடுமுறை கிடைக்கிறது. இதுகூட அனைத்துத் துறைகளிலும் கிடைப்பதில்லை. சில நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆள் எடுத்து ஏமாற்றுகிறார்கள். சில நிறுவனங்களில், ‘லீவு எடுத்துக்கொள்; ஆனால், அந்த மாதங்களுக்குச் சம்பளம் கிடையாது’ என்கிறார்கள்.

ஒருங்கிணைக்கப்படாத துறைகளில் நிலைமை இன்னமும் மோசம். வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள், அன்றாடக் கூலி ஆட்கள் யாரிடம் போய் மகப்பேறு விடுமுறையையும் நிதி ஆதாரத்தையும் கேட்பார்கள்?

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் வருவதற்கு முன்பாக, ஒரு கருத்தரங்கு நடந்தது. அதில் பேறுகால விடுப்பு இரண்டு மாதமா, மூன்று மாதமா என்றெல்லாம் விவாதம் நடந்தது. அப்போது ஒரு விவசாயக் கூலிப் பெண், “ரெண்டு மாசம், மூணு மாசம் லீவுனெல்லாம் பேசறீங்க. எங்களுக்கு மட்டும் தபால்லயா குழந்தை வருது? எங்களுக்கு நீங்க சொல்ற லீவு யாரு தருவாங்க?” எனக் கேட்டார்.

கருவுற்ற பெண்களுக்கு இன்று ரூ. 18,000 வரை வழங்கப்படுகிறது. தாய்ப் பாலூட்டும் பழக்கத்தில் இந்தியா பின்னடைந்து இருப்பதற்கான காரணங்கள் என்ன?

# பாரம்பரிய பழக்க வழக்கம்: குழந்தை பிறந்ததுமே தாய்க்கு முதன்முதலில் சுரக்கும் கொலஸ்ட்ராம் என்று சொல்லக்கூடிய சீம்பாலைப் புகட்டக் கூடாது என்று நிலவும் தவறான எண்ணம்.

# பெண்களின் அதிகப்படியான வேலைப்பளு.

தாய்மார்களுக்குக் கிடைக்கும் ஆதரவு

குடும்பத்திலிருந்து: அமைதியான மனநிலையில் குழந்தைக்குப் பால் கொடுக்கும்படியான சூழலை உருவாக்கித் தருவது. பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைப்பதை உறுதிசெய்வது.

வேலை தளம்: விடுப்பு எடுத்தால் வேலை போகுமே என்ற பரிதவிப்பில் பெண்களைத் தள்ளாமல், சம்பளத்துடன் கூடிய விடுப்பு தரலாம். வேலைக்குத் திரும்பும் தாய்மார்கள் குழந்தைகளையும் உடன் அழைத்துவந்து இடையிடையே தாய்ப்பால் கொடுக்க உதவும் குழந்தைக் காப்பகங்களைப் பெரிய நிறுவனங்களில் அமைத்தல். சிறு நிறுவனங்கள் ஒன்றுகூடி காப்பகங்கள் அமைத்தல்.

மருத்துவத் துறை: தாய்ப்பால் போத வில்லையா, டப்பா உணவைக் கொடு எனப் பல மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் தாய்ப் பால் தர முடியாதவர்கள், பால் சரிவர சுரக்காதவர்களுக்கு மட்டுமே

இந்த வழிமுறையை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். டப்பா உணவு தயாரிப்பவர்களின் கைக்கூலியாகச் செயல்படக் கூடாது.

சரிவரத் தாய்ப்பால் கொடுப்பது எப்படி, பால் நன்றாகச் சுரக்க என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் தாய்மார்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் கணவர், அம்மா, மாமியார் ஆகியோருக்கும் சொல்ல வேண்டும்.

அரசு: ஒருங்கிணைக்கப்பட்ட துறைகளில் மகப்பேறு விடுப்பு சட்டங்களை அமல் படுத்தவில்லை என்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் சரிவர அமல் படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்

தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை. அது குழந்தைக்குத் தங்கு தடையின்றி கிடைக்க, பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவுவது நம் அனைவரின் கடமை.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x