Published : 04 Aug 2018 06:31 PM
Last Updated : 04 Aug 2018 06:31 PM

கற்பிதமல்ல பெருமிதம் 17: ஆணுக்கு இல்லாத அடையாளம்

சுகுணா, அரசு குறைதீர்க்கும் நாளில் மனுவோடு வந்தார். விதவை பென்ஷனுக்கு அவர் விண்ணப்பித்திருந்தார். மனுவை தாசில்தார் ஏற்க மறுத்துவிட்டதைச் சுட்டிக்காட்டி மனு கொடுத்திருந்தார்.

மனுவை ஏற்க மறுத்ததற்கு தாசில்தார் ஏதாவது காரணம் சொன்னாரா என்று சமூக நலத்துறை மேலதிகாரி அந்தப் பெண்ணிடம் விசாரித்தார்.

“என் கணவரின் இறப்புச் சான்றிதழை இணைத்துள்ளேன். நான் இறந்தவரின் சட்டபூர்வமான மனைவி என்பதற்கான சான்றிதழையும் இணைத்துள்ளேன். மறுமணம் செய்யப் போவதில்லை என்ற உறுதிமொழிப் பத்திரத்தையும் இணைத்துள்ளேன். பிரச்சினை போட்டோவால்” என்றார் அந்தப் பெண்.

பூவும் பொட்டும்

சமூக நலத்துறை அதிகாரி போட்டோவை வாங்கிப் பார்த்தார். போட்டோவில் இருந்த முகத்தையும் அந்தப் பெண்ணின் முகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தார்.

“ஏம்மா, இரண்டும் ஒரே முகமாகத்தானே இருக்கு. அப்புறம் ஏன் தாசில்தார் மறுத்தார்?”

 “விதவை பென்ஷனுக்கு விண்ணப்பிக்கிற போட்டோவில் பொட்டு  இருக்கக் கூடாதாம்; தலையில் பூ இருக்கக் கூடாதாம். பொட்டு இல்லாமல், பூ இல்லாமல் இருப்பது மாதிரி போட்டோ வேண்டுமாம். ஏன் மேடம், நான்தான் தேவைப்படுற எல்லாச் சான்றிதழ்களையும் சரியா கொடுத்திருக்கேனே. பூவும் பொட்டும் இருக்கற போட்டோவைக் கொடுத்தால் என்ன தப்பு? நான் கல்யாணத்துக்கு முன்னாடியும் பூ, பொட்டு வைச்சேன்; கல்யாணத்துக்கு அப்புறமும் வைச்சேன். இப்பவும் வைக்கிறேன். நான் எப்பவும் இருக்கற மாதிரி உள்ள  போட்டோவைத்தானே தர முடியும்? பென்ஷன் வேணும்கிறதுக்காக, நான் புது வேஷம் போட முடியுமா?”

சமூக நலத்துறை அதிகாரி, கலெக்டரிடம் பேசினார்.  துறைச் செயலர்வரை விஷயம் சென்றது. ஒரு விஷயத்தை அமல்படுத்துவதில் உள்ள இந்த மனோபாவத்தை அரசு அலுவலர்கள் கைவிட வேண்டும் என்ற அரசின் சுற்றறிக்கை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டது. இது நடந்து 10, 12 வருடங்கள் இருக்கும்.

திருமணம் நடந்ததற்கான சான்றுகளையும் ஒளிப்படங்களையும் ஏஜெண்டிடம் கொடுத்தாள் கமலா. “என்னம்மா, இப்படி ஒரு போட்டோ கொடுக்கறீங்க. போட்டோல நெத்தியில பொட்டு இல்லை. சுரிதார் போட்டிருக்கீங்க. தாலியைக் காணோம். புடவை கட்டி, பொட்டு வைச்சு, தாலி வெளியிலே தெரியற மாதிரி போட்டோ எடுத்துட்டு வாங்க. இல்லைன்னா திருமணப் பதிவுச் சான்றிதழ்  கிடைக்காது.” கமலா மறுநாள் அலுவலகத்துக்கு லீவு போட்டுவிட்டு பூ வைத்து, பொட்டு வைத்து, சேலை கட்டி, தாலியை வெளியே தெரியும்படியாக ஒளிப்படமெடுத்து விண்ணப்பப் படிவத்தோடு இணைத்தாள்.

இரண்டாவது சம்பவம் நடந்தது ஆறு மாதங்களுக்கு முன்பாக. ஆணை மையப்படுத்திய அடையாளம் ஆணைத் தொடர்புபடுத்தித்தான் பெண் அறியப்பட வேண்டும் என்பது எல்லா இடங்களிலும் தொடர்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் பாஸ்போர்ட் எடுப்பதற்குச் சென்றபோது, திருமணச் சான்றிதழ் கேட்டார்கள். எங்கள் வீட்டு ஆண்கள் அப்படி எதையும் சமர்ப்பிக்காத போது, பெண்கள் மட்டும் ஏன் அவர்களின் திருமணச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்? இப்போது பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் மாறுதல் வந்ததாகச் சொல்கிறார்கள், தெரியவில்லை.

இதே போலத்தான் பெயர் எழுதும்பொழுது ஆணுக்கு எப்பொழுதும் Mr. தான். திருமணம் ஆனவர், ஆகாதவர் எல்லோருக்கும் Mr. என்ற ஒன்றுதான். பெண் என்றால் பெயர் எழுதுபவர்கள், தாலி இருக்கிறதா என்று பார்ப்பார்கள். இல்லை என்றால் Miss, Mrs. இரண்டில் எதுவென நம்மிடமே கேட்பார்கள். Ms. என்று போடலாம் என்பதைச் சொல்லிப் புரியவைக்க வேண்டியுள்ளது. இதே போல் தமிழிலும் ஆண்களுக்கு ‘திரு’ என்று போட்டுவிடுகிறார்கள். பெண்களுக்கு  ‘செல்வி’ போடுவதா, ‘திருமதி’ போடுவதா என்று குழப்பம்.

ஆணுக்கு இல்லாத அடையாளம்

வாரிசுதாரர் சான்றிதழில் கணவனை இழந்த பெண்ணை விதவை என்கிறார்கள். மனைவியை இழந்த கணவன் நிலையைக் குறிப்பிடுகையில், மனைவியை இழந்தவர் என்று குறிப்பிடுகிறார்கள்.

திருமணம் ஆன பெண்களுக்கான சின்னமான தாலி, மெட்டி, தலை வகிட்டுச் செந்தூரம் இவை எல்லாம் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று எண்ணும் சமூகம், ஆணுக்கு ஏன் இந்த வரையறைகளை விதிப்பதில்லை. பழங்காலத்தில் ஆண்களுக்கு மெட்டி இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்போது நடைமுறையில் இல்லையே.

திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்குமான ஒப்பந்தம். ஆனால், இந்த ஒப்பந்த விதிகள் எல்லாம் ஏன் பெண்களுக்கு மட்டுமே அடையாளங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கின்றன?

தடுமாறும் தனிமனித அறச்சீற்றம்

பொட்டு வைத்தால் பிடிக்கும் என்ற பெண், கணவனை இழந்தால் பொட்டு வைக்கக் கூடாது என்று நினைக்கிறது சமூகம். பொட்டு வைக்கப் பிடிக்காத பெண்ணை, திருமணம் ஆனால் பொட்டு வைத்தே தீரவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. பூ வைப்பதும் பொட்டு வைப்பதும் தனி மனித விருப்பம். ஆனால், கணவன் இறந்தவுடன் இவற்றை இழக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? சட்டத்தில் சமம் என்கிறோமே தவிர, நடைமுறையில் அடையாளங்களைச் சுமக்க வேண்டியுள்ளது.

சட்டத்தில் இல்லாததை அரசு அதிகாரிகள் வலியுறுத்துவது எதனால்? காலம் காலமாக நமக்குள் ஊறிப்போயிருக்கும் மதிப்பீடுகள்தாம் இதற்குக் காரணம். அரசு அலுவலர்களும் இந்தச் சமூகத்தின் ஒரு அங்கம்தானே.

மாற்றம் எப்படி வரும்? அரசுக் காகிதங்களால் மட்டும் இதைச் சரிசெய்துவிட முடியாது. அனைவரது மனோபாவத்திலும் மாறுதல் வர வேண்டும். அண்மைக் காலமாகப் பொதுப் பிரச்சினைகளில் மக்கள் பங்கேற்பும் அறச் சீற்றமும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன. ஆனால், நாலு பேரோடு சேர்ந்து போராடத் தயாராக இருப்பவர்கள்கூட, தனி மனித விஷயங்களில் இந்த அறச்சீற்றத்தைக் கடைப்பிடிக்கத் தயங்குவது ஏன்? சட்டங்களில் மாற்றம் வருவதும் அமலாக்கத்தில் மாற்றம் வருவதும் நம் முயற்சியில்தான் இருக்கிறது. அதிலும் பெண்கள் தொடர்பான விஷயங்களில் மாற்றம் வரப் பெரிதும் போராட வேண்டியிருக்கும்.

அரசு அலுவலகங்களில் இதே ஆணாதிக்க மனோபாவத்தைப் பிரதிபலிக்கும் சட்டங்களோடு, அன்றாட நடைமுறைகளோடு சீற்றம்கொள்வோம். இனிஷியலில் பெண் பெயர் போடுவது மாதிரி, இதுவும் நம் சமூக அந்தஸ்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கான போராட்டமே. ஏஜெண்டு தொடங்கி அரசு ஊழியர், அதிகாரிகள்வரை உள்ள ஆண், பெண் அனைவரின் மனோபாவத்துக்கு எதிராகச் சண்டைபிடிப்போம்.

இப்படியெல்லாம் செய்யவில்லை என்றால், என்ன மாற்றம் முன்மொழியப்பட்டாலும் எதுவும் மாறாது. சட்டமும் மனிதர்களும்  பெண்களை இரண்டாம் இடத்தில் வைத்திருக்கும் நிலைப்பாடே தொடரும். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அதை அவர்கள் நம்புகிறார்கள்; நம்புவதை அமல்படுத்துகிறார்கள். ஆனால், மாற்றத்தை விரும்பும் நாம் என்ன செய்கிறோம்? அதிகாரம் அவர்கள் வசம் இருப்பதால், காரியம் முடிந்தால் சரி என்று நாம் நம்பும் கொள்கைகளைக் காற்றில் பறக்க  விடுகிறோம்.  மாறாக மாற்றத்தை நோக்கி முதல் அடியை எடுத்துவைப்போம்.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x