Published : 29 Jul 2018 09:45 AM
Last Updated : 29 Jul 2018 09:45 AM

கற்பிதமல்ல பெருமிதம் 16: பொதுவெளி பெண்ணுக்கும்தான்

மலைப்பகுதி கிராமத்தைவிட்டுப் படிப்பதற்காக நகரத்துக்கு வந்தபோது ராணிக்கு எல்லாமே புதிதாக இருந்தது. அவ்வளவு பெரிய டி.வி.யை அவள் பார்த்ததில்லை. விதவிதமான பிம்பங்கள். ஒவ்வொரு சானலிலும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பெண்கள் பலவிதமாக வந்தார்கள். அவர்களின் நடை, உடை, பேச்சு எல்லாமே ராணிக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஆனால், எல்லாம் கொஞ்ச நாட்களில் அலுத்துவிட்டது. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது பெரிய கொடுமை. அவள் ஊரில் இருந்தபோது, எப்போதும் வெளியேதான் திரிவாள். அதுவும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட பிறகு கேட்கவே வேண்டாம்.

அம்மாவுக்கு அவள் அதிகமாக வெளியே சுற்றுவதாகப்பட்டாலும், வெளிவேலைகளை ராணி முடித்து விடுவதால், இருட்டிய பிறகு மட்டும் வெளியே போகத் தடைவிதிப்பாள்.

நகரத்தில் எப்போதும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியுள்ளது. ஸ்கூல், ஸ்கூல் விட்டால் வீடு. அதுவும் ஸ்கூலில் இருந்து கொஞ்சம் லேட் ஆனாலும் அத்தை பதறிவிடுவார்.

அம்மா வந்தார்

அரை மணி நேரமாக அம்மாவை வீட்டில் காணோம். அவர் திரும்பி வந்தவுடன் ஆளாளுக்குக் கேள்வி கேட்டார்கள்.

எங்கேம்மா போனே? மளிகைக் கடைக்கா?

இல்லை என்றாள் அம்மா.

டெய்லர் கடை?

இல்லை.

கோயில்?

இல்லை.

யார் எதைச் சொன்னாலும் அம்மா இல்லை இல்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தார்.

அப்பாவுக்குக் கோபம்.

பின்னே எங்கேதான் போய்த் தொலைஞ்சே?

சும்மா வெளியே நடந்துட்டு வந்தேன்.

சும்மா எதுக்குப் போனே?

ஏன், சும்மா போயிட்டு வரக் கூடாதா? வெளியில கொஞ்சம் காலாற நடந்துட்டு வரணும்னு தோணுச்சு.

நாங்க எல்லாம் உன்னை அரை மணி நேரமா தேடிட்டு இருந்தோம்.

ஏன் போன் பண்ணி இருக்கலாமே?

நீ சொல்லிட்டுப் போயிருக்கலாமே?

சொன்னால் எங்கே போறே எதுக்குப் போறேன்னு கேள்வி வரும்.

முணுமுணுத்தபடி அப்பா போனார். பையனும் பெண்ணும் அம்மாவை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். நாள் முழுவதும் வீட்டிலேயே இருப்பது போர்தான். அம்மா பாவம் என்று பெண் நினைத்தாள்.

எந்த வயதுப் பெண்ணாக இருந்தாலும், அவள் உலகம் நான்கு சுவருக்குள் முடக்கப்படுகிறது. வெளிவேலை பார்க்கும் பெண்கள், வீடு, அலுவலகம், வீடு என்ற வட்டத்துக்குள்ளேயே சுழல வேண்டியிருக்கிறது.

ஏன் வெளியே செல்வதில்லை?

நம் அம்மாக்கள் காலத்தைவிட இன்று நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. ஆனாலும், ஆண்கள் சுதந்திரமாக, நினைத்த நேரத்தில் நடமாடுவதைப் போல், பெண்கள் வெளியே நடமாட முடிவதில்லை.

காலம் கெட்டுக் கிடக்கு என்று காரணம் சொல்லப்படுகிறது. இதை வேறு கோணத்தில் யோசித்துப் பார்ப்போம்.

பெரும்பாலும் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் அதிகமான பெண்களை சாலையில் எதிர்கொள்கிற வாய்ப்பு ஆண்களுக்கு குறைவு. அதுவும் வீட்டில் இருந்து அவர்கள் ஆண்களுக்குச் சேவை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். அப்படி இல்லாமல் சாலையில் நடமாடும் பெண்களை, ஆண் மனது தனக்குக் கிடைப்பவளாக, அதாவது சீண்டலுக்குரியவள் என்று நினைக்கிறது.

சுதந்திரமான உடை அணியும் பெண்ணை எப்படி எதற்கும் தயாராக இருப்பவளாக ஆண் மனது கற்பித்துப் பார்க்கிறதோ அதேபோல் சுதந்திரமானவளாக நடமாடும் பெண்களையும் நினைத்துப் பார்க்கிறது. அது அவனுடைய வளர்ப்பின் பிரச்சினை. அவன் சுதந்திரமாக நடமாடலாம். பெண் என்றால் வீட்டுக்குள் பொத்தி வளர்க்கப்பட வேண்டும் என்று நாம் பூட்டி விடுவதால் அவனுக்குப் பெண்களை வெளியிடங்களில் கண்ணியத்துடன் எதிர்கொள்ளும் பழக்கம் வரவில்லை.

ஆண்களிடம் இல்லாத கண்ணியம்

பேசுவதற்கு, பழகுவதற்கு, சீண்டிப் பார்ப்பதற்கு என இப்படித் தன்னிச்சையாக இயங்கும் பெண்கள் அவனை வசீகரிக்கிறார்கள். அவனே திருமணம் என்று வரும்போது கொஞ்சம் பாந்தமாக, அடக்க ஒடுக்கமாக பெண் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். பெரும்பான்மை மனோபாவம் பற்றித்தான் இங்கே விவாதம்.

ஒருவேளை குழந்தை முதல் பாட்டிவரை அனைத்து வயதுப் பெண்களும் ரோட்டில், பார்க்கில், பீச்சில், கோயில்களில் நடமாடினால் அவர்களை எதிர்கொள்வது அவனுக்குப் பழக்கமாகி, கண்ணியத்துடன் நடத்துவானோ என்னவோ.

சரி, பெண்களுக்கு இது என்ன தருகிறது? பெரும் விடுதலை உணர்வு. அடைபட்டுக் கிடப்பதிலிருந்து சுதந்திரமான சுவாசம். ஒருவேளை இப்படி வீதிகளில் சுற்றித் திரிய முடிந்தால், அது மனிதர்களின் கலாச்சாரமானால், பெண்கள் மோசமான டி.வி. சீரியல்களிலிருந்து விடுதலை பெறுவார்களோ என்னவோ?

யோசித்துப் பாருங்கள், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பெண்களுக்கு வேறு என்ன சாய்ஸ் இருக்கிறது?

சில பெண்களைத் தவிர பலருக்கும் வெளியே சென்று வங்கி வேலைகளைப் பார்ப்பது,  கரண்ட் பில் கட்டுவது, இறப்புச் சான்றிதழ், வாரிசுதாரர் சான்றிதழ் வாங்குவது போன்ற எதையும் செய்து பழக்கமில்லை. காரணம் குடும்பங்கள் இதற்கெல்லாம் பெண்களைப் பழக்குவதில்லை.

பெண்களைப் பழக்குவோம்

எனக்குத் தெரிந்த பெண், கணவர் இறந்த பிறகு அரசாங்க அலுவலகங்களுக்குப் போய் நின்று நின்று நொந்துவிட்டார். பெண்களுக்குச் சிறு வயதிலிருந்தே தைரியத்தைக் கற்றுத்தர வேண்டியுள்ளது. தைரியத்தை எப்படிக் கற்றுத் தருவது? எல்லாவற்றையும் எதிர்கொள்ள அவர்களை பழக்க வேண்டும். எத்தகைய சூழலிலும் பயப்படாமல், பதற்றப்படாமல் எதிர் நின்று சமாளிப்பது  பயிற்சியில்தான் வர முடியும். அனுபவம்தான் சிறந்த பாடம். அனுபவம் சவால் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால், மோசமாக இல்லாமல் இருப்பதை உறுதிசெய்தால் போதும். அதற்காகப் பெண்களை இரவு 12 மணிக்குத் தனியே வெளியே அனுப்பச் சொல்லவில்லை. அது அசட்டுத் தைரியம். ஆனால், ஓரளவுக்கு மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களுக்குப் போகப் பழக்கலாம்.

தற்காப்புக்கான சில சாதனங்களை அவர்கள் வைத்துக்கொள்ளலாம். தற்காப்புக் கலையைக் கற்றுத் தரலாம்.

இருவருக்கும் பொது

பெண் பிள்ளைகளைத் தைரியமானவர் களாக வளர்ப்பதுபோல், பையன்களைப் பொறுப்பானவர்களாக நடந்துகொள்ளப் பழக்க வேண்டும். வீடுகளில் உள்ள பெண்களை மரியாதையாக நடத்த ஆரம்பித்தால்தான் இது சாத்தியம். உனக்கு ஒண்ணும் தெரியாது, வாயை மூடு, வீட்டிலேயே அடங்கி இரு, ஊர் சுத்தாதே என்றெல்லாம் பெண்களுக்கு விதிக்கப்படும் விதிமுறைகள்தாம் வரையறை கள் எனப் புரிந்துகொள்ளும் ஆண்களாலும் பையன்களாலும் பொதுவெளிகளில் உலவும் பெண்களை ஆரோக்கியமாக, சக மனுஷியாக அணுக முடிவதில்லை.

காற்று, நிலம், நீர், நெருப்பு, வெளி என்ற பஞ்ச சக்திகளும் அனைவருக்கும் பொது. ஆனால், இவற்றை நுகர்வதிலும் அனுபவிப் பதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பேதம் ஏன்? குடும்பங்களாக, வீதிகளில் உலவுங்கள். பெண்களே உலகம் பரந்து விரிந்தது. டி.வி.யில் உங்கள் வாழ்க்கையைத் தொலைக்காதீர்கள். சுதந்திரக் காற்றைச் சுவாசி யுங்கள். பல்வேறு இடங்களை, மனிதர்களை எதிர்கொள்ளுங்கள். மனம் விசாலமடையும். வாழ்வின் பரிமாணங்கள் பிடிபடும்.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x