Published : 22 Jul 2018 10:39 AM
Last Updated : 22 Jul 2018 10:39 AM

கற்பிதமல்ல பெருமிதம் 15: பகிர்ந்துகொள்ளப் பழக்குவோம்

பெற்றோரிடமோ ஆசிரியரிடமோதானே குழந்தைகளால் பேச முடியும். ஆனால், ஒரு12 வயது சிறுமிக்குத் தன் வாழ்வில் நிகழ்ந்த துயரத்தையும் வேதனையையும் பிரச்சினையையும் இவர்களிடம் ஏன் பகிர முடியாமல் போயிற்று?

வெவ்வேறு விதமான செய்திகள். எது உண்மை என்று பிறகுதான் தெரியும். ஆனால், இப்போது புரிவதெல்லாம் ஒன்றுதான். குழந்தைகள் அதிக நேரம் புழங்கக்கூடிய இடங்கள் இரண்டுதாம்.  வீடு, பள்ளி. இந்த இரண்டு இடங்களிலும் இருக்கக்கூடிய பெரியவர்களால், தொடர்ந்து அந்தக் குழந்தையுடன் உரையாடி, உறவாடிக் கொண்டிருப்பவர்களால், குழந்தையின் உடலில், மனத்தில், உணர்வில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாறுதல்களை அடையாளம்காண முடியவில்லையா? அல்லது அடையாளம்காணத் தெரியவில்லையா? இல்லை, அவர்கள் அதை உணரவில்லையா?

யாருக்குத் தேவை பொறுப்பு?

முதல்நாள் குற்றவாளிகளைக் குறைசொன்ன சமூகம், அடுத்துப் பெற்றோரிடம் வரும். அதிலும் குறிப்பாக, அம்மாவுக்குப் பொறுப்பில்லை என்று சாடும்.

நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்துக் குழந்தைகளுக்குச் சொல்லித்தந்தால் மட்டும் போதாது. தீய தொடுதலை எதிர்கொள்ள நேர்ந்தால் யாரிடம் போய்ச் சொல்வார்கள்; சொன்னால் ஆறுதல் கிடைக்குமா? இல்லை, “உனக்கு யாரிடம் எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை” என்று திட்டு கிடைக்குமா?

குழந்தையிடம் மோசமாக நடந்துகொண்டவர்கள் மிரட்டியதால்தான் குழந்தை பெற்றோரிடம் சொல்லவில்லை என்கிறார்கள். குழந்தையின் அக்கா, குழந்தையின் உடம்பிலிருந்த காயங்களைப் பார்த்துவிட்டுக் கேட்டபிறகு, குழந்தை தனக்கு நடந்த கொடுமையைச் சொன்னதாகச் செய்தி வந்திருக்கிறது. அக்காவிடம் பகிரலாம் என்று வந்த நம்பிக்கை ஏன் பெற்றோரிடம், ஆசிரியர்களிடம் பகிரலாம் என்று வரவில்லை?

12 வயது சிறுமிக்கு நிகழ்ந்த பிரச்சினையின் தகவல்களை விவரிப்பதோ விவாதிப்பதோ நமது நோக்கமல்ல. இதற்குப் பின்னால் இருக்கும் சூழல் என்ன? ஏன் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் தொடர் உரையாடல் இருப்பதில்லை?

அன்பால் அரவணைப்போம்

காலையில் எழுந்ததிலிருந்து தூங்கப்போகும்வரை, பல் தேய், குளி, ஸ்கூலுக்குக் கிளம்பு, மாலை வீடு திரும்பியவுடன் மீண்டும் படி, டியூஷன் போ, டி.வி. பார்க்காதே என இப்படியான கட்டளைகளைத்தான் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இடுகின்றனர். ஆனால், இதே விஷயங்களைச் செல்லமாகக் கொஞ்சி, கண்களுக்கு நேராகப் பார்த்து, சில நேரம் அருகில் நின்று அணைத்து, ஆறுதல்படுத்திச் சொல்லலாம். பள்ளியில், வெளியில் என்ன நடந்தது என்று ஆதரவாகக் கேட்கலாம்.

இப்படியெல்லாம் செய்திருந்தால் குழந்தை உண்மையை உடைத்துச் சொல்லியிருக்காதா? என்னதான் யாராவது மிரட்டி இருந்தாலும் ஏழு மாதங்களாகக் குழந்தையால் தனக்கு நேர்ந்த துயரத்தை, கொடுமையைச் சொல்லாமல் எப்படி இருந்திருக்க முடியும்? அப்படிக் கண்ணோடு நேருக்கு நேர் நின்று பேசுவதைக் குழந்தை தவிர்த்திருந்தாலே ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று ஊகித்திருக்க முடியாதா? இந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல; எல்லாக் குடும்பங்களிலும் இதுதானே நிகழ வேண்டும்?

விளையாடி, சைக்கிள் ஓட்டி முட்டியைப் பெயர்த்துக்கொண்டாயா, கை, கால் நகங்களை வெட்டினாயா, தலையைச் சரியாகச் சீவினாயா, தலைக்கு எண்ணெய் வைத்தாயா, தலையைச் சரிவரத் துவட்டினாயா? – இப்படிக் குழந்தைகளோடு பேசவும் அருகில் இருக்கவும் பல தருணங்களும் சந்தரப்பங்களும் உள்ளனவே? இது எதுவும் நிகழாவிட்டாலே கோளாறு இருக்க சாத்தியம் உண்டு.

சரியான பெற்றோராக இருக்கிறோமா?

நம் வீடுகளில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் என்ன வகையான பரிமாற்றம் நடக்கிறது? நாம் வீடு வாங்குவதுபோல், குழந்தையும் நம் அந்தஸ்தின் அடையாளமாக ஆகிவிட்டது. திருமணமாகி கொஞ்ச நாட்கள் ஆனவுடனேயே என்ன விசேஷமான செய்தி எதுவும் இல்லையா என்கிறோம். திருமணம் நடந்துவிட்டால் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒரு சமூக வற்புறுத்தல்.

ஒரு குழந்தையைப் பெற்று, நல்லபடியாக வளர்ப்பதற்குப் பெற்றோர் தயாரா? அவர்களுக்குள் திருமணம், குடும்பம், அது பற்றிய பணிப் பகிர்வுகள், பரிமாற்றங்கள் என்னென்ன என்பன போன்ற புரிதல்கள் வருவதற்குள்ளாகவே குழந்தைப்பேறு, குழந்தையை வளர்ப்பதற்கான பொறுப்புகள் வந்துவிடுகின்றன.

சரியான பெற்றோராக இருக்கிறோமா என்பது புரியாமலேயே குழந்தைகளை வளர்க்கிறார்கள். தவமாய்த் தவமிருந்து பெற்றாலும் இப்படித்தான். குடும்பங்கள் இப்படி இருக்க, பள்ளிகளும் மதிப்பெண்களைப் பெறவைக்கிற நிறுவனங்கள் மட்டுமே என ஆகிவிட்டன.

நான் படித்த காலத்தில் MI (Moral Instructions) வகுப்பு உண்டு. டீச்சர்கள் அதிகாரத்தைக் காட்ட, கட்டளைகளை விதிப்பதற்கான வகுப்பாக மட்டும் இல்லாமல் சில கேள்விகளைக் கேட்பார்கள். சில மதிப்பீடுகளைப் பகிர்வார்கள். இப்போது அந்த வகுப்புகள் வேண்டும் என்று சொன்னால், அதை நம்மால் மதரீதியாக மட்டும்தான் பார்க்க முடியும். இன்றைய சூழல் அப்படி ஆகிவிட்டது.

நம்பிக்கையை வளர்ப்போம்

எங்கள் ஆசிரியர்கள், தலைக்குக் குளிப்பதிலிருந்து நகம் வெட்டுவது, சுத்தமாக இருப்பது, உதவுவது எனப் பல விஷயங்களை விவாதித்திருக்கிறார்கள். இன்றைக்கு ஆசிரியர்களுக்கு அப்படியான நேரம் அளிக்கப்படுகிறதா? பள்ளி நிர்வாகத்துக்கு வேறுவிதமான எதிர்பார்ப்புகள்தாம் இருக்கின்றன.

குழந்தைகள் நல்ல மார்க் எடுக்க வேண்டும், வகுப்புகள் ‘டிசிப்ளினாக’ இருக்க வேண்டும். இந்த டிசிப்ளின் என்ற சொல் படும்பாடு இருக்கிறதே! பேசாதே, வாய் மேல் விரலை வை, கைகளைக் கட்டு என எல்.கே.ஜி.யில் தொடங்கும் டிசிப்ளின் எல்லா வகுப்புகளிலும் தொடர்கிறது.

குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் பேச மதிய உணவு இடைவேளை மட்டும்தான். அவர்கள் யாருடன் எதைப் பகிர்வார்கள்?

இந்தச் சம்பவத்தில் நாம் கற்க வேண்டிய மிகப் பெரிய பாடத்தில் ஒன்று பரிமாற்றம்.பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான பரிமாற்றம், வகுப்பு ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்குமான பரிமாற்றம், குழந்தைகளுக்குள்ளான பரிமாற்றம்.

எனக்கு வேறு யாரையும்விட, பெற்றோரும் ஆசிரியரும்தானே இருக்கிறார்கள் என்று குழந்தையின் மனத்தில் அவர்களைப் பற்றிய ஒரு கான்ஃபிடன்ஸ்-நெருக்கம் வர வேண்டும். நான் எதை வேண்டுமானாலும் அவர்களிடம் மனம் விட்டுப் பேசலாம், எனக்கு அவர்கள் ஆறுதலைத் தருவார்கள் என்ற நம்பிக்கை வர வேண்டும். பல பிரச்சினைகளுக்குத் தீர்வு அதுதான். எனக்குத் தெரிந்த 13 வயதுப் பையன் பாலியல்ரீதியான சீண்டலை எதிர்கொண்டபோது, அதை முதலில் அவனுடைய அம்மாவிடம்தான் சொன்னான். அந்தத் தாய் அவனுக்கு அந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்.

சமூகத்தில் நடக்கும் தீங்குகளை நம்மால் முழுமையாக ஒழுங்குபடுத்த முடியாது. அதற்கு நம் குழந்தைகளைத் தயார் செய்யத்தான் நம்மால் முடியும். இது நல்ல பரிமாற்றத்தால் மட்டுமே சாத்தியம்.

நீங்க என்ன சொல்றீங்க?

வாசகிகளே, குழந்தைகளை வளர்ப்பதில் நாம் எந்த இடத்தில் கோட்டைவிடுகிறோம்? குழந்தைகள் நம்மிடம் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள தடையாக இருப்பது எது? என்ன செய்து வன்முறைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது? உங்கள் கருத்து என்ன? எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x