Last Updated : 15 Jul, 2018 10:04 AM

 

Published : 15 Jul 2018 10:04 AM
Last Updated : 15 Jul 2018 10:04 AM

வண்ணங்கள் ஏழு 13: பாலின அடையாளம் எங்கள் மூச்சு!

“ஒரே சாதிக்குள்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். ஒரே மதத்துக்குள்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் பழமைவாதிகள். அப்படியிருக்க, நான் ஒரே பாலினத்துக்குள் திருமணம் செய்துகொண்டால் என்ன தவறு? நீங்கள் சாதியையும் மதத்தையும் பிடித்துக் கொண்டு தொங்குகிறீர்கள். நான் என் பாலினத்தைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறேன் அவ்ளோதான்” என்கிறார் திரவ நிலைப் பாலினத்தவராகத் தன்னை அறிவித்துக் கொள்ளும் மாலினி ஜீவரத்தினம்.

இவர், ‘லேடீஸ் அண்ட் ஜென்டில் வுமன்’ ஆவணப் படத்தின் மூலம் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றிருப்பவர். எல்.ஜி.பி.டி.க்யூ. கலை நிகழ்ச்சிகளில், ‘ரேஷன் ஐடி வோட்டர் கார்டு பான் கார்டு… கையில் அத்தனை இருந்தும் நாங்க தனி நாடு…’ என்று பாடித் தெறிக்கவிடுபவர்.

‘மனித இனத்தின் முக்கிய நோக்கமான சந்ததிகளை உருவாக்குவது, இது போன்ற உறவுகளால் சிதைந்துபோகாதா? பெண்கள் எல்லாம் இப்படியொரு முடிவெடுத்தால் ஆண்களின் நிலை என்னாகும்?’ - பொதுச் சமூகம் மாற்றுப் பாலினத்தவரின் உறவுகளுக்கு எதிராக எழுப்பும் இது போன்ற கேள்விகளுக்கு மாலினியிடம் பதில் இருக்கிறது.

“நாடு முழுவதும் இருக்கும் ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் குழந்தைகளைப் பாருங்கள். உங்களால் போற்றப்படும் எதிர் பாலின ஈர்ப்பில் உருவான குழந்தைகள்தாம் அவர்கள். அவர்களைக் காப்பாற்றத் தவறியது யார்? எதிர் பாலின ஈர்ப்பை நாங்கள் யாரும் கேள்விக்கு உட்படுத்தவில்லை. எங்களின் பால் ஈர்ப்பை முடிவுசெய்யும் சுதந்திரம் எங்களுக்கு உண்டு. குழந்தை பெற்றுக்கொடுக்கப் பெண் வேண்டும்.

ஆனால், பெண் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையைக் கொன்றுவிடுவீர்கள். கருவிலேயே தெரிந்துவிட்டால் கருச்சிதைவு செய்துவிடும் ஆணாதிக்கத்தை இந்தச் சமூகம் என்ன செய்தது? இந்தக் கேள்விகள்தான் நீங்கள் கேட் வற்றுக்குப் பதில்கள்” என்றவர், மாற்றுப் பாலினத்தவர் குறித்த செய்திகளைக் குடும்ப அமைப்பும் ஊடகங்களும் அணுகும் விதம் குறித்துத் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

மனிதனை நேசிப்பது ஒரு கலை

“பெண்ணாகப் பிறந்து பெண்ணை நேசிப்பவர்களின் நிலையும் பெண்ணாகப் பிறந்து திருநம்பியாக வெளிப்படுபவர்களின் நிலையும் சமூகத்தில் திருப்திகரமாக இல்லை. எனக்கு ஆணின் மீது ஈர்ப்பில்லை, பெண்ணின் மீதுதான் ஆசை வருகிறது என்னும் விருப்பத்தை ஒரு பெண் தன் குடும்பத்தினரைத் தவிர, வேறு யாரிடம் கூற முடியும்? அப்படித் தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் குழந்தைகளைக் கேவலமாகப் பேசி, நீ வீட்டை விட்டுப் போ, எங்காவது செத்துப் போ… என்று கைகழுவுவதுதான் பெற்றோரின் கடமையா? மனிதனை நேசிப்பது ஒரு கலை. அதை இந்தச் சமூகத்துக்குச் சொல்லித்தர வேண்டும்.

மாற்றுப் பாலின அடையாளத்துடன் வெளிப்படும் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு எப்படிச் சமமாக நடத்த வேண்டும் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்” என்று சொல்பவர், இந்தச் சமூகம் மாற்றுப் பாலினத்தவர் மீது வெளிப்படுத்தும் வன்முறை குறித்தும் சொன்னார்.

யார் குற்றவாளி?

“திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறும் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக வல்லுறவுக்கு உட்படுத்துவது பெரும்பாலான கிராமங்களில் நடக்கும் கொடுமை. நகர்ப்புறங்களில் தன்பாலின ஈர்ப்பு உள்ளவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை என்னும் பெயரில் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் அவலமும் நடக்கிறது. இப்படி ஒருவரைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஒரு சமூகம் உட்படுத்துகிறது என்றால், சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஆணாதிக்கம்தான் மிகப் பெரிய நோய்.

தற்கொலை செய்துகொள்பவர்கள் குற்றவாளியா, தற்கொலைக்கு ஒருவரைத் தூண்டுபவர்கள் குற்றவாளியா? ஒரு மனிதனைப் போல் இன்னொருவரும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அபத்தம் மட்டுமல்ல, அராஜகமும்கூட. எங்கள் பாலின அடையாளமும் பால் ஈர்ப்பும் சுவாசத்தைப் போல் இயல்பானவை” என்கிறார் மாலினி ஜீவரத்தினம்.

ஊடகத்தில் வெளிப்படும் ஆணாதிக்கம்

அண்மையில் தற்கொலை செய்துகொண்ட திருநம்பி அக்ஷய் தேவின் மரணச் செய்தி ஊடகங்களில் வெளியான விதத்தை மாலினி சுட்டிக்காட்டுகிறார்.

“பெண்ணாக இருந்துகொண்டு ஆணாக நடித்தவர் அவர் என்று ஊடகம் ஒன்று கூறியது. ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் போதுதான் அவனை வதைக்கிறீர்கள். தன்னுடைய பாலின அடையாளத்தோடு இறந்தவரின் உடலின் மீதும் உங்களின் ஆணாதிக்க அரசியலை வெளிப்படுத்த வேண்டுமா? இத்தனைக்கும் இறந்த திருநம்பியின் அறுவைசிகிச்சைக்கு அவருடைய மனைவிதான் கையெழுத்திட்டிருக்கிறார். செய்திகளை முந்தித் தருவதையும் கவர்ச்சியான வாசகங்களோடு செய்திகளை அளிப்பதையும்விட உண்மையான செய்தியை அளிப்பதுதான் ஊடக தர்மமாக இருக்க முடியும்” என்கிறார்.

எதிர் பாலின ஈர்ப்பு கொண்ட சில பெண்களுக்கும் தன்பாலின ஈர்ப்பில் விருப்பம் கொண்ட பெண்களின் உலகம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும். இதை `பைக்யூரியஸ்’ என்பார்கள். ஆனால், அவர்களின் தேவை முடிந்தவுடன் அவர்களின் அணுகுமுறை வேறுமாதிரியாக இருக்கும். லெஸ்பியன்தானே என்ற அலட்சியம் எதிர் பாலின ஈர்ப்புள்ள ஆண்களிடம் மட்டுமல்ல; பெண்களிடமும் வெளிப்படுவது உண்டு. “இதுவும் பெண்களிடமிருக்கும் ஆணாதிக்கம்தான். எங்களுக்கும் காதல் உணர்வு உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் மாலினி.

ஆண்கள்தான் வெட்கப்பட வேண்டும்

“நான் என் இணையாளின் (மனைவி அல்ல) கையைப் பிடித்தபடி கம்பீரமாக நடந்து செல்ல வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், அப்படிப் போகும்போது, திரையரங்கில் எங்கள் மீது டார்ச் அடிப்பார்கள். அவர்களிடம் இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்றுதான் என்னால் அதிகபட்சமாகக் கூற முடியும். ஆனால், எத்தனை பேரிடம் இப்படிப் போய்ச் சொல்ல முடியும்? இப்படியொரு நிலைமை நாட்டில் இருப்பதற்கு ஆண்கள்தாம் வெட்கப்பட வேண்டும்.

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? தன்பால் ஈர்ப்புள்ள ஒரு பெண், சமூகப் பாதுகாப்பு வேண்டி ஓர் ஆணைத் திருமணம் செய்துகொள்ள நினைத்தால், அதைவிடப் பைத்தியகாரத்தனம் வேறு எதுவும் இல்லை” என்று சொல்லும் மாலினியின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது வலியை மீறிய கோபம்.

கடந்த வாரம் சென்னை கவிக்கோ அரங்கில் நடத்தப்பட்ட குயர் இலக்கிய விழாவில் முக்கியமான அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. பால்புதுமையினர் குறித்த ஊடகச் சித்தரிப்புகள் எப்படியெல்லாம் இருக்கின்றன என்பதை ஊடகவியலாளர்கள் துருபோ ஜோதி, பனிமலர் பன்னீர்செல்வம், ராகமாலிகா, மண்குதிரை ஆகியோர் பேசினர். பால்புதுமையினரின் திருமணம், கொண்டாட்டம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தருவதைவிட, அவர்களின் பிரச்சினைகள் பதிவாக வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.

“மாற்றுப் பாலினத்தவர் பற்றிய ஒரு செய்தியை ஒருவர் படிப்பதற்கும் அவரின் நடத்தைக்கும் இடைவெளி இருக்கிறது. அந்த இடைவெளியை நிரப்புவதற்கான பணியை ஊடகங்களும் பால்புதுமைச் செயற்பாட்டாளர்களும் மேற்கொள்ள வேண்டும்” என்றார் மண்குதிரை. தொடர்ந்து பதிப்புத் துறையில் பால்புதுமையினர் இலக்கியம் குறித்து திருநங்கை ப்ரியா பாபு, பதிப்பாளர்கள் அமுதா, ப்ரேமா ரேவதி ஆகியோர் பேசினர்.

இந்தியாவில் பால்புதுமையினரைப் பேசும் இலக்கியங்கள் குறித்து நாடிகா, எழுத்தாளர் தமயந்தி ஆகியோர் பேசினர். கன்னடத்தில் பால்புதுமையினர் இலக்கியம் குறித்து வசுதேந்திரா பேசினார். தேர்ந்தெடுக்கப்பட்ட பால்புதுமையினர் படைப்புகளிலிருந்து சில பகுதிகளைப் படிக்கும் நிகழ்வும் நடந்தது.

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x