Published : 15 Jul 2018 10:05 AM
Last Updated : 15 Jul 2018 10:05 AM

கற்பிதமல்ல பெருமிதம் 14: மகள் = மகன்

 

சு

சீலாவுக்குக் கடைக்கு வந்த பிறகு சந்தேகம் வந்துவிட்டது. பிறந்தநாள் பரிசு வாங்க வேண்டியது ஆண் குழந்தைக்கா, பெண் குழந்தைக்கா?

அவளுடைய கணவரின் அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவரின் குழந்தைக்கு முதலாவது பிறந்தநாள்.

பொம்மை வாங்குவதா, ஆடை வாங்குவதா? என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படிப் பரிசு வாங்குவது?

கணவரிடம் போனில் கேட்டாள். அவருக்கும் தெரியவில்லை. இரண்டு நிமிடங்களில் கேட்டுச் சொல்வதாகச் சொன்னார்.

பையனாம். ஆயிரம் ரூபாய்க்குள் பரிசு வாங்கச் சொன்னான்.

அழகான பெரிய கார் பொம்மையையும் ஒரு டிராயர் - சட்டையையும் வாங்கலாம் என முடிவெடுத்தாள்.

ஆணுக்கு கார், பெண்ணுக்குப் பொம்மை?

ஆண் குழந்தை என்றால் கார் வாங்கலாம் என்று சுசீலா ஏன் நினைத்தார்? பெண் குழந்தை என்றால் மென் பொம்மைகள், சொப்புச் சாமான்கள் போன்றவற்றை வாங்கியிருக்கக்கூடும். ஆண் குழந்தை என்றால் கார் பொம்மை வைத்து விளையாடவும் பெண் குழந்தை என்றால் சொப்புச் சாமான்கள் விளையாடவும்தான் விரும்புவார்கள் என்று நாம் நினைக்கிறோம்.

குழந்தைக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுப்பது யார்? நாம்தான். நமக்குள் காலம் காலமாகச் சுமந்து திரியும் பிம்பங்களை ஆண் - பெண் பண்பு வரையறைகளை அவர்கள் மேல் திணிப்பவர்கள் வேறு யாருமல்ல நாம்தான்.

நான் பையன், நான் பொண்ணு; எனக்கு இதுதான் விளையாடப் பிடிக்கும் என்று அந்தக் குழந்தை நம்மிடம் வந்து சொன்னதா? ஏன் நாம் இப்படியொரு வரையறுக்கப்பட்ட stereotyped என்று சொல்லக்கூடிய வார்ப்புக் கலாச்சாரத்தில் இயங்குகிறோம்?

பிறந்த குழந்தையின் பாலின உறுப்புகளின் அடிப்படையில் ஆண் என்றும் பெண் என்றும் பிரித்துச் சொல்கிறோம். மற்றபடி கை, கால், வாய் எல்லாம் ஒன்றுதானே. உடற்கூறு அடிப்படையில் நம் பாலினம் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், ஆண் - பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகளைத் தீர்மானிப்பது எது? நமது ‘கலாச்சாரம்’. அவரவர் வாழும் சமூகம் இதைத் தீர்மானிக்கிறது. இதைத்தான் சமூகப் பாலினம் (Gender) என்கிறோம்.

விளையாட்டுப் பரிசோதனை

இப்படியான வார்ப்புகள் பற்றிய கருத்தாக்கங்கள் பற்றி உலக அளவில் சில சுவாரசியமான ஆய்வுகள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் பி.பி.சி. நிறுவனம் ஒரு சின்ன பரிசோதனை செய்துபார்த்தது. ஆண் குழந்தைக்குப் பெண் உடையையும் பெண் குழந்தைக்கு ஆண் உடையையும் அணிவித்து, கொஞ்சம் பொம்மைகளைப் போட்டு விளையாட விட்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் பராமரிப்பாளர்கள், பெண் குழந்தையின் ஆடை அணிந்த ஆண் குழந்தைக்கு மென் பொம்மையைக் கொடுத்து விளையாட ஊக்குவித்திருக்கிறார்கள். ஆண் உடை அணிந்த பெண் குழந்தையை கார் பொம்மை மேல் ஏற்றிச் சுற்றவிட்டிருக்கிறார்கள்.

குழந்தைப் பராமரிப்பாளர்களிடம் பெண் குழந்தையாக இருந்தது ஆண் என்றும் ஆண் குழந்தையாக இருந்தது பெண் என்றும் சொல்லப்பட்டது. “ஏன் இப்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு விதமான பொம்மைகளைக் கொடுத்தீர்கள்?” என்று கேட்டதற்கு ஒரு பெண் இப்படிச் சொல்கிறார்: “நான் எதையும் வெளிப்படையாக எந்தவித முன் தீர்மானமும் இல்லாமல் அணுகுபவள். ஆனால், எனக்குள்ளேயே இப்படியான வரையறைகள் ஆழப் பதிந்துள்ளதை இப்போது உணர்கிறேன்”.

நாம் பொதுவாகப் பெண் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கப் பார்க்கிறோம். ஒரு பெண் தடதடவென ஓடிவந்தால், “ஆம்பள மாதிரி ஓடாதே, அடக்க ஒடுக்கமா இரு” என்கிறோம். பெண் குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுகளை விளையாடவே ஊக்குவிக்கிறோம். ஆண் குழந்தைகள் வேகமாக ஓடியாடும் விளையாட்டுகளை விளையாடச் சொல்கிறோம். பெண்களும் இந்த விளையாட்டுகளை விளையாடினாலும்கூட பையன்கள் தெருவுக்குத் தெரு கிரிக்கெட் ஆடுவதுபோல் பெண்கள் விளையாடுவதில்லை.

 

விளையாட்டு வினையாகாது

இப்படி விளையாடாமல் இருப்பதால் என்ன பெரிய இழப்பு வந்து விடப்போகிறது எனத் தோன்றலாம். இழப்புதான். மூளை வளர்ச்சியின் தூண்டுதல்கள் பாதிக்கப்படுகின்றனவாம். மூளை வளர்ச்சி, அனுபவங்களின் தூண்டுதல்களால் ஏற்படுவது. தூண்டுதல் இல்லாவிட்டால் வளர்ச்சி தடைபடும்.

பெரியவர்களுக்கும் இதே தர்க்கம் பொருந்தும். ஆடி, ஓடி, நடந்து, உடல்ரீதியாகச் சுறுசுறுப்பாக இருக்கும்போது மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்து, உடற்பயிற்சி செய்பவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மை.

பையன்கள் கார், சைக்கிள், துப்பாக்கி என அவர்களைத் துரிதமாக இயங்கவைக்கும் பொம்மைகளோடு விளையாடுகிறார்கள். சிறுவயதில் மட்டுமல்ல, குழந்தைகள் வளர வளரவும் இதே அணுகுமுறைதான் தொடர்கிறது. பாண்டி, கும்மி, கோலாட்டம். கோ-கோ அல்லது உள்ளரங்க விளையாட்டுகளான கேரம், தாயம் போன்றவற்றை விளையாட ஆண்களை ஊக்குவிப்பதே இல்லை. பையன்கள் மரம் ஏறுகிறார்கள், ஓடுகிறார்கள், கால்பந்து, கிரிக்கெட் என உடலை நன்கு பயன்படுத்தும்படியான விளையாட்டுகளை விளையாடுகிறார்கள்.

சொல்லப்போனால் நகர்ப்புறங்களில் இருபால் குழந்தைகளுமே விளையாட்டைத் தொலைத்துவருகிறார்கள். பெற்றவர்களும் தங்கள் பார்வை வட்டத்துக்குள் குழந்தைகள் வளர்வதைத்தான் விரும்புகிறார்கள். விளையாட்டில் குழந்தைகள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் குடும்பங்கள் நம்மிடையே குறைவு.

சமத்துவம் என்பது வாய்ப்பேச்சல்ல

பொம்மை விளையாட்டு, வெறும் பொம்மை விளையாட்டல்ல. இதிலும் பாலின பேதம் வெளிப்படுகிறது. இப்படியான பேதமான உருவாக்கம், பெண்களின் ஒட்டுமொத்த ஆகிருதியை வளர விடாமல் தடுக்கிறது. அவர்கள் நளினமானவர்களாக, ஒடுங்கி இருப்பவர்களாக, பயந்தவர்களாக இருப்பதற்குக் காரணம் நம் வளர்ப்புதான். பெண் குழந்தைகளை ஓடியாட விடுங்கள். எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளப் பழக்குங்கள். இது பெண்களுக்கான விளையாட்டு, பெண்களுக்கான வேலை என ஒடுக்காதீர்கள். தைரியத்துடன் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் துணிவைக் கற்றுக்கொடுங்கள். அதை விளையாட்டுப் பொம்மையிலிருந்து தொடங்குவோம்.

பையன், கார் பொம்மையை உடைத்தால் பின்னாளில் இன்ஜினீயராக வருவான் என்றும், பெண் உடைத்தால் ஒரு பொருளை ஒழுங்காக வைத்துக்கொள்ளத் தெரியாது, பொறுப்பில்லை எனவும் திட்டாதீர்கள். பொறுப்புணர்வு நல்ல குணம் என்றால் ஆண்களுக்கும் அது வேண்டாமா? வாய்ப்பைப் பெண்ணுக்கு மறுத்து, ஆண்களின் ஆகிருதியையும் குலைக்காதீர்கள்.

சமத்துவம், வாய்ப்பேச்சு அல்ல. நடைமுறையில் வாய்ப்புகளைத் தருவது. தந்தால் அவர்கள் நிச்சயம் வளர்வார்கள்.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x