Published : 24 Jun 2018 12:19 PM
Last Updated : 24 Jun 2018 12:19 PM

கற்பிதமல்ல பெருமிதம் 11: சும்மா இருக்கிறார்களா இல்லத்தரசிகள்?

நா

ள் முழுவதும் தம் உழைப்பைப் போட்டு வீடுகளைப் பராமரிக்கும் குடும்பத்தினருக்கான வேலைகளைச் செய்யும் பெண்களை நாம் என்ன சொல்கிறோம்? யோசியுங்கள். யோசனைக்கு இடையே இந்தத் தொலைபேசி உரையாடலுக்கும் செவி கொடுங்கள்.

“வணக்கம். யார் பேசறது?”

“நான் மதுரையிலிருந்து மகேஷ் பேசறேன்”

“சொல்லுங்க, இன்னைக்குத் தந்தையர் தினம். உங்களுக்கு எத்தனை குழந்தைங்க, என்ன பண்றாங்க?”

“ரெண்டு பேர். பொண்ணு எல்.கே.ஜி. பையன் நாலாவது.”

“உங்க மனைவி என்ன பண்றாங்க?”

“வீட்ல சும்மாதான் இருக்காங்க.”

வீட்லதானே இருக்கே, கரண்ட் பில் கட்டிடு.

வீட்லதானே இருக்கே, பேங்குக்குப் போயிட்டு வா.

வீட்லதானே இருக்கே, ரேஷனுக்கு, கடைக்கு, குழந்தைங்க ஸ்கூலுக்கு இப்படி எதுக்கும் என்னை ஏன் எதிர்பார்க்கிறே? நீயே பார்த்துக்கோ.

வீட்லதானே இருக்கே, நம்ம குடும்பம் சார்பா உறவுக்காரங்க வீட்டு விசேஷத்துக்குப் போயிட்டு வந்துடு.

இவை மட்டுமல்ல; கூட்டுக் குடும்பமாக இருந்தால் மாமனார், மாமியார், பிற உடன்பிறப்புகளின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

‘சும்மா’ செய்யும் வேலைகள்?

நாம் ஏன் வெளி வேலைக்குப் போய் சம்பாதிக்காத பெண்களை, ‘சும்மா இருப்பவர்’களாகக் கருதுகிறோம்? அவர்கள் வீட்டில் பார்க்கக்கூடிய வேலைகளை மதிப்பிடுவோமா?

1. சமையல் வேலை - நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு மூன்று வேளையும் சமைத்து, விசேஷ நாட்களில் விசேஷ சமையல் செய்து, லீவு நாட்களில் தடல்புடலாகச் சமைத்து என வேலை செய்யும் ஒருவருக்கு எவ்வளவு சம்பளம் தர வேண்டியிருக்கும்? குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய்.

2. சிறு குழந்தைகளைப் பராமரிக்க, பள்ளி செல்லும் குழந்தைகளைக் கவனிக்க - குறைந்தபட்சம் 4 ஆயிரம் ரூபாய்.

3. துணிகளைத் துவைக்க (வாஷிங் மிஷினாக இருந்தாலும் அது ஒரு பொறுப்புதானே), துணிகளை மடித்து அவரவருக்குரிய இடத்தில் வைக்க, அயர்ன் செய்ய (அல்லது வெளியே கொடுத்து வாங்கி வைக்க), மாதமிரு முறையாவது பெட்ஷீட், தலையணை உறைகளை மாற்ற, துவைக்க, மடிக்க - குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாய்.

4. வெளியே கடைகளுக்குப் போய் வர, கரண்ட் பில் கட்ட, ரேஷன் கடை, குழந்தைகளின் பள்ளிக்குப் போய் வர - குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்.

5. மாமனார், மாமியாருக்கு வேண்டியவற்றைச் செய்ய, மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு போக – குறைந்தது 3 ஆயிரம் ரூபாய்.

6. வீட்டைக் கூட்டி, துடைத்து, ஒட்டடை அடித்து சுத்தமாக வைத்திருத்தல் (அப்படியே அந்த வேலைக்கு ஆள் இருந்தாலும் அவர்களை மேற்பார்வை பார்த்தல்) - குறைந்தது 1,500 ரூபாய்.

7. வீட்டில் உள்ளவர்கள் ஆங்காங்கே போடும் பொருட்களை அந்தந்த இடத்தில் வைத்து, தேவைப்படுபவற்றை வாங்கி வைத்தல் - குறைந்தது ஆயிரம் ரூபாய்.

மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால் ரூ.18,500.

அன்பின் அடிப்படையில் செய்யக்கூடிய வேலைக்குக் கணக்கு பார்க்கலாமா என்று கேட்கலாம். அப்படியென்றால் ஏன் என் மனைவி/மருமகள் வீட்டில் சும்மாதானே இருக்கிறாள் என்ற வார்த்தை வருகிறது?

பெரியவர்களிடமிருந்து குழந்தைகளும் அதையே கற்றுக்கொள்கிறார்கள்

“ஓ.. உங்க அம்மா வேலைக்குப் போறாங்களா?”

“இல்லையே, எங்க அம்மா வீட்ல சும்மாதான் இருக்காங்க.”

வீட்டு வேலை, வேலையில்லையா?

வீடு என்ற அமைப்பைக் கட்டமைக்கவும் பராமரிக்கவும் நிறைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால், இந்த உழைப்பு வீடுகளிலும் வெளியேயும் அங்கீகரிக்கப்படுகிறதா?

பெண்கள் செய்யும் பல்வேறுவிதமான வேலைகளுக்குக் குடும்ப அளவிலும் அங்கீகாரம் இல்லை; சமூக அளவிலும் இல்லை.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இவர்கள் வேலை பார்க்காதவர்கள் (Non Workers) என்று அறியப்படுகிறார்கள். மக்கள்தொகைக் கணக்குப்படி ஒரு நபர் செய்யும் வேலையில் எந்த வேலைக்கு ஊதியம், வருமானம், பணவரவு, சம்பளம், கூலி, வெகுமானம் போன்றவற்றில் ஏதாவதொன்று கிடைக்கிறதோ, அதுவே வேலையாகக் கருதப்படும்.

புறக்கணிக்கப்படும் பெண்ணுழைப்பு

வீட்டு வேலை, வேலையாகக் கருதப்படாததால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பெண்களின் இந்த உழைப்பு கணக்கில் கொள்ளப்படவில்லை.

GDP என்பது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த செயல்திறனைத் தீர்மானிக்க உதவுகிறது. பிற நாடுகளுடனும் ஒப்பீடு செய்யப்படுகிறது. இந்தியா தரவரிசையில் உலக அளவில் 7-வது இடத்தில் இருந்தாலும் மொத்த மக்கள்தொகையின் அடிப்படையில் தனிநபர் கணக்கீடாகப் பார்த்தால் இந்தியா 139-வது இடத்தில் இருக்கிறது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது நிலம் இருக்கும் விவசாயியிடம் குடும்ப விவரம் கேட்டிருக்கிறார்கள். மனைவி என்ன செய்கிறார் என்ற கேள்விக்கு, வீட்டில் சும்மாதான் இருக்கிறார் என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார்.

சில கேள்விகளுக்குப் பிறகு அவர்கள், நிலத்தில் உழைப்பது யார் எனக் கேட்டிருக்கிறார்கள். என் மனைவி என்றிருக்கிறார். உங்கள் மனைவி வேலை பார்க்கவில்லையே என்று கேட்டதற்கு, “என் மனைவி என் நிலத்தில் வேலை செய்வதை எப்படி வேலையாகப் பார்க்க முடியும்?” என்று கேட்டிருக்கிறார். இதுதான் இடிக்கிறது. வருத்தத்தைத் தருகிறது.

பெண் உழைப்பைக் கணக்கிலெடுப்போம்

கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத உழைப்பு கண்ணுக்குத் தெரியாமலேயே போகிறது.

வீட்டுப் பெண்கள் இந்த வேலையைச் செய்யாமல், வேறு ஆட்களை வைத்துச் செய்தால் காசு தர வேண்டும் அல்லவா?

அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு குடும்பமும் கிட்டத்தட்ட ரூ10,000 முதல் 20,000 வரை வீட்டு வேலைக்காகச் செலவிட வேண்டியிருக்கும்.

வெளி வேலை பார்த்துச் சம்பாதிக்கும் ஆண், குடும்பத்துக்காக உழைத்து ஓடாகப் போவதாகச் சமூகம் சொல்கிறது. ஆனால், வீட்டைப் பராமரிக்கும் பெண்ணின் உழைப்பை கடமை, பாசம், அன்பு என்று சொல்லி வசதியாக மறைத்துவிடுகிறோம். வெளி வேலை பார்க்கும் ஆண்களுக்கு வாரந்திர, வருடாந்திர விடுமுறைகள் உண்டு. பெண்களின் வீட்டு வேலைக்கு விடுமுறையே கிடையாது. அதுவும் வீட்டில் உள்ளவர்களுக்கு விடுமுறை வந்துவிட்டால் பெண்கள்பாடுதான் திண்டாட்டம். வித விதமாகச் சமைக்க வேண்டும்.

ஆண், பெண் இருவரின் கூட்டுப் பிணைப்பில் உருவா வதுதான் இல்லறம். ஒருவரின் உழைப்பை உயர்த்திப்பிடித்தும் மற்றவரின் உழைப்பை அங்கீகரிக்காமலும் இருப்பது என்ன நியாயம்?

பெண்கள் ‘House wife’ இல்லை. ‘Home Maker’. வார்த்தைகளை வெறுமனே மாற்றிச் சொல்வதால் வேலையில் மாற்றம் வராமல் போகலாம். ஆனால், அவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கக்கூடும். மொழி என்பது மனத்தின் எண்ணம். கண்ணுக்குத் தெரியாத பெண்களின் உழைப்பையும் கணக்கிலெடுப்போம்!

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.

தொடர்புக்கு: maa1961@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x