Published : 17 Jun 2018 11:14 AM
Last Updated : 17 Jun 2018 11:14 AM

கற்பிதமல்ல பெருமிதம் 10: இனிஷியலில்கூடப் பெண்ணுக்கு இடமில்லையா?

நந்தினி டீச்சர் 9-ம் வகுப்புக்குப் புதிதாக வந்தவர். வருகைப் பதிவேட்டிலிருந்து பெயர்களை அழைத்துக்கொண்டிருந்தார். கீதா என்றவுடன் இரண்டு கீதாக்களும் பிரசென்ட் டீச்சர் என்றார்கள். நந்தினி டீச்சர் இனிஷியலைப் பார்த்தார். இருவருமே ஆர்.கீதாவாக இருந்தார்கள்.

முந்தைய வகுப்புகளில் டீச்சர்கள் இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாண்டார்கள் எனக் கேட்டார். 9-ம் வகுப்பில்தான் இரண்டு கீதாக்களும் ஒரே வகுப்பில் இருக்கிறார்கள் என்றார்கள். இருவருடைய அப்பா பெயர்களைக் கேட்டார் டீச்சர். ஒருவர் பெயர் ரங்கநாதன். இன்னொருவர் பெயர் ராமநாதன்.

அப்பாடா ஒரு பிரச்சினை தீர்ந்தது. யாராவது ஒருவரை அப்பாவின் பெயரோடு இணைத்து அழைக்கலாம் என்றார் டீச்சர்.

அந்தத் தீர்வு எல்லோருக்கும் சரியாகப்பட்டாலும் ராணிக்கு ஒரு கேள்வி எழுந்தது.

ஏன் டீச்சர், அப்பா பெயரை மட்டும் இனிஷியலாகப் போடறாங்க, அம்மா பெயரை ஏன் போடறதில்லை?

டீச்சர், சிலருக்கு இனிஷியலில் ஊர் பெயர்கூட இருக்கு என்றாள் கலா.

ஊர் பேர்கூட இருக்கு, ஆனா அம்மா பேர் இல்லியே டீச்சர் என்றாள் ராணி.

நந்தினி டீச்சருக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

நிர்ப்பந்தமா, விருப்பமா?

ராணியின் கேள்விக்குப் பலரும் பழக்கம் அல்லது கலாச்சாரம் என்பதைப் பதிலாகச் சொல்லலாம். திருமணத்துக்கு முன் அப்பாவின் பெயரையும் திருமணத்துக்குப் பிறகு கணவனின் பெயரையும் இனிஷியலாகவோ பெயரின் பின்னால் முழுப் பெயராகவோ போட வேண்டும் என்ற சமூக நிர்ப்பந்தம் இங்கு பெண்களுக்கு இருக்கிறது. சில நேரம் பெண்களே விரும்பியும் தங்கள் கணவன் பெயரைத் தங்கள் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொள்கிறார்கள்.

பெயரில் என்ன இருக்கிறது, அதுவொரு அடையாளம்தானே என்று பலரும் நினைக்கக்கூடும். ஏன் இந்த அடையாளம்? இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன?

ஒரு பெண், காலங்காலமாக ஆணால் மட்டுமே அறியப்பட வேண்டும் என்ற தந்தைவழிச் சமூகத்தின் மறைமுகத் திணிப்பு இது. பிறந்தவுடன் அப்பாவின் பெயரை இனிஷியலாகப் போடுவதிலிருந்து இது ஆரம்பிக்கிறது.கல்யாணமானவுடன் தந்தை மூலம் வந்த இனிஷியலை மாற்றி, கணவன் பெயர் மனைவிக்கு இனிஷியல் ஆக்கப்படுகிறது. அல்லது பெண்ணின் பெயரின் பின்னால் முழுப் பெயராகப் போடப்படுகிறது.

பெயர் சொல்லாப் பெருமிதம்?

ஆனால், இன்றைக்கும் கிராமப்புறங்களில் வேறு வழக்கம் இருக்கிறது. கிராமப்புறப் பெண்களிடம் அவர்களுடைய கணவன் பெயரைக் கேட்டால் பலரும் நேரடியாகப் பெயரைச் சொல்ல மாட்டார்கள். திருப்பதி சாமி பெயரென்றும் (ஏழுமலை) மரத்துக்காய் பெயரென்றும் (முருகேசன்) சொல்வார்கள். கணவன் பெயரை மனைவி சொல்வது மரியாதை ஆகாதாம். மேலும், அப்படிச் சொன்னால் கணவனின் ஆயுள் குறைந்துவிடும் என்கிறார்கள்.

நகரத்துப் பெண்களிடம் அவர்களது பெயரைக் கேட்டால் மிஸஸ் கபிலன், மிஸஸ் சுரேஷ் என்று சொல்கிறார்கள். வேறு சிலர் கணவன் பெயரையும் உடன் சேர்ந்துக்கொண்டு திருமதி மல்லிகா பண்டரிநாதன், திருமதி செல்வி சுகுமாறன் என்றெல்லாம் சொல்கிறார்கள். காரணம் கேட்டால் கணவனின் பெயரால் மனைவி அறியப்படுவதுதான் பெண்ணுக்குப் பெருமை தரும் விஷயம் என்கிறார்கள்.

ஆக, இதில் எது நமது கலாச்சாரம்? கணவன் பெயரைச் சொல்லாமலே இருப்பதா இல்லை கணவனின் பெயர் முன் திருமதி என்று போட்டுக்கொள்வதா?

கிராமப்புறப் பெண்களின் இந்தப் பெயர் சொல்லா இயல்பு, காரண காரியங்கள் சொல்லப்படாமலேயே ஒரு மரபாகிவிட்டது. மேலைநாட்டவர்கள் போல நகர்ப்புறப் பெண்கள் கணவன் பெயர் முன் திருமதி என்று போட்டுக் கொள்வதை ஃபேஷனாகக் கருதிச் செய்கிறார்கள்.

ஆணுக்கு மட்டுமே முக்கியத்துவம்

இரு வகைப் பெண்களின் அணுகு முறையிலும் முரண்பாடுகள் இருப்பதாக மேலெழுந்த வாரியாகப்பட்டாலும், ஊன்றிப் பார்த்தால் இந்த இரு வகைப் போக்குகளும் ஒரே உணர்வைத்தான் பிரதிபலிக்கின்றன. ஆண் பிரதானமானவன், பெண் அவனைச் சார்ந்தவள் என்ற மதிப்பீட்டைத்தான் இது பிரதிபலிக்கிறது.

தந்தை பெயரை இனிஷியலாகப் போடுவதற்குச் சிலர் ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள்.

குழந்தையைத் தாய் பெற்றெடுப்பதால் அந்தக் குழந்தைக்கு அவள்தான் தாய் என்பது யாரும் சொல்லாமலே எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்தக் குழந்தையின் தந்தை யார் என்பது தாய்க்கு மட்டும்தான் தெரியும். ஒரு குழந்தை சரியான முறையில்/உறவில் பிறந்த குழந்தை என்பதற்கு அத்தாட்சியாகத்தான் தந்தையின் பெயர் இனிஷியல் ஆகிறது என்கிறார்கள்.

ஆக, எல்லாத் தாய்மார்களுடைய ‘கற்பு’ நிர்ணயிக்கப்படுவது அவரவர் குழந்தைகளின் இனிஷியல் மூலம்தானா? ஒவ்வொரு பெண்ணும் தாயாக, ஒவ்வொரு குழந்தையும் மனிதனாக வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் இது.

தந்தையின் பெயரை இனிஷியலாகப் போடுவதற்கு இன்னொரு நொண்டிச் சமாதானமும் சொல்லப்படுகிறது. ஒரே பெயரில் பலர் இருப்பதால் குழப்பத்தைத் தவிர்க்க இனிஷியல் பயன்படுகிறது என்கிறார்கள். இது பெயர்க் குழப்பத்தைத் தவிர்க்கும் செயல் மட்டுமே என்று சொல்கிறவர்கள் ஏன் திருமணமானவுடன் தந்தை பெயரை விட்டுக் கணவன் பெயரை இனிஷியல் ஆக்கிக்கொள்ள வேண்டும்?

எது சமத்துவம்?

ஏன் ஆண்களின் பெயர்களால் மட்டுமே பெண்கள் அறியப்பட வேண்டும்? வலியைப் பொறுத்துக்கொண்டு குழந்தையைப் பெற்றெடுப்பவள் பெண். ஆனால் இனிஷியலில்கூட அவளுக்கு உரிமையில்லை. சமத்துவம் சமத்துவம் என்கிறோம். எல்லாம் வாயளவில்தானா? ஏன் அது செயல்பாடுகளில் பிரதிபலிப்பதில்லை?

அப்பா, அம்மா இருவரது பெயரின் முதலெழுத்தையும் எடுத்துக்கொண்டு ஏன் இரட்டை இனிஷியல் வைத்துக்கொள்ளக் கூடாது?இனிஷியலில் ஊர் பெயரைக்கூட சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால், அம்மாவின் பெயரைச் சேர்த்துக்கொள்வதைப் பற்றி யோசிக்கக்கூட மறுக்கிறோம்.

பெண்கள் ஒருவருக்கு மகளாக, மனைவியாக, தாயாக இருக்கலாம். ஆனால், அது மட்டுமேயல்ல அவர்கள். அவர்களும் தனி மனிதர்கள்தாம். அவர்களுக்கும் உணர்வும் தனித்துவமும் உண்டு. அவர்களுக்கான சமூக அந்தஸ்தும் தரப்படுவதுதான் உண்மையான சமத்துவம்.

இளம் பெற்றோரே, உங்கள் குழந்தையின் பெயரைப் பதிவுசெய்யும் முன் இருவரது பெயரையும் கட்டாயமாக இனிஷியலாக்க வேண்டும் என்று முடிவெடுங்கள்.

பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும்போது அம்மா, அப்பா இருவரின் பெயரையோ யாராவது ஒருவரின் பெயரையோ இனிஷியலாகப் போடலாம் என்று சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2003–ல் அறிவித்தார். அம்மாவின் பெயரைக் கட்டாயாமாக இனிஷியலாகப் போட வேண்டும் என்று சொல்லி இருக்கலாமோ?

 

மாற்றத்துக்குத் தயாரா?

உங்கள் குழந்தைக்கு அம்மாவின் பெயரையோ அப்பா, அம்மா இருவரது பெயரையோ இனிஷியலாக வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள்தான் அந்த முன்னுதாரணப் பெற்றோர். உங்கள் குழந்தைக்கு இனிஷியல் வைத்த அனுபவத்தை எழுதியனுப்புங்கள், மாற்றத்துக்கு வித்திடுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: பெண் இன்று, தி இந்து தமிழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002 | மின்னஞ்சல்: penindru@thehinutamil.co.in


(தேடல் தொடரும்)
கட்டுரையாளர்,
எழுத்தாளர்,செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: maa1961@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x