Published : 10 Jun 2018 11:27 AM
Last Updated : 10 Jun 2018 11:27 AM

கற்பிதம் அல்ல பெருமிதம் 09: ஏன் அழகாக இருக்க வேண்டும்?

பிறந்தநாளுக்கு நர்மதா போட்டுக்கொண்டிருந்த பட்டியலைப் பார்த்து அம்மாவுக்குப் பயமாக இருந்தது. தீபாவளிக்குக்கூட மற்றவர்களுக்கும் வாங்க வேண்டும் என்று சொல்லி சமாளிக்கலாம். பிறந்தநாளுக்கு அதையும் சொல்ல முடியாது. போன தடவை மாதிரி இரண்டு நாள் சரியாகச் சாப்பிடாமல் அழுவாள்.

வளையல், டிரஸ், தோடு வாங்குவதுகூட பிரச்சினை இல்லை. ஹை ஹீல்ஸ் வாங்கித் தருவதில் அம்மாவுக்கு உடன்பாடில்லை. ஆனால், ஹீல்ஸ் பற்றித்தான் நர்மதா அதிக ஆர்வத்துடன் இருக்கிறாள்.

எல்லாம் அவங்க அப்பா செய்த வம்பு. அவள் போன வருஷம் கேட்டபொழுது உனக்கு இப்ப 17 வயசுதானே, அடுத்த ஆண்டு பிறந்தநாளுக்குக் கண்டிப்பாக வாங்கித் தரேன் என்று சொல்லிவிட்டார். அதையே விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டுவிட்டாள்.

ஹை ஹீல்ஸ் நல்லதா?

நர்மதா அப்படியொன்றும் குள்ளம் இல்லை. 5 அடி 4 அங்குலம். ஆனாலும் ஏன் ஹீல்ஸ் வேண்டும் என்று கேட்கிறாள் என்பது புரியவில்லை.

அம்மாவுக்கு அவள் சின்னப் பெண்ணாக இருந்தபோது ஹீல்ஸ் போட ஆசை இருந்ததுதான். அவள் உயரம் 5 அடிகூட கிடையாது. ஆனால், ஹீல்ஸ் வாங்கித்தர முடியாது என்று அப்பா கறாராகச் சொல்லிவிட்டார். முதலில் அவளுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், தொடர்ந்து ஹீல்ஸ் போட்ட அவளுடைய தோழிகள் பின்னாளில் இடுப்புவலி, முதுகுவலி, கணுக்கால் வலி என்றெல்லாம் சிரமப்பட்டபோது அப்பா சொன்னது சரியென்றுபட்டது. எப்படிச் சொல்லி நர்மதாவுக்குப் புரியவைப்பது?

பெண்கள் ஏன் ஹீல்ஸ் அணிய விரும்புகிறார்கள்? உயரத்தைக் கூட்டிக்காட்ட என்றால் ஏன் உயரமான பெண்களும்கூட ஹீல்ஸ் அணிய விரும்புகிறார்கள்? இதற்குப் பின்னால் உள்ள உளவியலை எல்லாப் பெண்களும் புரிந்துகொண்டு, ஹீல்ஸ் அணிகிறார்கள் என்று சொல்ல முடியாது.

உளவியல் சொல்வது என்ன?

சிலர் எனக்குப் பிடித்திருக்கிறது, போட்டுக்கொள்கிறேன் என்கிறார்கள். என் தோழிகள் ஹை ஹீல்ஸ் அணிகிறார்கள், நான் போடக் கூடாதா என்கிறார்கள் சிலர். ஹை ஹீல்ஸ் போடுவதுதான் தற்போதைய ஃபேஷன், நான் ஏன் போடக் கூடாது என்கிறார்கள் ச இன்னும் சிலர்.

ஹை ஹீல்ஸ் அணிவதற்குப் பின்னால் உள்ள உளவியல், உயரத்தை அதிகப்படுத்தி காண்பிப்பது மட்டுமல்ல என்று சமீபத்திய ஆராய்ச்சி சொல்கிறது. இங்கிலாந்தில் உள்ள Portsmouth பல்கலைக்கழகத்தில் உளவியல் தத்துவப் பேராசிரியர் பால் மோரிஸ், அவருடைய குழுவுடன் இரண்டு ஆராய்ச்சிகளை நடத்தினார்.

ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பது ஒரு பெண்ணுக்கு வசீகரத்தையும் பெண்மைத் தன்மையையும் அதிகரிக்கிறதா என்று அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்தது இதுதான்:

பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும்போது வசீகரமாக உள்ளதா அல்லது வெறும் தட்டை செருப்பு அணிந்து நடக்கும்போது வசீகரமாக உள்ளதா என்று ஆண்களிடமும் பெண்களிடமும் கேட்டிருக்கிறார்கள்.

வசீகரத்தை விரும்பும் பெண் மனம்

ஹை ஹீல்ஸ் போட்டபடியும் தட்டையான காலணிகளை அணிந்தும் பெண்கள் நடப்பதை ஒளி வட்ட உருவங்களாகக் காட்டியிருந்தார்கள்.

ஹை ஹீல்ஸ் அணிந்தபோது இடுப்பின் அசைவுகள் இடதுபுறமும் வலதுபுறமும் ஊஞ்சலாடுவதும் சிறு சிறு அடிகளாக நடப்பதும் பெண்களின் வசீகரத்தைக் கூட்டுவதாகப் பதில் சொன்னவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இரண்டாவது பரிசோதனையில் நடப்பவர் ஆணா, பெண்ணா என்று கேட்டிருக்கிறார்கள். நடந்தவர்கள் அனைவருமே பெண்கள்தான். ஆனால், தட்டைச் செருப்பு அணிந்து நடந்தவர்கள் ஆண்களாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களில் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.

காரணம் என்ன? ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும்போது பெண்களின் நடை அதிகப்படியான பெண்மைத் தன்மையோடு இருக்கிறதாம். அதேபோல் ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும்போது கால்களை வேகமாக வீசி நடக்காமல் சின்னச் சின்ன அடிகளாக நடக்கவேண்டி உள்ளதாம். இதற்குக் காரணம் இடுப்பின் அசைவும் சுழற்சியும்தாம்.

எனக்குப் பிடித்திருக்கிறது, நான் ஹை ஹீல்ஸ் அணிகிறேன் என்று சொல்பவர்களின் மனத்தில் அவர்களே அறியாமல் பதிந்திருக்கும் உளவியல் இதுதான்.

அகற்ற வேண்டிய அறியாமை

வரவேற்பறைக்கு டி.வி. வந்தபின் பல ஃபேஷன் சேனல்களை எல்லோரும் பார்க்கிறார்கள். அழகிப் போட்டிகளைப் பார்க்கிறார்கள். இதையெல்லாம் ஆண்கள் ரசித்துப் பார்ப்பதையும் பார்க்கிறார்கள்.

பெண்களுக்கு அவர்கள் அறியாமல் உள்ளத்தில் பதிவது இதுதான்: ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும்போது அவர்களின் நடை, பாவனை மேலும் வசீகரமாகிறது. இடுப்பின் அசைவுகளையும் நளினத்தையும் கவர்ச்சியையும் அது கூட்டுகிறது. ஆனால், இதைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஒருவேளை நேரடியாக உணர்வுபூர்வமாக அப்படி யோசிக்காமல்கூட இருக்கலாம். “எனக்குப் பிடித்திருக்கிறது. நான் அணிகிறேன். அதில் என்ன தவறு? பார்ப்பவர்கள் அதைக் கவர்ச்சியாகப் பார்த்தால் அது அவர்கள் பார்வையில் உள்ள கோளாறு” என்கிறார்கள்.

ஆனால், கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த அழகு மாயை (Beauty Myth) என்ற புத்தகத்தில் ஆசிரியர் நவோமி வுல்ப் (Naomi Wolf) இதை வேறுவிதமாக அணுகுகிறார்.

பின்னிழுக்கும் அழகு ஆர்வம்

பாட்டிமார்கள் புழங்காத இடங்களில் நாம் புழங்குகிறோம், படிக்கிறோம், வேலை பார்க்கிறோம். ஆனால், கலாச்சாரம் எப்படிப் பல வரையறைகளை விதித்து நம்மை ஒடுக்குகிறதோ அப்படி அழகு பற்றிய மாயையும் நம்மை ஒடுக்குகிறது. கலாச்சாரம்கூட வெளி அழுத்தம்தான். அழகு மாயை நம்மை நாம் அறியாமலேயே உள்ளுக்குள் அழுத்தி மேலே வர விடாமல் தடுக்கும் ச(க்)தியாக உள்ளது.

நாம்தான் அழகு மாயையில் சிக்கி பாட்டிமார்களைவிட அதிகச் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறோம். இந்தத் தலைமுறைதான் ரத்த சோகையால் அவதியுறுகிறது. அழகு சாதனப்பொருட்களின் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. உடல் உறுப்புக்களை அழகாக்கிக்கொள்ள அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள். ஒல்லியாக இருக்கப் பெண்கள் ஓயாமல் பாடுபடுகிறரகள்.

அழகாகத் தோற்றமளிக்க நினைப்பதில் என்ன தவறு என்று கேட்கலாம். தவறில்லை. ஆனால், இது நம்மை ஒடுக்குகிறது. பெண்களின் ஆளுமையும் திறன்களும் அவர்களை வானத்துக்குக் கொண்டுசென்றாலும் அழகு பற்றிய மாயைப் பின்னுக்கு இழுத்து இரண்டாம் இடத்திலேயே நிற்கவைக்கிறது. நாம் அறியாமலேயே நம் மேல் விரிக்கப்பட்ட வலை இது.

என் தோற்றம் எப்படி இருந்தால் என்ன? ‘ஸோ வாட்’ என்று உள்ளுக்குள்ளும் வெளியேயும் கேள்வி கேட்க ஆரம்பிப்போம். அழகு என்பது பெருமிதமல்ல; கற்பிதம் என்பதை உணர்வோம்.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர்,

எழுத்தாளர்,செயற்பாட்டாளர்.

தொடர்புக்கு: maa1961@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x