Published : 10 Jun 2018 11:28 AM
Last Updated : 10 Jun 2018 11:28 AM

பெண் எழுத்து: மாற்றத்தின் தூதர்கள்

ல ண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் வரலாற்றுப் பேராசிரியராக பாட்ரீசியா பாரா பணியாற்றுகிறார். ஆசிரியர், வரலாற்று ஆய்வாளர், சமூக நெறியாளர், சிந்தனையாளர், எழுத்தாளர் எனப் பன்முகங்கள் அவருக்கு உண்டு. நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் முக்கியமானது, ‘ ஒருவரின் சொந்த ஆய்வுக்கூடம்’ (A Lab of One’s Own). அந்தப் புத்தகத்தில் அவருக்குச் சொல்ல நிறைய இருந்துள்ளது.

முதல் உலகப் போர் நடைபெற்றபோது பெண்கள் - அறிவியல் - அரசியல் வாக்குரிமை ஆகியவற்றின் நிலைமைகளைப் பற்றி ஆராய்ந்து அதில் எழுதியிருக்கிறார். மேலும், முதல் உலகப் போர் எப்படிப் பெண்களுக்கான பணிக்களங்களைத் திறந்துவிட்டது என்றும் அவர்களைப் பற்றிய மரபார்ந்த பிம்பத்தை அது எப்படி மாற்றியமைத்தது என்றும் இந்தப் புத்தகத்தில் பாட்ரீசியா எழுதியிருக்கிறார்

patricia பாட்ரீசியா பாரா rightஅடிமைப்படுத்தும் பரிணாமக் கொள்கை

பெண்களைப் பற்றிய அணுகுமுறையின் மீது மிகுந்த தாக்கம் செலுத்திய முதன்மைக் கொள்கைகளில் ஒன்று என சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கையை அவர் குறிப்பிடுகிறார். பெண்கள் இயற்கையிலேயே ஆண்களைவிடப் பலவீனமானவர்கள் என்று நீண்ட காலமாகச் சமூகத்தில் நிலைபெற்றிருந்த சிந்தனையை டார்வினின் கொள்கை வலுப்படுத்தியதாக அந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிடுகிறார்.

‘டார்வினின் கொள்கை, அறிவியல்பூர்வமான செல்லுபடிதன்மையை ஒரு வகையில் மேற்கண்ட சிந்தனைக்குக் கொடுத்திருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்களும் பெண்களும் அவர்கள் எந்தச் சூழல்களுக்குள் வாழ்ந்து வந்திருந்தார்களோ அவற்றுக்கு உள்ளேயே பொருந்திப் போகும்படித்தான் அவர்களின் வாழ்வு வடிவமைக்கப்பட்டிருந்து. அதன் படி ஆண்கள் துணிவானவர்கள், அறிவுக் கூர்மையானவர்கள். பெண்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும். சமையல் வேலையைச் செய்து வீட்டைக் கவனித்துக்கொள்ள வேண்டும்’ என்று டார்வின் கொள்கை குறித்து பாட்ரீசியா சொல்கிறார்.

சைக்கிள் அளித்த சுதந்திரம்

மேலும், ‘பெண்களை அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட இடங்களிலேயே முடக்கி வைப்பதற்குத்தான் அறிவியலும் உடற்கூறியலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புகளின் சாதகமான ஆதாயங்களைப் பெண்கள் தமக்குரியதாக்கிக் கொண்டுவிட்டனர். அத்தகைய கண்டுபிடிப்புகளிலேயே அதிகபட்ச முக்கியத்துவம் வாய்ந்தது சைக்கிள்தான். பெண்கள் தமது சுற்றுப்புறப் பகுதிகளுக்குச் சுதந்திரமாகப் போகவும் வரவும் சைக்கிள்களே வழிவகுத்தன. சைக்கிள்கள் அவர்களை விடுதலை செய்ததைப் போல் அதற்கு முன் இப்படி வேறு எதனாலும் விடுதலை அடைந்ததே இல்லை’ என்று அவர் சொல்கிறார்

பெண்ணின் உடையைத் தூற்றிய சமூகம்

பெண்கள் அணியும் உடைகளில் இந்தத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பெண்கள் சைக்கிள்களை ஓட்டிச் செல்வதற்கு வசதியாகச் சற்றே உயரம் குறைந்த பாவாடைகளைத் தேர்வு செய்தபோது, கடுமையான வசவுகளும் அவதூறுகளும் அவர்களை நோக்கி வீசப்பட்டன. தேர்தல்களில் அரசியல்ரீதியான வாக்குரிமையைப் பெண்கள் பெற்றது, டிரவுசர்கள், பிளவுண்ட பாவாடைகள், குட்டைப் பாவாடைகள் எனத் தங்களுக்குத் தேவையான ஆடைகளைப் பெண்கள் தேர்ந்தெடுக்க வழிவகை செய்தது. ஆனால், அன்றைய காலகட்டத்தின் பழமைவாத சமூகம் இவற்றையெல்லாம் பழித்து, தூற்ற வேண்டிய மோசமான அம்சங்களாகவே பார்த்தது.

ராணுவத்தில், பெண்களின் துணை ராணுவப் பிரிவு மையத்தில் Helen Gwynne Vaughan என்பவர் இணைந்தபோது பெண்களின் இந்த ஆடைப் பிரச்சினை மறு படியும் பேசுபொருளானது. ‘முழங்கால் களுக்குக் கீழ்வரை நீண்டிருக்கும் உடைகளைத்தான் பெண் ராணுவ வீரர்கள் அணிய வேண்டும். மேற்சட்டைகளில் மார்புப் பகுதியில் பாக்கெட்டுகள் இருக்கக் கூடாது’ எனப் பல கட்டுப்பாடுகள் அப்போது விதிக்கப்பட்டன என்று பாட்ரீசியா சொல்கிறார்.

shutterstock_513703555அறிவுசார்ந்த வேலைகளில் என்ன பாகுபாடு?

அறிவியலிலும் அது சார்ந்த ஆராய்ச்சிகளிலும் பெண்கள் நல்ல முறையில் சாதனை புரிகிறவர்களாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் எப்படி அறிவார்ந்த களங்களில் பின்தங்கியிருக்குமாறு ஒடுக்கப்பட்டனர் என்பதற்கான தொடர்புக் கண்ணிகளை பாட்ரீசியா இந்தப் புத்தகத்தில் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறார். குழந்தைகளையும் கணவரையும் கவனித்துப் பராமரிக்கும் பாத்திரமே பெண்களுக்குச் சிறப்பு என்றும், அதுவே பெண்களுக்கான அறிவார்ந்த முன்னேற்றம் என்றும் அப்போது கூறப்பட்டு வந்திருக்கிறது. இந்த வாதம், முதல் உலகப் போருக்குப் பிந்தைய காலப் பகுதியில் சற்றே பலவீனம் அடைந்துள்ளது.

காரணம், போரில் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டனர். ஆகவே, அதன் விளைவாகத் தோராயமாக, ஒன்பது ஆண்களுக்குப் பத்துப் பெண்கள் என்ற விகிதத்தில்தான் பெண்களின் எண்ணிக்கை இருந்திருக்கிறது. திருமணமாகாத பெண்கள் உபரியாக இருந்துள்ளனர். மற்றொரு வாதம் என்னவெனில், பெண்களுக்கு அறிவார்ந்த பொறுப்புகள் வழங்கப்படுவது, அவர்களைக் களைப் படையச் செய்துவிடும் என்பதுதான். சமீபத்திய ஆய்வு ஒன்றின் அடிப்படையில் இத்தகைய அறிவார்ந்த பொறுப்புகள் உண்மையில் பெண்கள் உடல்நலத்துடன் இருக்கவே உதவுகின்றன என்று பாட்ரீசியா சுட்டிக்காட்டுகிறார்.

தடைகளை மீறி ஜொலித்த பெண்கள்

பல்கலைக்கழகம்வரை கல்வி பயில மிகச் சில பெண்களே சென்றனர். அப்படியே அவர்கள் போனாலும் சில பாடப் பிரிவுகள் அவர்களுக்குப் பொருத்தமற்றவை என்று அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மருத்துவக் கல்வி சார்ந்த பள்ளிகளில், குறிப்பாக லண்டனில் மிகச் சில பெண்களே இருந்திருக்கின்றனர். அவர்கள் பல வகுப்புகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். மிக மிக அரிதாகவே அவர்கள் வேலைவாய்ப்பைப் பெற முடிந்திருக்கிறது. பெரும்பாலும், அந்தப் பெண்கள் கொஞ்சம் வசதியான செல்வந்தர்களின் வீடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், சம்பளம் இல்லாமலே அவர்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது.

பெண் மருத்துவர்கள் பெரும்பாலும் மகப்பேறு மருத்துவர்களாகவும் குழந்தைகள் நல மருத்துவர்களாகவுமே இருந்தனர். அவர்களுள் பலரும் இந்தியாவுக்கு வந்துவிட்டனர். காரணம், இங்கே பெண்களுக்குப் பெண் மருத்துவர்களே மருத்துவம் பார்க்க வேண்டியிருந்ததுதான். இதன் காரணமாக, இந்தியாவில் அவர்கள் சுயமாகப் பயிற்சி செய்ய முடிந்திருக்கிறது. போர்க் காலம், பெண்களுக்குப் பணிக் களங்களைத் திறந்துவிட்டிருந்தது.

ஆனால், போரற்ற காலத்தில், மற்றவர்களைப் பராமரிக்க வேண்டியவர்கள்தாம் பெண்கள் என்ற மரபுவழிப்பட்ட பிம்பத்தையே சமூகம் இறுகப் பற்றிக்கொண்டிருந்தது. இந்நிலையில், புதிய மாற்றங்களை முன்னறிவித்து, துருவ நட்சத்திரங்களாக ஒளிர்ந்திருந்த, ஆனால் மிகக் குறைவாகவே அறியப்பட்டிருக்கும் சில சாதனையாளர்களின் உத்வேகம் நிறைந்த வாழ்க்கைச் சித்திரங்களை பாட்ரீசியா பாராவின் புத்தகம் வெளிக் கொணர்ந்திருக்கிறது.

‘தி இந்து’ ஆங்கிலம் | சுருக்கமாகத் தமிழில்: கமலாலயன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x