Last Updated : 10 Jun, 2018 11:29 AM

 

Published : 10 Jun 2018 11:29 AM
Last Updated : 10 Jun 2018 11:29 AM

பாதையற்ற நிலம் 08: இருளில் ஒளிரும் கவிதைகள்

தமிழ்க் கவிதை இன்று மொழியளவில் எளிமையாகிவிட்டது. பழந்தமிழ்க் கவிதையில் இருந்த எதுகை,மோனை வெளிப்பாடு இன்றைய கவிதையில் இல்லை. ஓசைகள் இல்லாமல் போய்விட்டால், கவிதைக்கு உரைநடைத் தன்மை வந்துவிடும். அப்படியானால் கவிதை, எப்படிக் கவிதையாக இருக்கும்?

புதுக்கவிதையின் தந்தை க.நா.சுப்பிரமணியன் இந்த ஓசை நயத்துக்கு மாற்றாக மறைபொருளைப் பரிந்துரைக்கிறார். அன்றாட நிகழ்வின் ஓர் அனுபவத்தை, கனவில் நழுவிய விநோதத்தை என எதை வேண்டுமானாலும் மறைபொருளாகக் கொள்ளலாம். இவற்றில் விவரிக்கவியலாப் பெண்களின் மனஇருட்டைத் தன் கவிதைகளுக்கான மறைபொருளாகக் கொண்டு கவிதைகள் எழுத வந்தவர் கவிஞர் குட்டிரேவதி.

பெண்களுக்கான உலகம், அந்த உலகத்தின் தனித்த பிரச்சினைகள், அவர்களது விருப்பங்கள், தாபங்கள் இவை எல்லாம் தொடக்க காலப் பெண் படைப்புகளில் திரளாக வெளிப்பட்டது. ஆணைச் சார்ந்து இயங்கிய பெண்களின் அங்கீகாரத்துக்கான குரலாகவே வெளிப்பட்டது. இதற்கிடையில் பெண்களுக்கான பெண்களின் தனித்துவமான குரலாக வெளிப்பட்டவை குட்டிரேவதியின் கவிதைகள்.

பெண்கள் அதுவரை பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளாத மனத்தின் இருட்டைத் தன் கவிதைகளின் மூலம் ஒளியேற்றிக் காட்டினார் ரேவதி. இன்னும் குறிப்பாகப் பெண்களது உடலைப் பார்க்கவைத்த கவிதைகள் எனலாம். இது அவரது ஒரு அம்சம்தான். இன்னொரு பக்கம் காதலின் கரைகாணாப் படகாகத் தன் கவிதைகளை ரேவதி மிதக்கவிட்டிருக்கிறார். ஆண்/பெண் உறவுகள் குறித்த ஏக்கங்களை, இடைவெளிகளை, பாசாங்குகளை பெண்கள் பக்கம் நின்று சொல்லியிருக்கிறார்.

இந்த உறவுக்கு நிலவையும் சூரியனையும் முழுமையையும் சூன்யத்தையும் ஒப்பிடுகிறார். ஆனால் இந்தக் கவிதைகளில் கோபமோ ஓலமோ இல்லை. இதற்குள்ளிருக்கும் முரண்களைச் சொல்லும் கவிதைகளின் சொற்களுக்குக் குழையும் அன்பை உயவுப்பொருளாக்கியிருக்கிறார். உறவின் மறுகரையில் பெண்கள் மனதும் உடலும் சிதைவுறுவதை இயல்பாகச் சித்தரித்திருக்கிறார்.

ரேவதியின் கவிதைகளில் ஆண்/பெண் உடலுறவுக் காட்சிகள் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. அப்படியான கவிதைகளுள் ஒன்று ‘என் காமத்தின் ஒளி’,

என் காமத்தை இதுவரை

நீ வருடிப்பார்த்ததுகூட இல்லை

அது அணையாது காக்கவேண்டிய

ஒரு சுடரைப்போலத்

தெருவெங்கும் அலைகிறது

இந்தக் கவிதை உடலுறவு குறித்த பெண்களின் அபிப்ராயத்தைச் சொல்கிறது. ‘வருடிப்பார்த்திருக்கிறாயா / என் காமத்தை ஒரு புதிய காகிதத்தில் எழுத விரும்புவதைப்போலவோ / ஒரு குழந்தையின் விரல்களைப் பற்றும் ஆர்வத்துடனோ?’ என இந்தக் கவிதையை முடிக்கிறார். இன்னொரு கவிதையில் ஊறுபடத்தக்க மெல்லிய உடலுடனும் மனத்துடனும் திருமண உறவுக்குள் வரும் பெண், தாங்கவியலாக் காமத்தை எதிர்கொண்ட கதையைப் பேசுகிறது. ‘காவியம்’ என்ற இன்னொரு கவிதை, காமத்தை உன்னதமாக்குகிறது. ஆண், பெண் உடல்களைக் கருவறைச் சிற்பங்கள் என்கிறது அந்தக் கவிதை.

shutterstock114792070

பிரசவத்துக்காக வரும் பெண்ணைக் குறித்த ஒரு கவிதையை இதன் தொடர்ச்சி எனக் கொள்ளலாம். பிரசவத்துக்காக வரும் அந்தப் பெண்ணின் முகத்தில், ‘ஆயிரம் மூதாதைப் பெண்டிர் விழுங்கியும் மரிக்காத அரளி வித்துகள் வேதனை எச்சங்களின் பூஞ்சை படர்ந்திருக்கிறது’ என்கிறார். கனவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்திருப்பாள் என்கிறார். ரேவதியின் கவிதைகளில் இது தொடர்ந்து சுட்டிக்காட்டப்படுகிறது. அவள் முதுகை வலி திருகிக்கொண்டிருக்கிறது.

அவளது கருப்பையில் ஓயாத தீமூட்டம். மருத்துவச்சி அவளது கால்களை அகட்டிப் பார்க்கிறாள். தொடைகளின் உள் இடுக்கில் சாம்பல் உதிரும் சிகரெட் சூடுகள் கண்களாகக் கனன்றுகொண்டிருக்கின்றன. ‘இன்னுமா நீ அவனுக்கு மனைவி?’ என மருத்துவச்சி கேட்கிறாள். இன்னும் தொடரும் இந்தக் கவிதை, ரேவதியின் கவிதை சொல்லும் பாங்கிலிருந்து வேறுபட்டது. இதில் அவர் ஒரு கதைத்தன்மையில் கவிதை சொல்ல முயன்றிருக்கிறார்.

ரேவதியின் மொழிக்கு ஆற்றின் பிரவாகம் உண்டு. இதைப் போன்று அது என உவமை கூறாமல், இதயகிரகங்கள், அர்த்தப் பெருங்குழி, உடலின் நதிப்படுகை என உருவகம் தருகிறார். வாசக மனத்தில் இதன் மூலம் பெரும் எழுச்சியை ரேவதி எழுப்பிவிடுகிறார். இந்தப் பண்பு விசேஷமானது. முதல் தலைமுறைப் புதுக்கவிஞர்களான நா.பிச்சமூர்த்தி, பிரமிள் ஆகியோருடன் ஒப்பிடத்தகுந்த ஆற்றல் ரேவதியின் இந்த மொழிக்கு உண்டு. ‘மேகப் பொதிகள் சிதையும் அடிவானப்படுகை/ சுண்ணாம்பு வெயில் அழுத்தமான மெளனத்தோடு வெறிக்கிறது’ எனக் கோடையை விவரிக்கும் அவரது கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

shutterstock224230543 Convertedcolright

ரேவதியின் கவிதைகளில் தொடர்ந்து தொழிற்படும் இன்னொரு விஷயம், தனிமை. இந்தத் தனிமை, தனியாக வெளிப்படவில்லை. அது இயற்கை தரிசனங்களாகக் கவிதைக்குள் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. ரேவதியின் கவிதைக்குள் இருக்கும் இயற்கை, பெருங்காடு அல்ல. தனிமையறையின் ஜன்னல் வெளி என வரையறுக்கலாம். இந்த இயற்கையின் அம்சங்களைத் தன் கவிதைகளுக்கான உவமைப் பொருளாகக் கொண்டுள்ளார்.

ஜன்னல் வழி மழைத் துளியை, அரவணைக்கும் கரம் என்கிறார். உருளும் பாறைகளைக் கண்ணீர்த் துளி என்கிறார். பெண்ணின் முலைகளைக் கண்ணீர்த் துளிகள் என வியப்பூட்டுகிறார். இயற்கையின் செயல்களைக் கொண்டு மனித உணர்வுகளுக்கு ஸ்தூல உரு கொடுக்கவும் ரேவதி தன் கவிதைகள் வழியாக முயன்று பார்த்துள்ளார்.

இயற்கை, பெண்ணுடல், ஆண்/பெண் உறவு ஆகிய பாடுபொருளைத் தாண்டி இவரது கவிதைகளில் திட்டமான அரசியலும் போர் மூர்க்கமும் பிறகு வெளிப்பட்டன. பெண்ணுடலை இன்னும் நெருக்கமாக அணுகிப் பார்த்தன. ஆனால் எந்தப் பாடுபொருளில் கவிதைகள் எழுதினாலும் புழங்கும் மொழியில் ஒரு வசீகரத்தை இவர் கடைப்பிடிக்கிறார். ‘நெஞ்சுக்கூரைக்குள் நிலவொளியை’ கவிதைக்குள் ஒரு மறைபொருளையும் வைத்திருக்கிறார். அடர் இருட்டில் ஏற்றப்பட்ட விளக்கைப் போல் அது அவரது கவிதைகளுக்குள் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.

வெளியேறும் வழி

எப்படி வெளியேறுவது

காற்றைப் போலவா

அறையைக் கழுவிய நீரைப் போலவா

அறைகள் நெற்குதிரெனத் திமிர்ந்திருக்கச்

சுவரில் தொங்கும் ஓவியத்தின் ஒளி

அணையாதிருக்க

ஜன்னல் வழியாகக்

காலையில் விழுந்த ஒளி

மாலை எப்படி வெளியேறியதோ

அப்படியா

அரங்கம் நிறைந்த கூட்டத்தில்

மெளனம் சொல்லிக்கொள்ளாது

வெளியேறுவது போலவா

மணமுடிக்காத பெண்

தன் கர்ப்பத்துக்கு

ரகசியமாய் வாசல் திறப்பதுபோலா?
 

குட்டிரேவதி, சித்தமருத்துவத்தில் பட்டம் பெற்றவர். பூனையைப் போல அலையும் வெளிச்சம் (தமிழினி வெளியீடு), முலைகள் (அடையாளம் வெளியீடு), உடலின் கதவு (பனிக்குடம் வெளியீடு) உள்ளிட்ட 10 கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. ‘காலத்தைச் செரிக்கும் வித்தை’ என்ற கட்டுரை நூலும் வெளிவந்துள்ளது. திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். தற்போது முழுநீளத் திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.


(பாதைகள் நீளும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x