Last Updated : 10 Jun, 2018 11:30 AM

 

Published : 10 Jun 2018 11:30 AM
Last Updated : 10 Jun 2018 11:30 AM

பெண்கள் 360: நீட் பறித்த உயிர்கள்

நீட் பறித்த உயிர்கள்

பிரதீபா, செஞ்சியை அடுத்த பெரவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 மதிப்பெண் பெற்றிருந்தார். தனியார் கல்லூரியில் சேர்க்கும் அளவுக்கு, கூலித் தொழிலாளியான அவர் தந்தையிடம் வசதி இல்லை. அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வு முடிவு திங்கள் அன்று வெளியானது. தேர்வு எழுதிய 1,14,602 தமிழக மாணவர்களில் 45,336 மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெறாதவர்களில் பிரதீபாவும் ஒருவர். 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற விரக்தியில் பிரதீபா தன் வாழ்வை முடித்துக்கொண்டார். பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த பிரதீபா, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண் பெற்றிருந்தார். பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண் எடுத்திருந்தார். பிரதீபாவின் தற்கொலையின் வேதனை மறையும் முன்னே, திருச்சியைச் சேர்ந்த 17 வயது சுபஸ்ரீயும் தற்கொலை செய்துகொண்டது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் தற்கொலையைத் தொடரும் இந்த இரண்டு மரணங்கள் நீட்டின் மீதான நம்பிக்கையையும் ஏழைக் குழந்தைகளின் மருத்துவக் கனவையும் சிதைத்துள்ளன.

மாதவிடாய் வறுமை

சானிட்டரி நாப்கின்கள், சுகாதாரமான கழிவறை, சுத்தமான தண்ணீர் போன்றவை பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் தேவைப்படுபவை. வறுமை காரணமாக அவை பெண்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், அது ‘ப்ரியட் பாவெர்ட்டி’ என்றழைக்கப்படுகிறது. தெற்காசியாவில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான மாணவிகள் இதன் காரணமாகப் பள்ளிக்குச் செல்வதில்லை என யுனிசெஃப் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் இதன் காரணமாக 60 சதவீத மாணவிகள் பள்ளிக்குச் செல்வதில்லை எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தங்களுக்கு பருவம் அடையும் வரை, 71 சதவீத இந்திய மாணவிகளுக்கு மாதவிடாய் குறித்து எதுவுமே தெரியவில்லை என அதன் தரவுகள் தெரிவிக்கின்றன. கற்பது பெண்களின் அடிப்படை உரிமை. ‘ப்ரியட் பாவெர்ட்டி’ அந்த உரிமையை நீர்த்துப் போகச் செய்கிறது. சுத்தமான தண்ணீரும் சுகாதாரமான கழிவறையும் அனைத்துப் பள்ளிகளுக்கும் கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். மூடநம்பிக்கைகளை மூட்டை கட்டி வைத்து மாதவிடாய் குறித்து குழந்தைகளிடம் பெற்றோர்களும் பேச முன் வருவோம் ‘பிரீயட் பாவெர்ட்டி’யை ஒழிப்போம்.

கல்வியைக் காவு வாங்கும் வன்முறை

ஆப்கானிஸ்தானில் வறுமை, பாதுகாப்பு அச்சுறுத்தல், பெண்களுக்கு எதிரான பாகுபாடு, உள்நாட்டுப் போர் ஆகியவை காரணமாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது. பள்ளிக்குச் சென்ற 30 லட்சம் பெண் குழந்தைகளில் தற்போது 60 சதவீதத்துக்கும் மேலானோர் கல்வி கற்கவில்லை. குறிப்பாக, பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கு தாலிபான் தடை விதித்திருப்பதால், 7 முதல் 17 வயது வரையிலான பெண் குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக, கந்தகார், ஹெல்மன்ட், வார்டாக், பாக்டிகா, ஜாபுல், ஓருஸ்கான் ஆகிய பகுதியில் 85 சதவீதப் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. இடப்பெயர்வு மற்றும் குழந்தைத் திருமணம் ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி கற்காத பெண் குழந்தைகளின் விகிதம் ஆப்கானிஸ்தானைக் காட்டிலும், அந்நாட்டுக்கு அருகில் உள்ள பாகிஸ்தானிலும் நேபாளத்திலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் தேவை இல்லாத தீய செயல்களில் அவர்கள் ஈடுபட நேரிடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

என் குழந்தை நலம்தானா?

டாக்டர் வர்ஜீனியா அப்கார், மயக்கவியல் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. 1909-ல் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் அவர் பிறந்தார். 1933-ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். 1949-ல் வர்ஜீனியா அறுவைசிகிச்சை மருத்துவக் கல்லூரியின் முதல் மயக்கவியல் பெண் பேராசிரியரானார். பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்காக 1952-ல் ‘அப்கார் ஸ்கோ’ரை உருவாக்கினார்.

குழந்தைகளின் ஆரோக்கியம் இன்றும் இந்த மதிப்பீட்டின் படிதான் அளவிடப்படுகிறது. 1959-ல் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து பொதுச் சுகாதாரத்தில் அவர் பட்டம் பெற்றார். 1972-ல் ‘இஸ் மை பேபி ஆல் ரைட்?’ என்ற புத்தகத்தை ஜோன் பெக் என்ற எழுத்தாளருடன் இணைந்து எழுதியுள்ளார். 1972-ல் ஆகஸ்ட் 7 அன்று 65-ம் வயதில் அவர் மரணம் அடைந்தார். அப்காரின் 109-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமான டூடுலைக் கடந்த வியாழனன்று கூகுள் வெளியிட்டது.

10CHMMH_W360BHARKHAright

எண்ணமும் சொல்லும்: பேனாவை மிரட்டும் புள்ளிகள்

நான் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறேன். சக்தி வாய்ந்த சிலர் என்னை அச்சுறுத்துகின்றனர். எனது குடும்பம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மூத்த பத்திரிகையாளரான என்னைத் தடுத்து நிறுத்தவும், எனது செய்தியின் திட்டங்களைத் தடுக்கவும் சிலர் முயல்கிறார்கள். என்னையும் எனது திட்டங்களையும் தடுத்து நிறுத்துவது குறித்து ஆலோசிக்கிறார்கள். எனது செல்போன், வருமானவரி வழக்குகள், என் மீதான குற்றம் ஆகியவற்றை அவர்கள் கண்காணித்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோரிடம் புகார் அளித்துள்ளேன். சுதந்திர நாட்டில் இருக்கும் எனக்குப் பாதுகாப்பு மற்றும் உரிமை கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் செய்தி நிறுவனத்தில் வேலைபார்ப்பதைத் தடுப்பதற்கு அரசு துணை நின்றாலோ எனது வீடு மற்றும் தொலைபேசி கண்காணிக்கப்பட்டாலோ, அது சட்டவிரோதமானது. மேலும் மனித உரிமை மீறலாகும்.

- மூத்த பத்திரிகையாளரும் பத்திரிக்கை ஆசிரியருமான பர்கா தத்தின் டிவிட்டர் பதிவிலிருந்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x